Bible Versions
Bible Books

Esther 5 (IRVTA) Indian Revised Version - Tamil

1 {ராஜாவிடம் எஸ்தரின் வேண்டுதல்} PS மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜஉடை அணிந்துகொண்டு, ராஜ அரண்மனையின் உள்முற்றத்தில், ராஜா இருக்கும் இடத்திற்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரண்மனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் சிங்காசனத்திலே அமர்ந்திருந்தான்.
2 ராஜா ராணியாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவனுடைய கண்களில் தயவு கிடைத்ததால், ராஜா தன்னுடைய கையிலிருக்கிற பொற் செங்கோலை எஸ்தரிடம் நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் அருகே வந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
3 ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராணியே, உனக்கு என்ன வேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான்.
4 அப்பொழுது எஸ்தர்: ராஜாவிற்கு விருப்பமானால், நான் தங்களுக்குச் செய்த விருந்திற்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள்.
5 அப்பொழுது ராஜா எஸ்தர் சொன்னபடியே செய்ய, ஆமானை விரைவாக வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்திற்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.
6 விருந்திலே திராட்சைரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரைப் பார்த்து: உன்னுடைய வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்ஜியத்தில் பாதியைக் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.
7 அதற்கு எஸ்தர் மறுமொழியாக:
8 ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, என்னுடைய வேண்டுதலைக் கட்டளையிடவும், என்னுடைய விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவிற்குச் விருப்பமாக இருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்திற்கு வரவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுதலும் என்னுடைய விண்ணப்பமுமாக இருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள். PS
9 {மொர்தெகாய்க்கு எதிராக ஆமானின் கடுங்கோபம்} PS அன்றையதினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுடனும் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரண்மனை வாசலில் இருக்கிற மொர்தெகாய் தனக்கு முன்பு எழுந்திருக்காமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் கடுங்கோபம் அடைந்தவனானான்.
10 ஆனாலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன்னுடைய வீட்டிற்கு வந்து, தன்னுடைய நண்பர்களையும் தன்னுடைய மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,
11 தன்னுடைய ஐசுவரியத்தின் மகிமையையும், தன்னுடைய பிள்ளைகளின் எண்ணிக்கையையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் வேலைக்காரர்கள்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.
12 பின்னும் ஆமான்: ராணியாகிய எஸ்தரும் தான் செய்த விருந்திற்கு ராஜாவுடன் என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடன் நான் விருந்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன்.
13 ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணும்போது அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லை என்றான்.
14 அப்பொழுது அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனுடைய நண்பர்கள் எல்லோரும் அவனைப் பார்த்து: ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவிற்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாக ராஜாவுடன் விருந்திற்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாகத் தெரிந்ததால் தூக்குமரத்தைச் செய்தான். PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×