Bible Versions
Bible Books

Isaiah 49 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 தொலை தூர இடங்களில் வாழும் ஜனங்களே, என்னைக் கவனியுங்கள்! பூமியில் வாழும் ஜனங்களே, கவனியுங்கள்! நான் பிறப்பதற்கு முன்னரே கர்த்தர் தமக்குப் பணிபுரிய அழைத்தார். நான் என் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, கர்த்தர் என் பெயரைச் சொல்லி அழைத்தார்.
2 நான் அவருக்காகப் பேசும்படி கர்த்தர் என்னைப் பயன்படுத்துகிறார். அவர் என்னைக் கூர்மையான வாளைப்போன்று பயன்படுத்துகிறார். அவர் என்னைக் காப்பாற்றுகிறார். தமது கையில் மறைக்கிறார். கர்த்தர் என்னைக் கூர்மையான அம்பைப் போன்று பயன்படுத்துகிறார்.கர்த்தர் என்னை அம்பு பையில் மறைத்து வைக்கிறார்.
3 கர்த்தர் என்னிடம் சொன்னார், "இஸ்ரவேலே, நீ எனது தாசன். நான் உனக்கு அற்புதங்களைச் செய்வேன்."
4 நான் சொன்னேன், "நான் வீணாகக் கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன். நான் முழுவதுமாய் என்னை வெளிப்படுத்துகிறேன். ஆனால் பயனற்றவற்றையே செய்தேன். நான் எனது வல்லமை முழுவதையும் பயன்படுத்துகிறேன். ஆனால் உண்மையில் நான் எதையும் செய்யவில்லை. எனவே, என்னுடன் எதைச் செய்வது என கர்த்தர் முடிவு செய்ய வேண்டும். தேவன் எனது விருதினை முடிவுசெய்ய வேண்டும்.
5 என்னைக் கர்த்தர் என் தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினார். எனவே, நான் அவரது தாசனாக இருக்க முடியும். நான் யாக்கோபையும் இஸ்ரவேலையும் அவரிடம் திரும்ப அழைத்துச் செல்லமுடியும். கர்த்தர் என்னைக் கௌரவிப்பார். நான் எனது தேவனிடமிருந்து எனது பலத்தைப் பெறுவேன்," கர்த்தர் என்னிடம் சொன்னார்,
6 "நீ எனக்கு மிக முக்கியமான தாசன். யாக்கோபின் கோத்திரத்தை உயர்த்தி மீதியான இஸ்ரவேலை மீண்டும் நிலைநிறுத்துவாய். ஆனால், இந்த வேலை போதாது உனக்கு வேறு வேலை இருக்கிறது. அது இதைவிட மிகவும் முக்கியமானது. அனைத்து தேசங்களுக்காக நான் ஒரு ஒளியை ஏற்படுத்துவேன். பூமியில் உள்ள அனைத்து ஜனங்களையும் காக்க நீ எனது வழியில் இருப்பாய்."
7 கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர். இஸ்ரவேலைப் பாதுகாக்கிறவர் சொல்கிறார், "எனது தாசன் பணிவானவன். அவன் ஆள்வோர்களுக்குச் சேவை செய்கிறான் ஆனால், ஜனங்கள் அவனை வெறுக்கிறார்கள். ஆனால், அரசர்கள் அவனைப் பார்ப்பார்கள். அவனைப் பெருமைப்படுத்த எழுந்து நிற்பார்கள். பெருந்தலைவர்கள் அவனுக்குப் பணிவார்கள்;" இது நடைபெறும். ஏனென்றால் கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர் இதனை விரும்புகிறார். கர்த்தர் நம்பத்தக்கவர். உன்னைத் தேர்ந்தெடுத்தவர் அவரே.
8 கர்த்தர் கூறுகிறார், "எனது தயவைக் காட்டும் சிறப்பான நேரம் இருக்கிறது. அப்போது, நான் உனது ஜெபங்களுக்குப் பதில் தருவேன். நான் உன்னைக் காப்பாற்றும்போது அது சிறப்பான நாளாக இருக்கும். அந்த நேரத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன். நான் உன்னைப் பாதுகாப்பேன். எனக்கு ஜனங்களோடு ஒரு உடன்படிக்கை இருந்தது என்பதற்கு நீங்களே சாட்சியாக இருப்பீர்கள். இப்போது நாடு அழிக்கப்படுகிறது. ஆனால் தேசத்தை அதற்கு உரியவர்களிடம் நீ திருப்பிக் கொடுப்பாய்.
9 நீங்கள் சிறைக் கைதிகளிடம் கூறுவீர்கள், ‘சிறையை விட்டு வெளியே வாருங்கள்’ இருளில் இருக்கிற ஜனங்களுக்கு நீங்கள் சொல்வீர்கள், ‘இருளை விட்டு வெளியே வாருங்கள்’ ஜனங்கள் பயணம் செய்யும்போது சாப்பிடுவார்கள். காலியான குன்றுகளிலும் அவர்கள் உணவு வைத்திருப்பார்கள்.
10 ஜனங்கள் பசியுடன் இருக்கமாட்டார்கள். அவர்கள் தாகத்தோடு இருக்கமாட்டார்கள். வெப்பமான சூரியனும் காற்றும் அவர்களைப் பாதிக்காது. ஏனென்றால் தேவன் ஆறுதல் செய்கிறார்; தேவன் அவர்களை வழிநடத்துகிறார். அவர் அவர்களை நீரூற்றுகளின் அருகில் வழி நடத்திச்செல்வார்.
11 "நான் எனது ஜனங்களுக்காகச் சாலை அமைப்பேன். மலைகள் தரைமட்டமாக்கப்படும். தாழ்வான சாலைகள் உயர்த்தப்படும்.
12 "பாருங்கள்! வெகு தொலைவான இடங்களிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள். வடக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஜனங்கள் என்னிடம் வந்து கொண்டிருக்கிறார்கள். எகிப்தின் அஸ்வனிலிருந்து ஜனங்கள் என்னிடம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்."
13 வானங்களும் பூமியும் மகிழ்ச்சியோடு இருக் கட்டும். மலைகள் மகிழ்ச்சியோடு சத்தமிடட்டும். ஏனென்றால், கர்த்தர் தமது ஜனங்களை ஆறுதல் படுத்துகிறார். கர்த்தர் தமது ஏழை ஜனங்களிடம் நல்லவராக இருக்கிறார்.
14 ஆனால், இப்பொழுது சீயோன் கூறுகிறாள், "கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார். எனது ஆண்டவர் என்னை மறந்துவிட்டார்."
15 ஆனால் நான் சொல்கிறேன், "ஒரு பெண்ணால் தன் குழந்தையை மறக்கமுடியுமா? முடியாது! ஒரு பெண்ணால் தன் கர்ப்பத்திலிருந்து வந்த குழந்தையை மறக்கமுடியுமா? இல்லை! ஒரு பெண் ணால் தன் பிள்ளையை மறக்கமுடியாது! ஆனால் அவள் மறந்தாலும் நான் (கர்த்தர்) உன்னை மறக்கமுடியாது.
16 பார், நான் உனது பெயரை என் உள்ளங்கையில் செதுக்கி இருக்கிறேன். நான் எப்பொழுதும் உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்!
17 உனது பிள்ளைகள் உன்னிடம் திரும்பி வருவார்கள். ஜனங்கள் உன்னைத் தோற்கடித்தார்கள். ஆனால் அந்த ஜனங்கள் உன்னைத் தனியாகவிடுவார்கள்!"
18 மேலே பார்! உன்னைச் சுற்றிலும் பார்! உனது பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகக் கூடி உன்னிடம் வருகிறார்கள். "என் உயிர்மேல் வாக்குறுதியாக இதனைச் சொல்கிறேன் என்கிறார் கர்த்தர். உங்கள் பிள்ளைகள் நகைகளைப் போன்றவர்கள். அவர்களைக் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள். உங்கள் பிள்ளைகளை மணமகள் அணியத்தக்க கழுத்துப் பதக்கம் போன்று அணிந்துகொள்.
19 இப்பொழுது நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள்; அழிக்கப்படுகிறீர்கள், உங்கள் தேசம் பயனற்றது. ஆனால் கொஞ்சக் காலத்திற்குப் பிறகு, உன் நாட்டில் ஏராளமான ஜனங்கள் இருப்பார்கள். உங்களை அழித்த ஜனங்கள் வெகுதொலைவில் இருப்பார்கள்.
20 நீங்கள் இழந்துப்போன பிள்ளைகளுக்காக வருத்தப்பட்டீர்கள். ஆனால் அந்தப் பிள்ளைகள் உங்களிடம், ‘இந்த இடம் மிகவும் சிறிதாய் உள்ளது. நாங்கள் வாழ்வதற்கு ஒரு பெரிய இடத்தைக் கொடு’ என்று சொல்வார்கள்.
21 பிறகு நீ உனக்குள்ளேயே, "இந்தப் பிள்ளைகளையெல்லாம் எனக்கு யார் கொடுத்தது. இது மிகவும் நல்லது. நான் தனியாகவும் சோகமாகவும் இருக்கிறேன். நான் தோற்கடிக்கப்பட்டு என் ஜனங்களிடமிருந்து தொலைவில் உள்ளேன். எனவே, இந்த பிள்ளைகளை எனக்கு யார் கொடுத்தது? பார், நான் தனியாக விடப்பட்டுள்ளேன். இந்தப் பிள்ளைகள் எல்லோரும் எங்கிருந்து வந்தார்கள்?" என்று சொல்லிக்கொள்வாய்.
22 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார். "பார், நான் நாடுகளுக்கு என் கையை ஆட்டுகிறேன். எல்லா ஜனங்களும் பார்க்கும்படி நான் எனது கொடியை ஏற்றுவேன். பிறகு உனது பிள்ளைகளை உன்னிடம் அழைத்து வருவார்கள். அந்த ஜனங்கள் உங்கள் பிள்ளைகளைத் தம் தோள்களில் தூக்கிச் செல்வார்கள். அவர்கள் தம் கைகளில் பிடித்துக்கொள்வார்கள்.
23 அரசர் உன் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாக இருப்பார்கள். அரசகுமாரிகள் அவர்களைக் கவனித்துகொள்வார்கள். அந்த அரசர்களும் இளவரசிகளும் உங்களுக்குப் பணிவார்கள். அவர்கள் புழுதி படிந்த உங்கள் கால்களை முத்தமிடுவார்கள். பிறகு நான்தான் கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள். என்னை நம்புகிற எவனும் ஏமாற்றப்படமாட்டான் என்பதை நீங்கள் அறிவீர்கள்."
24 ஒரு பலமான வீரன் போரில் செல்வத்தை அபகரித்தால், அவனிடமிருந்து நீங்கள் அச்செல்வத்தைப் பெறமுடியாது. ஒரு வல்லமையுள்ள வீரன் ஒரு கைதியைக் காத்து நின்றால், அந்தக் கைதி அவனிடமிருந்து தப்பமுடியாது.
25 ஆனால் கர்த்தர் கூறுகிறார், "கைதிகள் தப்பித்துக்கொள்வார்கள் எவனோ ஒருவன், பலமான வீரனிடமிருந்து கைதிகளை மீட்டுச் செல்வான். இது எவ்வாறு நடக்கும்? உன்னோடு போராடுபவர்களோடு போராடுவேன் நான் பிள்ளைகளைக் காப்பாற்றுவேன்.
26 "அந்த ஜனங்கள் உன்னைக் காயப்படுத்துகிறார்கள். ஆனால், நான் அவர்கள் தமது சொந்த உடலையே உண்ணும்படி அவர்களை வற்புறுத்துவேன். அவர்களது சொந்த இரத்தமே அவர்கள் குடிக்கும் திராட்சைரசமாகும். பிறகு, கர்த்தர் உன்னைப் பாது காத்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அனைத்து ஜனங்களும், யாக்கோபின் வல்லமைமிக்கவர் உன்னைக் காப்பாற்றினார் என்பதை அறிவார்கள்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×