Bible Versions
Bible Books

Isaiah 62 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 "சீயோனை நான் நேசிக்கிறேன். எனவே, நான் தொடர்ந்து அவளுக்காகப் பேசுவேன். எருசலேமை நான் நேசிக்கிறேன். எனவே, நான் பேசுவதை நிறுத்தமாட்டேன். பிரகாசமான வெளிச்சத்தைப் போன்று நன்மை ஒளிவீசும்வரை பேசுவேன். இரட்சிப்பானது சுவாலையைப்போன்று எரியும்வரை பேசுவேன்.
2 பிறகு, அனைத்து நாடுகளும் உன் நன்மையைப் பார்க்கும். அனைத்து அரசர்களும் உனது மகிமையைக் காண்பார்கள். பிறகு நீ புதிய பெயரைப் பெறுவாய். கர்த்தர் அவராகவே ஒரு புதிய பெயரைக் கொடுப்பார்.
3 கர்த்தர் உன்னைப்பற்றி மிகவும் பெருமை கொள்வார். நீ கர்த்தருடைய கையில் உள்ள அழகான கிரீடத்தைப்போல் இருப்பாய்.
4 "தேவனால் கைவிடப்பட்ட ஜனங்கள்" என்று மீண்டும் நீங்கள் அழைக்கப்படமாட்டீர்கள். "தேவன் அழித்த நாடு" என்று உனது நாடு மீண்டும் அழைக்கப்படாது. ‘தேவன் நேசிக்கும் ஜனங்கள்’ என்று நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ‘தேவனுடைய மணமகள்’ என்று உனது நாடு அழைக்கப்படும். ஏனென்றால், கர்த்தர் உன்னை நேசிக்கிறார். உனது நாடு அவருக்கு உரியதாகும்.
5 ஒரு இளைஞன் ஒரு பெண்ணை நேசிக்கும்போது அவளை மணக்கிறான். அவள் அவனது மனைவி ஆகிறாள். அதே வழியில் உனது நாடு உனது பிள்ளைகளுக்கு உரியதாகும். ஒருவன் தன் புதிய மனைவியோடு மிக மகிழ்ச்சியாய் இருப்பது போல உன் தேவன் உன்னோடு மகிழ்ச்சியாய் இருப்பார்."
6 "எருசலேமே! உனது மதில்களில் காவலர்களை (தீர்க்கதரிசிகள்) வைப்பேன். அந்தக் காவலர்கள் மௌனமாக இருக்கமாட்டார்கள்! அவர்கள் இரவும் பகலும் ஜெபம் செய்வார்கள்! காவலர்களே! நீங்கள் கர்த்தரிடம் ஜெபம் செய்யவேண்டும். அவரது வாக்குறுதியை நீ அவருக்கு நினைவுறுத்த வேண்டும். எப்பொழுதும் ஜெபத்தை நிறுத்தாதே.
7 அவர் எருசலேமை மாநகரமாகச் செய்து, பூமியில் உள்ள ஜனங்கள் எல்லாம் துதிக்கும் வரையில் கர்த்தரிடம் நீ ஜெபம் செய்யவேண்டும்.
8 கர்த்தர் ஒரு வாக்குறுதிச் செய்தார். கர்த்தர் தன் சொந்த வல்லமையைச் சான்றாகப் பயன்படுத்தினார். கர்த்தர் தன் வாக்குறுதியைக் காப்பாற்ற தனது வல்லமையைப் பயன்படுத்துவார். கர்த்தர் சொன்னார், "உங்கள் உணவை உங்கள் பகைவர்களுக்கு மீண்டும் கொடுக்கமாட்டேன் என்று வாக்களிக்கிறேன். நீங்கள் உருவாக்கிய திராட்சைரசத்தை உங்கள் பகைவர்கள் மீண்டும் எடுத்துக்கொள்ள விடமாட்டேன் என்று வாக்களிக்கிறேன்.
9 உணவைச் சேகரிக்கிறவன் அதனை உண்ணுவான் அவன் கர்த்தரைத் துதிப்பான். திராட்சையைச் சேகரிக்கிறவன் அந்தத் திராட்சையிலிருந்து ரசத்தைக் குடிப்பான், எனது பரிசுத்த தேசங்களில் இவை அனைத்தும் உண்மையில் நடக்கும்."
10 வாசல்கள் வழியாக வாருங்கள். ஜனங்களுக்காகப் பாதையைச் சுத்தப்படுத்துங்கள். சாலையைத் தயார் செய்யுங்கள். சாலையிலுள்ள கற்களை அப்புறப்படுத்துங்கள் ஜனங்களுக்கு அடையாளமாகக் கொடியை ஏற்றுங்கள்.
11 கவனியுங்கள்! தொலைதூர நாடுகளிலுள்ள ஜனங்களோடு கர்த்தர் பேசிக்கொண்டிருக்கிறார்." சீயோன் ஜனங்களிடம் கூறு: பார், உன் இரட்சகர் வருகிறார். அவர் உனக்குரிய விருதினைக் கொண்டு வருகிறார். அவர் அவரோடு அவ்விருதினைக் கொண்டு வருகிறார்."
12 "பரிசுத்தமான ஜனங்கள்"‘கர்த்தருடைய இரட்சிக்கப்பட்ட ஜனங்கள்’ என்று அவரது ஜனங்கள் அழைக்கப்படுவார்கள்: "தேவன் விரும்பும் நகரம்" "தேவனோடு இருக்கிற நகரம்" என்று எருசலேம் அழைக்கப்படும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×