Bible Versions
Bible Books

Isaiah 58 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 உன்னால் முடிந்தவரை சத்தமிடு!நீயாக நிறுத்தாதே! எக்காளம் போன்று உரக்கச் சத்தமிடு!ஜனங்கள் செய்த தவறுகளைப்பற்றி அவர்களுக்குக் கூறு! யாக்கோபின் குடும்பத்திற்கு அவர்களின் பாவத்தைப்பற்றிக் கூறு!
2 பிறகு அவர்கள் என்னைத் தொழுதுகொள்ள ஒவ்வொரு நாளும் வருவார்கள். எனது வழிகளை அந்த ஜனங்கள் கற்றுக்கொள்ள விரும்புவார்கள். அவர்கள் நேர்மையாக வாழும் தேசமாவார்கள். தேவனுடைய நல்ல கட்டளைகளைப் பின்பற்றுவதை அவர்கள் விடமாட்டார்கள். அவர்களை நேர்மையாக நியாயந்தீர்க்குமாறு என்னைக் கேட்பார்கள். அவர்கள் தேவனிடம் அவர் கொடுக்கும் நேர்மையான முடிவுகளுக்காகப் போக விரும்புவார்கள்.
3 இப்போது, அந்த ஜனங்கள், "உமக்கு மரியாதை செலுத்துவதற்காக நாங்கள் சாப்பிடுவதை நிறுத்துகிறோம். எங்களை ஏன் பார்க்கவில்லை? நாங்கள் உமக்கு மரியாதை செலுத்த எங்கள் உடலைக் காயப்படுத்துகிறோம். நீர் "ஏன் எங்களைக் கண்டுகொள்ளவில்லை?" என்று கூறுகின்றனர். ஆனால் கர்த்தர் கூறுகிறார்: "நீங்கள் உங்களையே திருப்திப்படுத்திக்கொள்ள சிறப்பு நாட்களில் சாப்பிடாமல் இருக்கிறீர்கள். நீங்கள் சொந்த உடல்களை அல்ல, உங்கள் வேலைக்காரர்களையே தண்டிக்கிறீர்கள்.
4 நீங்கள் பசியோடு இருக்கிறீர்கள். ஆனால், உணவுக்காக அன்று. நீங்கள் வாதம் செய்யவும் சண்டை செய்யவும் பசியாய் இருக்கிறீர்கள், அப்பத்துக்காக அல்ல. உங்கள் தீய கைகளால் ஜனங்களை அடிக்கப் பசியாய் இருக்கிறீர்கள். நீங்கள் உணவு உண்டதை நிறுத்துவது, எனக்காக அல்ல. நீங்கள் உங்கள் குரலைப் பயன்படுத்தி என்னைத் துதிக்க விரும்புவதில்லை.
5 அந்தச் சிறப்பான நாட்களில் சாப்பிடாமல் இருந்து ஜனங்கள் தம் உடலை வருத்திக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?ஜனங்கள் சோகமாகத் தோற்றமளிப்பதை விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா?ஜனங்கள் வாடிய செடிகளைப்போன்று தலை குனிந்து துக்கத்துக்கான ஆடைகளை அணிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? ஜனங்கள் தம் துக்கத்தைக் காட்ட சாம்பலில் உட்கார்ந்திருப்பதை நான் விரும்புகிறேன் என்று நினைக்கிறீர்களா? இதையே உங்கள் சிறப்பான உபவாச நாட்களில் நீங்கள் செய்கிறீர்கள். கர்த்தர் இதைத்தான் விரும்புகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
6 "நான் விரும்புகின்ற சிறப்பான ஒரு நாளை உங்களுக்குச் சொல்வேன். ஜனங்களை விடுதலை பெறச்செய்யும் நாள். ஜனங்களின் சுமைகளை நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒரு நாளை நான் விரும்புகிறேன். துன்பப்படுகிற ஜனங்களை நீங்கள் விடுதலை செய்யும் நாளை சிறப்பானதாக விரும்புகிறேன். அவர்களின் தோள்களிலிருந்து சுமையை எடுத்துவிடும் ஒரு நாளை நான் விரும்புகிறேன்.
7 நீங்கள் உங்கள் உணவை பசித்தவர்களோடு பங்கிட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் வீடற்ற ஏழை ஜனங்களைக் கண்டு பிடித்து, அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து வருவதை நான் விரும்புகிறேன். ஆடையில்லாத ஒரு மனிதனை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் ஆடைகளை அவனுக்குக் கொடுங்கள். அவர்களுக்கு உதவாமல் ஒளிந்துகொள்ளாதீர்கள். அவர்கள் உங்களைப் போன்றவர்களே."
8 நீங்கள் இவற்றைச் செய்தால், உங்களது வெளிச்சம் விடியற்கால சூரியனைப்போன்று ஒளிவீசத் தொடங்கும். பிறகு, உங்கள் காயங்கள் குணமாகும். உங்கள் நன்மை (தேவன்) உங்களுக்கு முன்னால் நடந்து செல்லும். கர்த்தருடைய மகிமை உங்களைப் பின்தொடர்ந்துவரும்.
9 பிறகு நீங்கள் கர்த்தரை அழைப்பீர்கள். கர்த்தர் உங்களுக்குப் பதில் சொல்வார். நீ கர்த்தரிடம் சத்தமிடுவாய். அவர் ‘நான் இங்கே இருக்கிறேன்!’ என்பார். ஜனங்களுக்குத் துன்பங்களையும், சுமைகளையும் கொடுப்பதை நிறுத்தவேண்டும். நீங்கள் அநியாயமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், மற்றவர்களைக் குறைசொல்வதையும் நிறுத்த வேண்டும்.
10 பசியாயிருக்கிற ஜனங்களைப் பார்த்து நீ வருத்தப்படவேண்டும். அவர்களுக்கு உணவு தர வேண்டும். துன்பப்படுகிறவர்களுக்கு நீ உதவ வேண்டும். அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.அப்போது உனது வெளிச்சம் இருளில் பிரகாசிக்கும். உனக்கும் துக்கம் இருக்காது. நீ நண்பகலில் உள்ள சூரியனைப்போன்று பிரகாசமாக இருப்பாய்.
11 கர்த்தர் எப்பொழுதும் உன்னை வழிநடத்துவார். வறண்ட நிலங்களில் அவர் உனது ஆத்துமாவைத் திருப்திப்படுத்துவார். உனது எலும்புகளுக்குக் கர்த்தர் பெலன் தருவார். அதிகத் தண்ணீருள்ள தோட்டத்தைப்போன்று நீ இருப்பாய். எப்பொழுதும் தண்ணீருள்ள ஊற்றினைப்போன்று நீ இருப்பாய்.
12 உனது நகரங்கள் பல ஆண்டுகளுக்கு அழிக்கப்பட்டிருக்கும். ஆனால், புதிய நகரங்கள் கட்டப்படும். இந்நகரங்களின் அஸ்திபாரங்கள் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இருக்கும். நீ, "வேலிகளை கட்டுகிற ஒருவன்" என்று அழைக்கப்படுவாய். நீ, "சாலைகளையும் வீடுகளையும் கட்டுபவன்" என்றும் அழைக்கப்படுவாய்.
13 ஓய்வுநாளில் தேவனுடைய சட்டத்திற்கு எதிராகப் பாவம் செய்வதை எப்பொழுது நீ நிறுத்துகிறாயோ அப்போது இது நிகழும். அந்தச் சிறப்பு நாளில் உன்னை நீயே திருப்திபடுத்திக்கொள்ளும் செயல்கள் செய்வதை எப்பொழுது நிறுத்துவாயோ, அப்போது இது நடக்கும். ஓய்வுநாளை மகிழ்ச்சியான நாள் என்றும் நீ எண்ணவேண்டும். கர்த்தருடைய சிறப்பான நாளை நீ மகிமைப்படுத்த வேண்டும். மற்ற நாட்களில் நீ சொல்வதையும், செய்வதையும் அந்தச் சிறப்புநாளில் செய்யாமல் நீ அதனை மகிமைப்படுத்தவேண்டும்.
14 பின் நீ கர்த்தரை உன்னிடம் தயவாயிருக்குமாறு கேட்கலாம். அவர் உன்னைப் பூமிக்கு மேலுள்ள உயரமான இடங்களுக்கு எடுத்துச்செல்வார். உனது தந்தை யாக்கோபிற்குரிய அனைத்தையும் அவர் தருவார். கர்த்தர்தாமே இவற்றைச் சொன்னார். எனவே இவை நடக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×