Bible Versions
Bible Books

Isaiah 66 (IRVTA) Indian Revised Version - Tamil

1 {நியாயத்தீர்ப்பும் நம்பிக்கையும்} PS யெகோவா சொல்கிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் இடம் எப்படிப்பட்டது?
2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் படைத்ததினால் இவைகளெல்லாம் உண்டானது என்று யெகோவா சொல்கிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
3 மாட்டை வெட்டுகிறவன் மனிதனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் சிலையை போற்றுகிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.
4 நான் கூப்பிட்டும் மறுமொழி கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினால், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரச்செய்வேன்.
5 யெகோவாவுடைய வசனத்திற்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர்கள், யெகோவா மகிமைப்படுவாராக என்கிறார்களே; அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாக காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.
6 நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது எதிரிகளுக்கு பாடம்கற்பிக்கிற யெகோவாவுடைய சத்தந்தானே.
7 பிரசவவேதனைப்படுவதற்குமுன் பெற்றெடுத்தாள், கர்ப்பவேதனை வருவதற்குமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.
8 இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்திற்கு ஒரே நாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு தேசம் ஒரே சமயத்தில் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒரே சமயத்தில் வேதனைப்பட்டும், தன் மகன்களைப் பெற்றும் இருக்கிறது.
9 பெறச்செய்கிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று யெகோவா சொல்கிறார்; பிரசவிக்கச்செய்கிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்கிறார்.
10 எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லோரும் அவளுடன் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவளுக்காக துக்கித்திருந்த நீங்களெல்லோரும் அவளுடன் மிகவும் மகிழுங்கள்.
11 நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்;
12 யெகோவா சொல்கிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், தேசங்களின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.
13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
14 நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப்போலச் செழிக்கும்; அப்பொழுது யெகோவாவுடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய எதிரிகளிடத்தில் அவருடைய கோபமும் தெரியவரும்.
15 இதோ, தம்முடைய கோபத்தை கடுங்கோபமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை நெருப்புத்தழலாகவும் செலுத்தக் யெகோவா அக்கினியுடனும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களுடனும் வருவார்.
16 யெகோவா அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லோருடனும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலைசெய்யப்பட்டவர்கள் அநேகராயிருப்பார்கள்.
17 தங்களைத்தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர்பின் ஒருவராகச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் முழுவதுமாக அழிக்கப்படுவார்கள் என்று யெகோவா சொல்கிறார்.
18 நான் அவர்களுடைய செயல்களையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் எல்லா தேசத்தாரையும் பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களையுங் ஒன்றாகச் சேர்க்கும்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்.
19 நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் புகழ்ச்சியைக் கேளாமலும், என் மகிமையைக் காணாமலுமிருக்கிற மக்களின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும், வில்வீரர்கள் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை தேசங்களுக்குள்ளே அறிவிப்பார்கள்.
20 இஸ்ரவேல் மக்கள் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரர் எல்லோரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், சரக்கு வண்டிகளின்மேலும், கோவேறு கழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல தேசங்களிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள யெகோவாவுக்குக் காணிக்கையாக என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவருவார்கள் என்று யெகோவா சொல்கிறார்.
21 அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று யெகோவா சொல்கிறார்.
22 நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் பெயரும் நிற்குமென்று யெகோவா சொல்கிறார்.
23 அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான அனைவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று யெகோவா சொல்கிறார்.
24 அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாகப் பாதகம்செய்த மனிதர்களுடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய நெருப்பு அணையாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான அனைவருக்கும் அருவருப்பாயிருப்பார்கள். PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×