Bible Versions
Bible Books

Matthew 13 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 அன்றையத் தினமே இயேசு வீட்டை விட்டு வெளியில் சென்று ஏரிக்கரையில் அமர்ந்தார்.
2 ஏராளமான மக்கள் அவரைச் சூழ்ந்தனர். எனவே இயேசு ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் ஏரிக்கரையோரம் அமர்ந்தார்கள்.
3 பிறகு உவமைகளின் மூலமாக இயேசு மக்களுக்குப் பலவற்றையும் போதித்தார். இயேசு, "ஒரு விவ சாயி விதைகளை விதைக்கப் போனான்.
4 அவன் விதைகளைத் தூவியபோது, சில விதைகள் பாதையோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவை யாவற்றையும் தின்று விட்டன.
5 சில விதைகள் பாறைகளின் மேல் விழுந்தன. அங்கு போதுமான அளவிற்கு மண் இல்லை. எனவே, விதைகள் வேகமாக முளைத்தன.
6 ஆனால் சூரியன் உதித்ததும், அவை கருகிப் போயின. ஆழமான வேர்கள் இல்லாமையால் அச்செடிகள் காய்ந்தன.
7 இன்னும் சில விதைகள் முட்புதர்களுக்கிடையில் விழுந்தன. களைகள் முளைத்து அந்த விதைகளின் செடிகள் வளராதவாறு தடுத்தன.
8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அந்நிலத்தில், விதைகள் முளைத்து நன்கு வளர்ந்தன. சில செடிகள் நூறு மடங்கு தானியங்களைக் கொடுத்தன. சில அறுபது மடங்கும் சில முப்பது மடங்கும் தானியங்களைக் கொடுத்தன.
9 நான் சொல்வதைக் கேட்கிறவர்களே, கவனியுங்கள்" என்று இயேசு கூறினார்.
10 இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, "மக்களுக்குப் போதனை செய்ய நீங்கள் ஏன் இந்த உவமைகளைப் பயன்படுத்துகிறீர்கள்?" என்று கேட்டனர்.
11 இயேசு மறுமொழியாக, "பரலோக இராஜ்யத்தின் இரகசியங்களை நீங்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை மற்றவர்கள் அறிய முடியாது.
12 சிறிது புரிந்தவன் மேலும் விளக்கம் பெறுவான். தேவையானதை விடவும் அவனுக்கு அதிகம் கிடைக்கும். அதிகம் புரியாதவன், தான் அறிந்ததையும் இழப்பான்.
13 அதனால் தான் நான் மக்களுக்கு உவமைகளின் மூலம் போதனை செய்கிறேன். மக்கள் பார்க்கிறார்கள்; கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பார்ப்பதுமில்லை, புரிந்து கொள்வதுமில்லை.
14 எனவே ஏசாயா தீர்க்கதரிசி இவர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு சொன்னது உண்மை என்பதை இம்மக்கள் காட்டுகிறார்கள்: ‘மக்களே! நீங்கள் கவனித்து கேட்பீர்கள். ஆனாலும் புரிந்து கொள்ளமாட்டீர்கள். மக்களே! நீங்கள் நோக்கி பார்ப்பீர்கள். ஆனாலும், நீங்கள் பார்ப்பதைப் புரிந்து கொள்ளமாட்டீர்கள்.
15 ஆம். இறுகியிருக்கிறது இம்மக்களின் மனம். காதுகளிருந்தும் கேட்பதில்லை. உண்மையைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். தங்கள் காதால் கேளாதிருக்கவும் தங்கள் கண்ணால் பார்க்காதிருக்கவும் தங்கள் மனதால் அறியாதிருக்கவும் இவ்வாறு நடந்துள்ளது. குணம் பெற என்னிடம் வராதிருக்குமாறும் இவ்வாறு நடந்துள்ளது.’ ஏசாயா 6:9-10
16 "ஆனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கண்களால் பார்ப்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். காதால் கேட்பதைப் புரிந்து கொள்கிறீர்கள்.
17 நான் உண்மையைச் சொல்லுகிறேன், பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் நீங்கள் இப் பொழுது காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் காணவில்லை. நீங்கள் இப்பொழுது கேட்பவற்றைக் கேட்பதற்குப் பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் கேட்கவில்லை.
18 "எனவே, விவசாயியைப் பற்றிய உவமையின் பொருளைக் கவனியுங்கள்.
19 சாலையின் ஓரம் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது பரலோக இராஜ்யத்தைப் பற்றிக் கேள்வியுற்றும் அதைப் புரிந்து கொள்ளாத மனிதனைக் குறிக்கிறது. அவனது மனதில் விதைக்கப்பட்டவற்றைச் சாத்தான் கவர்ந்து கொள்கிறான்.
20 பாறைகளின் மேல் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டு உடனடியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதனைக் குறிக்கிறது.
21 அவன் போதனைகளைத் தன் மனதில் ஆழமாகப் பதிய வைத்துத் கொள்வதில்லை. அவன் போதனைகளைத் தன் மனதில் குறைந்த காலத்திற்கே வைத்திருக்கிறான். போதனைகளை ஏற்றுக்கொண்டதினால் உபத்திரவமோ, துன்பமோ ஏற்படும்பொழுது, அவன் விரைவாக அதை விட்டு விடுகிறான்.
22 முட்புதருக்கிடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையினால் போதனைகள் தன்னுள் நிலையாதிருக்கச் செய்பவனைக் குறிக்கிறது. எனவே, போதனைகள் அவன் வாழ்வில் பயன் விளைவிப்பதில்லை.
23 ஆனால், நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அவ்விதை போதனைகளைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் நூறு மடங்கும் சில சமயம் அறுபது மடங்கும் சில சமயம் முப்பது மடங்கும் பலன் தருகிறான்" என்றார்.
24 பிறகு, இயேசு மற்றொரு உவமையின் மூலம் போதனை செய்தார். "பரலோக இராஜ்யம் தனது வயலில் நல்ல விதையை விதைத்த மனிதனைப் போன்றது.
25 அன்றைக்கு இரவில், அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவனது பகைவன் வந்து கோதுமை விதைகளுக்கிடையில் களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான்.
26 பிறகு, கோதுமை விதைகள் முளைவிட்டன. செடிகள் முளைத்தன. ஆனால், அதே சமயம் களைகளும் முளைத்தன.
27 அவனது வேலைக்காரர்கள் அவனிடம் சென்று, ‘நல்ல விதைகளையே நீங்கள் உங்கள் வயலில் விதைத்தீர்கள். ஆனால், களைகள் எங்கிருந்து வந்தன?’ என்று கேட்டார்கள்.
28 அதற்கு அவன், ‘ஒரு பகைவன் களைகளை விதைத்துவிட்டான்’ என்றான். வேலைக்காரர்கள், ‘நாங்கள் களைகளை நீக்க வேண்டுமா?’ என்று கேட்டார்கள்.
29 "அதற்கு அந்த விவசாயி, ‘தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் களையெடுக்கும்பொழுது கோதுமை செடிகளையும் பிடுங்குவீர்கள்.
30 களைகளும் கோதுமையும் அறுவடைக் காலம்வரையிலும் ஒன்றாக வளரட்டும். அறுவடையின்பொழுது அறுவடை செய்பவர்களிடம் நான், ‘முதலில் களைகளைத் தீயிலிடுவதற்காகச் சேர்த்துக் கட்டுங்கள், பின்னர் கோதுமையைச் சேகரித்து என் களஞ்சியத்திற்குக் கொண்டு வாருங்கள் என்று சொல்வேன்’ எனப் பதில் சொன்னான் என்று இயேசு கூறினார்.
31 பிறகு இயேசு மக்களுக்கு வேறொரு உவமையைக் கூறினார். "பரலோக இராஜ்யமானது கடுகைப் போன்றது. ஒருவன் தன் வயலில் கடுகு விதையை விதைக்கிறான்.
32 விதைகளிலெல்லாம் மிகச் சிறியது கடுகு. ஆனால், அது முளைக்கும்பொழுது மிகப் பெரிய செடிகளில் ஒன்றாக வளர்கிறது. அது மரமாக வளர்ந்து பறவைகள் அதன் கிளைகளில் கூடு கட்டுகின்றன" என்றார்.
33 இயேசு மக்களுக்கு மேலும் ஒரு உவமையைக் கூறினார். "பரலோக இராஜ்யமானது ஒரு பெண் மாவுடன் கலக்கும் புளித்த பழைய மாவைப் போன்றது. புளித்த மாவானது அனைத்து மாவையும் புளிக்க வைக்கிறது" என்றார்.
34 இவை அனைத்தையும் மக்களுக்குப் போதிப்பதற்காக இயேசு உவமைகளைக் கையாண்டார். எப்பொழுதும் மக்களுக்குப் போதனை செய்ய இயேசு உவமைகளையேக் கையாண்டார்.
35 இது தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னபடியே நடந்தது, "நான் உவமைகளின் வழியாகப் பேசுவேன், உலகம் வந்தது முதல் இரகசியமாயுள்ளவற்றை நான் சொல்வேன்" சங்கீதம் 78:2
36 இயேசு மக்களை விட்டு வீட்டிற்குள் சென்றார். அவரது சீஷர்கள் அவரிடம் வந்து, "வயலில் முளைத்த களையின் உவமை கூறும் உண்மைப் பொருளை எங்களுக்கு விளக்கும்" என்று கேட்டனர்.
37 இயேசு மறுமொழியாக, "நல்ல விதைகளை வயலில் விதைத்தவன் மனித குமாரன் தான்.
38 இவ்வுலகமே வயல். நல்ல விதைகள் பரலோகத்திற்குரிய நல்ல பிள்ளைகள். களைகள் பிசாசின் பிள்ளைகள்.
39 பிசாசே களைகளை விதைத்தப் பகைவன். உலகின் முடிவுக் காலமே அறுவடைக் காலம். தேவதூதர்களே அறுவடை செய்பவர்கள்.
40 "களைகள் பிடுங்கப்பட்டு தீயிலிடப்படுகின்றன. உலகின் முடிவுக் காலத்திலும் அப்படியே இருக்கும்.
41 மனித குமாரன் தனது தேவதூதர்களை அனுப்புவார். அவரது தூதர்கள் பாவம் செய்கிறவர்களைக் கண்டு பிடிப்பார்கள். அத்தூதர்கள் அவர்களை மனிதகுமாரனின் இராஜ்யத்திலிருந்து வெளியேற்றுவார்கள்.
42 அவர்களை அத்தேவ தூதர்கள் சூளையின் நெருப்பில் தள்ளுவார்கள். அங்கு அவர்கள் வேதனையால் கூக்குரலிடுவார்கள்; தங்கள் பற்களைக் கடிப்பார்கள்.
43 நல்ல மனிதர்கள் சூரியனைப் போல ஒளி வீசுவார்கள். அவர்கள் பிதாவின் அரசாட்சியில் இருப்பார்கள். என் வார்த்தைகளைக் கேட்பவர்களே, இதை கவனித்துக் கொள்ளுங்கள்.
44 "பரலோக இராஜ்யம் புதைத்து வைக்கப்பட்ட செல்வத்தைப் போன்றது. புதைத்து வைக்கப்பட்ட செல்வத்தை ஒருவன் ஒருநாள் கண்டு பிடித்தான். புதையல் கிடைத்ததால் அவன் மிக மகிழ்ந்தான். மீண்டும் அவன் அச்செல்வத்தைப் புதைத்து வைத்து அந்த நிலத்தை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்றான்.
45 மேலும், பரலோக இராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடும் வியாபாரியைப் போன்றது.
46 ஒரு நாள் அவ்வியாபாரி மிகச் சிறந்த முத்து ஒன்றைக் கண்டான். அம்முத்தை வாங்குவதற்காகத் தன்னிடமிருந்த அனைத்தையும் அந்த வியாபாரி விற்றான்.
47 "பரலோக இராஜ்யம் ஏரியில் விரிக்கப்பட்ட வலையைப் போன்றது, ஏரியில் விரிக்கப்பட்ட ஒரு வலை, பலவகையான மீன்களைப் பிடித்தது.
48 நிரம்பிய வலையை, மீனவர்கள் கரைக்கு இழுத்தனர். நல்ல மீன்களை மீனவர்கள் ஒரு கூடையிலிட்டனர். பின், தகுதியற்ற மீன்களைத் தூர எறிந்தனர்.
49 இவ்வுலகின் முடிவுக் காலத்திலும் அவ்வாறே நடக்கும். தேவதூதர்கள் வந்து நல்ல மனிதர்களைத் தீயவர்களிடமிருந்து பிரிப்பார்கள்.
50 அந்தத் தேவதூதர்கள் தீயவர்களைச் சூளையின் நெருப்பில் எறிவார்கள் அங்கு அவர்கள் வலியினால் கூக்குரலிட்டுப் பற்களைக் கடிப்பார்கள்."
51 பிறகு, இயேசு தம் சீஷர்களிடம், "உங்களுக்கு இவைகள் புரிகின்றனவா?" என்று கேட்டார். சீஷர்கள், "ஆம், எங்களுக்குப் புரிகின்றன" என்று பதிலுரைத்தனர்.
52 பின்பு இயேசு தம் சீஷர்களிடம், "பரலோக இராஜ்யத்தைப்பற்றி அறிந்த வேதபாரகர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீட்டின் சொந்தக்காரனைப் போன்றவர்கள். வீட்டின் சொந்தக்காரன் தன் வீட்டில் புதியதும் பழையதுமான பொருட்களைச் சேமித்து வைத்திருக்கிறான். அவன் புதியதும் பழையதுமான பொருட்களைக் கொண்டு வருகிறான்" என்றார்.
53 இந்த உவமைகளைக் கூறி முடித்த இயேசு, அவ்விடத்தை விட்டு அகன்று,
54 தாம் வளர்ந்த நகருக்குச் சென்றார். ஜெப ஆலயங்களில் இயேசு மக்களுக்குப் போதித்தார். மக்கள் வியப்புற்று "இம்மனிதன் இந்த ஞானத்தையும் அற்புதங்கள் செய்யும் வல்லமையையும் எங்கிருந்து பெற்றான்?
55 தச்சுத் தொழிலாளியின் மகன்தானே இவன். இவன் தாய் மரியாள். யாக்கோபு, யோசே, சீமோன் மற்றும் யூதா ஆகியோர் இவன் சகோதரர்கள்.
56 இவனது எல்லா சகோதரிகளும் நம்முடன் உள்ளார்கள். அப்படியிருந்தும், இந்த ஞானத்தையும் அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமையையும் இம்மனிதன் எங்கிருந்து பெற்றானோ?" என்று பேசிக்கொண்டார்கள்.
57 அது மட்டுமின்றி, இயேசுவை ஏற்றுக் கொள்ள மக்கள் மறுத்தனர். "மற்றவர்கள் ஒரு தீர்க்கதரிசிக்கு மதிப்பு கொடுக்கிறார்கள். ஆனால், அத்தீர்க்கதரிசியின் சொந்த நகரத்து மக்களே அவனுக்கு மதிப்பு கொடுக்க மறுக்கிறார்கள்" என்று இயேசு அம்மக்களுக்குச் சொன்னார்.
58 அம்மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைக்கவில்லை. எனவே, இயேசு மேலும் பல அற்புதங்களை அங்கு நடத்தவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×