Bible Books

:

1. {தீமையைத் தவிர்த்தல்} PS திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்;
அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.
2. ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்;
அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான்.
3. வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை;
மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.
4. சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்;
அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது.
5. மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போல இருக்கிறது;
புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.
6. மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்;
உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார்?
7. நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறான்;
அவனுக்குப்பிறகு அவனுடைய பிள்ளைகளும் பாக்கியவான்களாக இருப்பார்கள்.
8. நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா
தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான்.
9. என்னுடைய இருதயத்தைச் சுத்தமாக்கினேன்,
என்னுடைய பாவம் நீங்க சுத்தமானேன் என்று சொல்லக்கூடியவன் யார்?
10. வெவ்வேறான நிறைகல்லும்,
வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.
11. பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது,
அதின் செயலினால் வெளிப்படும்.
12. கேட்கிற காதும், காண்கிற கண்ணும்
ஆகிய இந்த இரண்டையும் யெகோவா உண்டாக்கினார்.
13. தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்;
கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய்.
14. வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்;
போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
15. பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு;
அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம்.
16. அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்;
அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள்.
17. வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்;
பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.
18. ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்;
நல்யோசனை செய்து யுத்தம்செய்.
19. தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்;
ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே.
20. தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய
தீபம் காரிருளில் அணைந்துபோகும்.
21. ஆரம்பத்திலே விரைவாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.
22. தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே;
யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
23. வெவ்வேறான நிறைகற்கள்
யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;
கள்ளத்தராசு நல்லதல்ல.
24. யெகோவாவாலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்;
ஆகையால் மனிதன் தன்னுடைய வழியை அறிந்துகொள்வது எப்படி?
25. பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும்,
மனிதனுக்குக் கண்ணியாக இருக்கும்.
26. ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து,
அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.
27. மனிதனுடைய ஆவி யெகோவா தந்த தீபமாக இருக்கிறது;
அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
28. தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்;
தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான்.
29. வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்;
முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.
30. காயத்தின் தழும்புகளும்,
உள்ளத்தில் உறைக்கும் அடிகளும்,
பொல்லாதவனை அழுக்கு நீங்கத் துடைக்கும். PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×