Bible Versions
Bible Books

Job 37 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 "இடியும், மின்னலும் என்னை அச்சுறுத்துகின்றன. இதயம் என் நெஞ்சத்தில் துடிக்கிறது.
2 "ஒவ்வொருவரும் செவிகொடுங்கள்! தேவனுடைய சத்தம் இடியைப்போல முழங்குகிறது. தேவனுடைய வாயிலிருந்து வரும் இடியைப்போன்ற சத்தத்திற்குச் செவிகொடுங்கள்.
3 முழுவானத்திற்கும் குறுக்காக மின்னும்படி, தேவன் அவரது மின்னலை அனுப்புகிறார். அது பூமி ழுழுவதும் ஒளிர்ந்தது.
4 மின்னல் ஓளிவீசி மறைந்த பிறகு, தேவனுடைய முழங்கும் சத்தத்தைக் கேட்கமுடியும். தேவன் அவரது அற்புதமான சத்தத்தால் முழங்குகிறார்! மின்னல் மின்னும்போது, தேவனுடைய சத்தம் முழங்குகிறது.
5 தேவனுடைய முழங்கும் சத்தம் அற்புதமானது! நாம் புரிந்துகொள்ள முடியாத, மேன்மையான காரியங்களை அவர் செய்கிறார்.
6 தேவன் பனியிடம், ‘பூமியின் மேல் பெய்’ என்கிறார். மேலும் தேவன் மழையிடம், ‘பூமியின் மேல் பொழி’ என்கிறார்.
7 தேவன் உண்டாக்கின எல்லா மனிதர்களும் அவர் என்ன செய்யமுடியும் என்பதை அறியுமாறு தேவன் அதைச் செய்கிறார். அது அவரது சான்று.
8 மிருகங்கள் அவற்றின் குகைகளுக்குள் புகுந்து அங்கேயே தங்கும்.
9 தெற்கேயிருந்து சூறாவளி வரும். வடக்கேயிருந்து குளிர் காற்று வரும்.
10 தேவனுடைய மூச்சு பனிக்கட்டியை உண்டாக்கும், அது சமுத்திரங்களை உறையச் செய்யும்.
11 தேவன் மேகங்களை தண்ணீரினால் நிரப்புகிறார், அவர் இடிமேகங்களைச் சிதறடிக்கிறார்.
12 பூமியில் எங்கும் சிதறிப்போகும்படி தேவன் மேகங்களுக்குக் கட்டளையிடுகிறார். தேவன் கட்டளையிடுகின்றவற்றை மேகங்கள் செய்யும்.
13 பெருவெள்ளத்தை வரச்செய்து ஜனங்களைத் தண்டிக்கவோ, அல்லது வெள்ளத்தை வருவித்து அவரது அன்பை வெளிப்படுத்தவோ, தேவன் மேகங்களை உருவாக்குகிறார்.
14 "யோபுவே, ஒரு நிமிடம் நின்று கவனித்துக்கேள். தேவன் செய்கிற அற்புதமான காரியங்களைக் குறித்துச் சற்று நின்று எண்ணிப்பார்.
15 யோபுவே, தேவன் எவ்வாறு மேகங்களை அடக்கியாள்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? அவரது மின்னலை எவ்வாறு தேவன் ஒளிவிட வைக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா?
16 மேகங்கள் வானில் எவ்வாறு தொங்குகின்றன என்பது உனக்குத் தெரியுமா? தேவன் செய்த அற்புதமான காரியங்களுக்கு மேகங்கள் ஒரு எடுத்து காட்டு மட்டுமேயாகும்! அவற்றைப்பற்றிய யாவும் தேவனுக்குத் தெரியும்.
17 ஆனால் யோபுவே, உனக்கு இக்காரியங்கள் தெரியாது. நீ வியர்க்கிறாய் என்பதும், உன் ஆடைகள் உடம்பில் ஒட்டிக்கொள்கின்றன என்பதும், தெற்கிலிருந்து வெப்பமான காற்று வீசும்போது, எல்லாம் அசையாமல் இருக்கின்றன என்பது மட்டுமே உனக்குத் தெரியும்.
18 யோபுவே, வானைப் பரப்புவதற்கு நீ தேவனுக்கு உதவமுடியுமா? தேய்த்த பளபளப்பான கண்ணாடியைப்போல அது ஒளிரும்படி செய்யக் கூடுமா?
19 "யோபுவே, நாங்கள் தேவனுக்கு என்ன சொல்லவேண்டும் என்று கூறு! எங்களுக்குச் சரிவரத் தெரியாததால் சொல்வது குறித்து எண்ண இயலாமலிருக்கிறோம்.
20 நான் அவரிடம் பேசவேண்டும் என்று தேவனிடம் கூறமாட்டேன். அழிவு வேண்டும் என்று கேட்கமாட்டேன்.
21 ஒரு மனிதன் சூரியனை ஏறெடுத்துப் பார்க்க முடியாது. காற்று மேகங்களை அடித்துச் சென்றபின் அது வானில் மிகப் பிரகாசமாக ஒளி தருகிறது.
22 தேவனும் அவ்வாறே இருக்கிறார்! பரிசுத்த மலையிலிருந்து தேவனுடைய பொன்னான மகிமை பிரகாசிக்கிறது . தேவனைச் சுற்றிலும் பிரகாசமான ஒளி இருக்கிறது.
23 சர்வ வல்லமையுள்ள தேவன் மேன்மையானவர்! நாம் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது! தேவன் மிகுந்த வல்லமை உள்ளவர். ஆனால் அவர் நமக்கு நல்லவரும் நியாயமானவரும் ஆவார். தேவன் நம்மைத் துன்புறுத்த விரும்பமாட்டார்.
24 ஆகவேதான் ஜனங்கள் தேவனை மதிக்கிறார்கள். ஆனால் தங்களை ஞானிகளாக நினைக்கிற அகங்காரம் உள்ளவர்களை தேவன் மதிக்கமாட்டார்" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×