Bible Books

:
-

1. {தேவன் சிதேக்கியாவின் வேண்டுதலை நிராகரித்தல்} PS சிதேக்கியா ராஜா மல்கியாவின் மகனாகிய பஸ்கூரையும், ஆசாரியனான மாசெயாவின் மகனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:
2. நீர் எங்களுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரியும்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எங்களுக்கு விரோதமாகப் போர்செய்கிறான்; ஒருவேளை யெகோவா தம்முடைய எல்லா அற்புதச் செயலின்படியேயும் எங்களுக்கு அநுக்கிரகம் செய்து, அவனை எங்களைவிட்டுப் போகச்செய்வார் என்று சொல்லியனுப்பினபோது,
3. எரேமியா அவர்களைப் பார்த்து, நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது:
4. இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்வது என்னவென்றால், இதோ, உங்களை மதிலுக்கு வெளியே முற்றுகைபோட்ட பாபிலோன் ராஜாவுடனும் கல்தேயருடனும், நீங்கள் போர்செய்ய உங்கள் கைகளில் பிடித்திருக்கிற போர் ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவில் சேர்த்து,
5. நான் நீட்டின கையினாலும் பலத்த கரத்தினாலும் கோபமும், கடுங்கோபமாகவும், மகா கடுமையாகவும் உங்களுடன் போர்செய்து,
6. இந்த நகரத்தின் மக்களையும், மனிதரையும், மிருகங்களையும் அழிப்பேன்; மகா கொள்ளை நோயால் இறப்பார்கள்.
7. அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் வேலைக்காரரையும், மக்களையும், இந்த நகரத்தில் கொள்ளைநோய்க்கும் பட்டயத்திற்கும் பஞ்சத்திற்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் எதிரிகளின் கையிலும், அவர்கள் உயிரை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று யெகோவா சொல்கிறார் என்றான்.
8. மேலும் அவர், இந்த மக்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
9. இந்த நகரத்தில் தங்குகிறவன் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; உங்களை முற்றுகைபோடும் கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப்போய்விடுகிறவனோ பிழைப்பான்; அவன் பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல் இருக்கும்.
10. என் முகத்தை இந்த நகரத்திற்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் நெருப்பால் அதைச் சுட்டெரிப்பானென்று சொல் என்றார்.
11. யூதா ராஜாவின் குடும்பத்தாரையும் நோக்கி: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
12. தாவீதின் குடும்பத்தாரே, உங்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினால் என் கடுங்கோபம் நெருப்பைப்போல புறப்பட்டு, அணைக்கிறவன் இல்லாமல் எரியாதபடிக்கு, நீங்கள் ஏற்கனவே நியாயங்கேட்டு, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
13. இதோ, பள்ளத்தாக்கில் குடியிருக்கிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்றும், எங்கள் குடியிருப்புகளுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
14. நான் உங்கள் செயல்களின் பலனுக்கு ஏற்றவிதத்தில் உங்களை விசாரிப்பேன்; நான் அதின் காட்டில் தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள அனைத்தையும் எரித்துவிடும் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல் என்றார். PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×