Bible Versions
Bible Books

2 Kings 13 (IRVTA) Indian Revised Version - Tamil

1 {இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாஸ்} PS அகசியா என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய யோவாசுடைய இருபத்துமூன்றாம் வருட ஆட்சியில் யெகூவின் மகனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே பதினேழுவருடங்கள் அரசாட்சிசெய்து,
2 யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றி நடந்தான்; அவைகளைவிட்டு அவன் விலகவில்லை.
3 ஆகையால் யெகோவாவுக்கு இஸ்ரவேலர்களின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் மகனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.
4 யோவாகாஸ் யெகோவாவுடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: யெகோவா அவனுக்குச் செவிகொடுத்தார்.
5 யெகோவா இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததால், அவர்கள் சீரியருடைய ஆளுகையின்கீழிருந்து விடுதலையானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் மக்கள் முன்புபோல தங்களுடைய கூடாரங்களிலே குடியிருந்தார்கள்.
6 ஆகிலும் இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த யெரொபெயாம் வீட்டாரின் பாவங்களை அவர்கள்விட்டு விலகாமல் அதிலே நடந்தார்கள்; சமாரியாவிலிருந்த விக்கிரகத்தோப்பும் நிலைத்திருந்தது.
7 யோவாகாசுக்குச் சீரியாவின் ராஜா, ஐம்பது குதிரைவீரர்களையும், பத்து இரதங்களையும், பத்தாயிரம் காலாட்களையுமே அல்லாமல், மக்களில் வேறொன்றும் மீதியாக வைக்கவில்லை; அவன் அவர்களை அழித்து, போரடிக்கும்இடத்தின் தூளைப்போல ஆக்கிவிட்டான்.
8 யோவாகாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
9 யோவாகாஸ் இறந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோவாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான். PS
10 {இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ்} PS யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருட ஆட்சியில் யோவாகாசின் மகனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பதினாறுவருடங்கள் அரசாட்சிசெய்து,
11 யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளையெல்லாம் செய்தான்.
12 யோவாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் போர்செய்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
13 யோவாஸ் இறந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான்.
14 அவனுடைய நாட்களில் எலிசா மரணத்திற்கு ஏதுவான வியாதியாகக் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்திற்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.
15 எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.
16 அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து:
17 கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எலிசா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது யெகோவாவுடைய ரட்சிப்பின் அம்பும், சீரியர்களிடமிருந்து விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமாக இருக்கிறது; நீர் ஆப்பெக்கிலே சீரியர்களை முற்றிலும் முறியடிப்பீர் என்றான்.
18 பின்பு அம்புகளைப் பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்றுமுறை அடித்து நின்றான்.
19 அப்பொழுது தேவனுடைய மனிதன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுமுறை அடித்தீரானால், அப்பொழுது சீரியர்களை முற்றிலும் முறியடிப்பீர்; இப்பொழுதோ சீரியர்களை மூன்றுமுறை மாத்திரம் முறியடிப்பீர் என்றான்.
20 எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்செய்தார்கள்; மறுவருடத்திலே மோவாபியரின் கூட்டம் தேசத்திலே வந்தது.
21 அப்பொழுது அவர்கள், ஒரு மனிதனை அடக்கம் செய்யப்போகும்போது, அந்தக் கூட்டத்தைக் கண்டு, அந்த மனிதனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனிதனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனிதன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
22 யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்.
23 ஆனாலும் யெகோவா அவர்களுக்கு மனமிரங்கி, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்க விருப்பமில்லாமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார்.
24 சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் மரணமடைந்து, அவன் மகனாகிய பெனாதாத் அவனுடைய இடத்திலே ராஜாவான பின்பு,
25 யோவாகாசின் மகனாகிய யோவாஸ், ஆசகேலோடே போர்செய்து, தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக்கொண்ட பட்டணங்களை அவனுடைய மகனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்துக்கொண்டான்; மூன்றுமுறை யோவாஸ் அவனை முறியடித்து இஸ்ரவேலின் பட்டணங்களைத் திரும்பக் கட்டிக்கொண்டான். PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×