Bible Versions
Bible Books

Isaiah 42 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 "என் தாசனைப் பாருங்கள்! அவரை நான் ஆதரிக்கிறேன். நான் தேர்ந்தெடுத்த ஒருவர் அவரே. நான் அவரை மிகவும் விரும்புகிறேன். அவரில் எனது ஆவியை வைக்கிறேன். அவர் நாடுகளுக்கு நியாயமாக நீதி வழங்குவார்.
2 அவர் தெருக்களில் உரக்க பேசமாட்டார். அவர் கூக்குரலிடவும்மாட்டார்.
3 அவர் சாந்த குணமுள்ளவர். அவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார். அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார். அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டுகொள்வார்.
4 உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை. ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து அவரது போதனைகளை நம்புவார்கள்".
5 உண்மையான தேவனாகிய கர்த்தர் இவற்றைச் சொன்னார். (கர்த்தர் வானங்களை உருவாக்கினார். கர்த்தர் பூமியின்மேல் வானத்தை விரித்தார். அவர் பூமியின்மேல் எல்லாவற்றையும் செய்தார். கர்த்தர் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் சுவாசத்தைக் கொடுக்கிறார். கர்த்தர் பூமியில் நடமாடுகிற ஒவ்வொரு மனிதருக்கும் ஆவியைக் கொடுக்கிறார்).
6 "கர்த்தராகிய நான், சரியானதைச் செய்ய உன்னை அழைத்தேன். நான் உன் கையைப் பற்றிக்கொள்வேன். நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் ஜனங்களோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை பிறருக்குக் காட்டுவதற்கு வெளிப்புற அடையாளமாக நீ இருப்பாய். அனைத்து ஜனங்களுக்கும் ஒளி வீசும் விளக்காக நீ இருப்பாய்.
7 குருடர்களின் கண்களை நீ திறப்பாய், அவர்களால் பார்வையைப் பெறமுடியும். சிறையில் இருக்கிறவர்களை நீ விடுவிப்பாய். பலர் இருளில் இருக்கிறார்கள். அவர்களை அந்தச் சிறையில் இருந்து வெளியே அழைத்து வருவாய்.
8 நானே கர்த்தர்! எனது நாமம் யேகோவா! நான் எனது மகிமையை வேறு ஒருவனுக்கும் கொடேன். நான் எனக்குரிய பாராட்டை சிலைகளுக்கு (பொய்த் தெய்வங்களுக்கு) கொடேன்.
9 தொடக்கத்தில் சில காரியம் நடைபெறும் என்று சொன்னேன். அவை நடந்தன. இப்போது, இது நடக்கும் முன்னால்! நான் சிலவற்றைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இவை எதிர்காலத்தில் நடைபெறும்.
10 ஒரு புதிய பாடலைக் கர்த்தருக்குப் பாடுங்கள். தொலைதூர நாடுகளில் உள்ள ஜனங்களே, கடலில் பயணம் செய்கிற ஜனங்களே, கடலில் உள்ள மிருகங்களே, தொலைதூர இடங்களில் உள்ள ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
11 வனாந்திரங்களே, நகரங்களே, கேதாரியரின் வயல்களே, கர்த்தரைத் துதியுங்கள். சீலோவில் வாழுகின்ற ஜனங்களே! மகிழ்ச்சியோடு பாடுங்கள். உங்கள் மலை உச்சியில் இருந்து பாடுங்கள்.
12 கர்த்தருக்கு மகிமையைக் கொடுங்கள். தொலை தூர நாடுகளில் உள்ள ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
13 கர்த்தர் ஒரு பலம் பொருந்திய வீரனைப் போல வெளியே போவார். அவர் போர் செய்யத் தயாராக உள்ள வீரனைப் போன்றிருப்பார். அவர் மிகுந்த கிளர்ச்சியுள்ளவராக இருப்பார். அவர் உரத்த குரலில் சத்தமிடுவார். அவரது பகைவரைத் தோற்கடிப்பார்.
14 "நீண்ட காலமாக நான் எதையும் சொல்லவில்லை. என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால், இப்போது நான் அலறுகிறேன், ஒரு பெண் பிள்ளை பெறும்போது கதறுவதுபோல, நான் கடினமாகவும் உரக்கவும் மூச்சுவிடுகிறேன்.
15 நான் மலைகளையும் குன்றுகளையும் அழிப்பேன். நான் அங்கே வளருகின்ற தாவரங்களை வாடச் செய்வேன். நான் ஆறுகளை வறண்ட நிலமாக்குவேன். நான் தண்ணீருள்ள குளங்களையும் வறளச் செய்வேன்.
16 பிறகு, நான் குருடர்களை அவர்கள் அதுவரை அறியாத வழிகளில் நடத்திச் செல்வேன். நான் குருடர்களை அவர்கள் அதுவரை சென்றிராத இடங்களுக்கு அழைத்துச் செல்வேன். நான் அவர்களுக்காக இருளை வெளிச்சமாக்குவேன். நான் கரடு முரடான பாதையை மென்மையாக்குவேன். நான் வாக்களித்ததைச் செய்வேன்! நான் எனது ஜனங்களை விட்டுவிடமாட்டேன்.
17 ஆனால், சிலர் என்னைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டார்கள். அவர்களிடம் பொன்னால் மூடப்பட்ட சிலைகள், இருக்கின்றன. ‘நீங்களே எங்கள் தெய்வங்கள்’ என்று அவர்கள் அந்தச் சிலைகளிடம் கூறுகின்றனர். அந்த ஜனங்கள் அவர்களது பொய்த் தெய்வங்களை நம்புகின்றனர். ஆனால் அந்த ஜனங்கள் ஏமாற்றப்படுவார்கள்.
18 செவிடர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்! குருடர்களே என்னைப் பாருங்கள், உங்களால் காணமுடியும்!
19 உலகத்தில் என் தாசனே மிகவும் குருடன். இந்த உலகத்திற்கு நான் அனுப்பிய தூதுவனே செவிடன். நான் உடன்படிக்கை செய்துக்கொண்ட ‘கர்த்தருடைய தாசனே’ மிகவும் குருடனாயிருக்கின்றான்.
20 எனது தாசன் அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காண்கின்றான். ஆனால் அவன் எனக்குக் கீழ்ப்படியவில்லை. அவன் தனது காதுகளால் கேட்க முடியும். ஆனால் அவன் நான் சொல்வதைக் கேட்க மறுக்கிறான்".
21 கர்த்தர் தமது தாசன் நல்லவனாக இருக்க விரும்புகிறார். கர்த்தர் தமது அற்புதமான போதனைகளை மகிமைப்படுத்த விரும்புகிறார்.
22 ஆனால் ஜனங்களைப் பாருங்கள். மற்ற ஜனங்கள் அவர்களைத் தோற்கடித்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பொருட்களைத் திருடியிருக்கிறார்கள். இளைஞர்களெல்லாம் பயப்படுகிறார்கள். அவர்கள் சிறைகளுக்குள் அடைப்பட்டிருக்கிறார்கள். ஜனங்கள் அவர்களிடமிருந்து பணத்தை எடுத்திருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற அங்கே எவருமில்லை. மற்ற ஜனங்கள் அவர்களின் பணத்தை எடுத்தார்கள். "அதனைத் திருப்பிக் கொடு" என்று சொல்ல அங்கே எவருமில்லை.
23 தேவனுடைய வார்த்தைகளை உங்களில் எவரும் கவனித்தீர்களா? இல்லை! ஆனால், நீங்கள் அவரது வார்த்தைகளை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். என்ன நடந்தது என்று சிந்திக்க வேண்டும்.
24 யாக்கோபு மற்றும் இஸ்ரவேலிடமிருந்து செல்வத்தை எடுத்துக்கொள்ள ஜனங்களை அனுமதித்தது யார்? கர்த்தர் அவர்களை அனுமதித்தார். நாம் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்தோம். எனவே கர்த்தர் நமது செல்வங்களை எடுத்துக்கொள்ளும்படி அனுமதித்துள்ளார். கர்த்தர் விரும்பிய வழியில் இஸ்ரவேல் ஜனங்கள் வாழவில்லை. அவரது போதனைகளையும் இஸ்ரவேல் ஜனங்கள் கவனிக்கவில்லை.
25 எனவே, கர்த்தர் அவர்கள்மீது கோபங்கொண்டார். கர்த்தர் அவர்களுக்கு எதிராக வலிமைமிக்கப் போர்களை உண்டாக்கினார். இஸ்ரவேல் ஜனங்களைச் சுற்றி நெருப்பு சூழ்ந்ததுபோல் இருந்தது. ஆனால் அவர்கள் நிகழ்வதை அறியாமல் இருந்தார்கள். அவர்கள் எரிந்துகொண்டிருப்பதுபோல் இருந்தனர். ஆனால் அவர்கள் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×