Bible Versions
Bible Books

Nahum 2 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 ஒரு பகைவன் உன்னைத் தாக்க வந்துகொண்டிருக்கிறான். எனவே உன் நகரத்தின் வலிமையான பகுதிகளைக் காவல் செய். சாலைகளைக் காவல் காத்திடு. போருக்குத் தயாராக இரு. யுத்தத்திற்கான ஏற்பாடுகளைச் செய்.
2 ஆம், கர்த்தர் யாக்கோபின் மகிமையை மாற்றினார். இது இஸ்ரவேலரின் மகிமை போன்றிருக்கும். பகைவன் அவற்றை அழித்தான். அவர்களின் திராட்சைக் கொடிகளை அழித்தான்.
3 அவ்வீரர்களின் கேடயங்கள் சிவந்திருக்கிறது. அவர்களின் சீருடைகள் பிரகாசமான சிவப்பாக உள்ளது. அவர்களின் இரதங்கள் போருக்கு வரிசையாக உள்ளன, நெருப்பின் ஜூவாலையைப் போன்று மின்னுகின்றன. அவர்களின் குதிரைகள் போவதற்கு தயாராக உள்ளன.
4 அவர்களின் இரதங்கள் தெருக்களில் போட்டியிட்டு ஓடுகின்றன. தெருக்களின் இடது சாரியாகவும் வலதுசாரியாகவும் ஓடுகின்றன. அவை எரியும் பந்தங்களைப் போன்றும், அங்குமிங்கும் மின்னும் மின்னலைப் போலவும் காணப்படுகின்றன.
5 விரோதி தனது சிறந்த வீரர்களை அழைக்கிறான். ஆனால் அவர்கள் மதிற்சுவரை நோக்கி ஓடி, அங்குள்ள சுவர்களைத் தகர்க்கும் கருவியின்மேல் அவர்களின் கேடயத்தை நிறுவுகிறார்கள்.
6 ஆனால் ஆற்றின் மதகுகள் திறக்கப்படுகின்றன. எதிரிகள் அவ்வழியாக வந்து அரசனின் வீட்டை அழிக்கிறார்கள்.
7 பகைவர்கள் ராணியைப் பிடித்துச் செல்வார்கள். அவளது அடிமைப்பெண்கள் புறாக்களைப் போன்று துக்கத்துடன் அழுவார்கள். அவர்கள் தம் மார்பில் அடித்துக்கொண்டு தமது துக்கத்தைக் காட்டுவார்கள்.
8 நினிவே, தண்ணீர் வற்றிப்போன குளத்தைப்போன்று இருக்கிறது. ஜனங்கள், "நிறுத்துங்கள்! ஒடுவதை நிறுத்துங்கள்! என்று சொன்னார்கள். ஆனால் அது பயன் தரவில்லை.
9 நினிவேயை அழிக்கப்போகும் வீரர்களாகிய நீங்கள், வெள்ளியை எடுங்கள்! தங்கத்தை எடுங்கள்! அங்கே எடுப்பதற்கு ஏராளமாக உள்ளன. அங்கே ஏரளமான கருவூலங்கள் உள்ளன.
10 இப்பொழுது, நினிவே காலியாக இருக்கிறது. எல்லாம் திருடப்பட்டன. நகரம் அழிக்கப்பட்டது. ஜனங்கள் தங்கள் தைரியத்தை இழந்தனர். அவர்களது இதயங்கள் அச்சத்தால் உருகின. அவர்களது முழங்கால்கள் ஒன்றோடொன்று இடித்துக்கொண்டன, அவர்களது உடல்கள் நடுங்குகின்றன, அவர்களது முகங்கள் அச்சத்தால் வெளுத்தன.
11 இப்பொழுது சிங்கத்தின் குகை (நினிவே) எங்கே? ஆண்சிங்கமும் பெண்சிங்கமும் அங்கே வாழ்ந்தன. அவற்றின் குட்டிகள் அஞ்சவில்லை.
12 சிங்கமானது (நினிவேயின் அரசன்) தனது குட்டிகளுக்கும் பெண்சிங்கத்திற்கும் உணவு கொடுப்பதற்காக ஏராளமான ஜனங்களைக் கொன்று அழித்தது. அது தனது குகையை (நினிவே) ஆண்களின் உடல்களால் நிறைத்தது. அது தான் கொன்ற பெண்களின் உடல்களால் குகையை நிறைத்தது.
13 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: "நினிவே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன். நான் உனது இரதங்களை எரிப்பேன். நான் உனது ‘இளஞ்சிங்கங்களைப்’ போரில் கொல்வேன். நீ இந்த பூமியில் மீண்டும் எவரையும் வேட்டையாடமாட்டாய். ஜனங்கள் உனது தூதுவர்களிடமிருந்து மீண்டும் கெட்ட செய்திகளைக் கேட்கமாட்டார்கள்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×