Bible Versions
Bible Books

Jeremiah 27 (IRVTA) Indian Revised Version - Tamil

1 {யூதா நேபுகாத்நேச்சாரைப் பணியவேண்டும்} PS யோசியாவின் மகனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீ * சிதேக்கியா முடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்தில் யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
2 யெகோவா என்னை நோக்கி: நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டாக்கி, அவைகளை உன் கழுத்தில் சுற்றிக்கொண்டு,
3 அவைகளை எருசலேமுக்கு சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் பிரதிநிதிகள் கையில் ஏதோமின் ராஜாவுக்கும், மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் மக்களின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பி,
4 அவர்கள் தங்கள் எஜமான்களுக்குச் சொல்லும்படிக் கற்பிக்கவேண்டுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்,
5 நான் பூமியையும் மனிதனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் கரத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு விருப்பமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.
6 இப்பொழுதும் நான் இந்த தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையில் கொடுத்தேன்; அவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு வெளியின் மிருகஜீவன்களையும் கொடுத்தேன்.
7 அவனுடைய தேசத்திற்குக் காலம் வருகிறவரையில் எல்லா மக்களும் அவனையும் அவனுடைய மகனையும் பேரனையும் சேவிப்பார்கள்; அதின்பின்பு அநேகம் மக்களும் பெரிய ராஜாக்களும் அவனை அடிமைகொள்வார்கள்.
8 எந்த தேசமாவது, எந்த ராஜ்யமாவது பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்பவனைச் சேவியாமலும், தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்திற்குக் கீழ்ப்படுத்தாமலும்போனால், அந்தத் தேசத்தை நான் அவன் கையால் அழிக்கும்வரை, பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் தண்டிப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
9 பாபிலோன் ராஜாவை நீங்கள் சேவிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிற உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், உங்கள் குறிகாரருக்கும், உங்கள் சொப்பனக்காரருக்கும், உங்கள் நாள் பார்க்கிறவர்களுக்கும், உங்கள் சூனியக்காரருக்கும் நீங்கள் காதுகொடுத்துக் கேட்காதிருங்கள்.
10 நான் உங்களை உங்கள் தேசத்திலிருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிவதற்காக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
11 ஆனாலும் எந்த மக்கள் தன் கழுத்தை பாபிலோன் ராஜாவின் நுகத்திற்குக் கீழ்ப்படுத்தி, அவனைப் பணிவார்களோ, அந்த மக்களைத் தன் தேசத்தைப் பயிரிட்டு, அதில் குடியிருந்து நிலைக்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
12 இந்த எல்லா வார்த்தைகளின்படியே நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவுடன் பேசி: உங்கள் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்திற்குக் கீழ்ப்படுத்தி, அவனையும் அவன் மக்களையும் சேவியுங்கள்; அப்பொழுது பிழைப்பீர்கள்.
13 பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற மக்களுக்கு விரோதமாகக் யெகோவா சொன்னதின்படியே, நீயும் உன் மக்களும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் ஏன் இறக்கவேண்டும்?
14 நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
15 நான் அவர்களை அனுப்பினதில்லை; நான் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்களும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் அழிந்துபோகிறதற்கும் அல்லவோ இவர்கள் என் பெயரைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார் என்றேன்.
16 மேலும் நான் ஆசாரியர்களையும் இந்த எல்லா மக்களையும் நோக்கி: இதோ, யெகோவாவுடைய ஆலயத்தின் பணிப்பொருட்கள் இப்பொழுது சீக்கிரத்தில் பாபிலோனிலிருந்து திரும்பக் கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
17 அவர்கள் சொல்லைக் கேளாதிருங்கள்; பாபிலோன் ராஜாவைப் பணியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இந்த நகரம் அழியவேண்டியதென்ன?
18 அல்லது அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்து, அவர்களிடத்தில் யெகோவாவுடைய வார்த்தை இருந்தால், யெகோவாவுடைய ஆலயத்திலும், யூதா ராஜாவின் அரண்மனையிலும், எருசலேமிலும் மீதியான பணிப்பொருட்கள் பாபிலோனுக்குப் போகாமலிருக்க அவர்கள் சேனைகளின் யெகோவாவை நோக்கி மன்றாடட்டுமே.
19 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் மகனாகிய எகொனியா என்னும் யூதாவின் ராஜாவையும், யூதாவிலும் எருசலேமிலிருந்த பெரியோர் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகும்போது,
20 எடுக்காமல்விட்ட எல்லா தூண்களையும், கடல்தொட்டியையும், ஆதாரங்களையும், இந்த நகரத்தில் மீதியான மற்ற பணிப் பொருட்களையுங்குறித்துச் சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்,
21 யெகோவாவுடைய ஆலயத்திலும், யூதா ராஜாவின் அரண்மனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிப்பொருட்கள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
22 நான் அவைகளை விசாரிக்கும் நாள்வரைக்கும் அவைகள் அங்கே இருக்கும்; பின்பு அவைகளைத் திரும்ப இந்த இடத்திற்குக் கொண்டுவரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றேன். PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×