Bible Books

:

1. {சவுல் தன் தந்தையின் கழுதைகளைத் தேடுதல்} PS பென்யமீன் கோத்திரத்தார்களில் கீஸ் என்னும் பெயருள்ள, செல்வாக்குள்ள ஒரு மனிதன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் மகனான அபீயேலின் மகன்.
2. அவனுக்குச் சவுல் என்னும் பெயருள்ள மிகவும் அழகான வாலிபனான ஒரு மகன் இருந்தான்; இஸ்ரவேல் மக்களில் அவனை விட அழகுள்ளவன் இல்லை; எல்லா மக்களும் அவனுடைய தோளிற்கு கீழ் இருந்தனர். இவன் அவர்களை விட உயரமுள்ளவனாயிருந்தான்.
3. சவுலின் தகப்பனான கீசுடைய கழுதைகள் காணாமல்போனது; ஆகையால் கீஸ் தன் மகனான சவுலைப் பார்த்து: நீ வேலைக்காரர்களில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான்.
4. அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக் கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை; பென்யமீன் நாட்டைக் கடந்தும் அவைகளைக் காணவில்லை.
5. அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடித் திரும்பிப்போவோம் வா என்றான்.
6. அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனிதன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்.
7. அப்பொழுது சவுல் தன்னுடைய வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனிதனுக்கு என்ன கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்து போனது; தேவனுடைய மனிதனாகிய அவருக்குக் கொண்டு போவதற்குரிய காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான்.
8. அந்த வேலைக்காரன் மறுபடியும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனிதன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படி, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான்.
9. முற்காலத்தில் இஸ்ரவேலில் தேவனிடத்தில் விசாரிக்கப்போகிற எவனும் ஞானதிருஷ்டிக்காரனிடம் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்த நாளிலே தீர்க்கதரிசி எனப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான்.
10. அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நல்ல காரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனிதன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள்.
11. அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாக ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.
12. அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; சீக்கிரமாகப் போங்கள்; இன்றைக்கு மக்கள் மேடையில் பலியிடுகிறதினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.
13. நீங்கள் பட்டணத்திற்குள் நுழைந்தவுடனே, அவர் மேடையின்மேல் சாப்பிடப் போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வரும்வரை மக்கள் சாப்பிடமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுவார்கள்; உடனே போங்கள்; இந்த நேரத்திலே அவரைக் காணலாம் என்றார்கள்.
14. அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டு வந்தான்.
15. சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னே யெகோவா சாமுவேலின் காது கேட்கும்படி:
16. நாளை இதே நேரத்தில் பென்யமீன் நாட்டானான ஒரு மனிதனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என்னுடைய மக்களான இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் செய்வாய்; அவன் என்னுடைய மக்களை பெலிஸ்தர்களின் கையிலிருந்து மீட்பான்; என்னுடைய மக்களின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினதால், நான் அவர்களை ஏக்கத்தோடு பார்த்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.
17. சாமுவேல் சவுலைக் கண்டபோது, யெகோவா அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனிதன் இவனே; இவன்தான் என்னுடைய மக்களை ஆளுவான் என்றார்.
18. சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான்.
19. சாமுவேல் சவுலுக்குப் பதிலாக: ஞானதிருஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடு சாப்பிடவேண்டும்; நாளைக்காலை நான் உன்னுடைய இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன்.
20. மூன்று நாளைக்கு முன்னே காணாமல்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் கண்டுபிடிக்கப்பட்டது; இதைத் தவிர எல்லா இஸ்ரவேலின் விருப்பம் யாரை நாடுகிறது? உன்னையும் உன்னுடைய வீட்டார்கள் அனைவரையும் அல்லவா? என்றான்.
21. அப்பொழுது சவுல் பதிலாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என்னுடைய குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வது ஏன் என்றான்.
22. சாமுவேல் சவுலையும் அவனுடைய வேலைக்காரனையும் உணவு அறைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய 30 பேராக இருந்தார்கள்.
23. பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன்னுடைய கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான்.
24. அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடு இருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து அதை சவுலுக்கு முன்பாக வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்காக வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் மக்களை விருந்திற்கு அழைத்தது முதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடு சாப்பிட்டான்.
25. அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவனுடைய மேல்வீட்டிலே * வீட்டு மொட்டை மாடியில் சவுல் தூங்குவதற்காக ஒரு கட்டில் போடப்பட்டு இருந்தது. சவுலோடு பேசிக்கொண்டிருந்தான்.
26. அவர்கள் அதிகாலை கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படி ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள்.
27. அவர்கள் பட்டணத்தின் கடைசிவரை இறங்கிவந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்துபோனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படி, நீ சற்று இங்கே நில் என்றான். PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×