Bible Versions
Bible Books

Job 40 (IRVTA) Indian Revised Version - Tamil

1 பின்னும் யெகோவா யோபுக்கு பதிலாக:
2 “சர்வவல்லமையுள்ள தேவனுடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்?
தேவன் பேரில் குற்றம் கண்டுபிடிக்கிறவன் இவைகளுக்குப் பதில் சொல்லட்டும் என்றார்.
3 அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக:
4 இதோ, நான் எளியவன்;
நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்;
என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
5 நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
6 அப்பொழுது யெகோவா பெருங்காற்றில் இருந்து யோபுக்கு பதில் சொன்னார்.
7 இப்போதும் மனிதனைப்போல நீ ஆடையைக்கட்டிக்கொள்;
நான் உன்னைக் கேட்பேன்;
நீ எனக்கு பதில் சொல்.
8 நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ?
நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
9 தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ?
அவரைப்போல இடிமுழக்கமாகச் சத்தமிடமுடியுமோ?
10 இப்போதும் நீ முக்கியத்துவத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து,
மகிமையையும் கனத்தையும் அணிந்துகொண்டு,
11 நீ உன் கோபத்தின் கடுமையை வீசி,
அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு,
12 பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து,
அவனைப் பணியவைத்து,
துன்மார்க்கரை அவர்கள் இருக்கிற இடத்திலே மிதித்துவிடு.
13 நீ அவர்களை ஏகமாகப் புழுதியிலே புதைத்து,
அவர்கள் முகங்களை மறைவான இடத்திலே கட்டிப்போடு.
14 அப்பொழுது உன் வலதுகை உனக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்று சொல்லி
நான் உன்னைப் புகழுவேன்.
15 இப்போதும் பிகெமோத்தை * யானையை போன்ற பெரிய மிருகம் நீ கவனித்துப்பார்;
உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்;
அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
16 இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும்,
அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
17 அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது;
அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
18 அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும்,
அதின் கால்கள் இரும்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
19 அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு,
அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
20 காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
21 அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும்,
சேற்றிலும் படுத்துக்கொள்ளும்.
22 தழைகளின் நிழல் அதை மூடி, நதியின் தண்ணீர்கள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.
23 இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது;
யோர்தான் நதியளவு தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
24 அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்?
மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தமுடியும்? PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×