Bible Books

:

1. {ஞானத்தினால் தொடர்ந்துவரும் பலன்கள்} PS என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே;
உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும்.
2. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும்,
நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும்.
3. கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக;
நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி,
அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
4. அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய்.
5. உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல்,
உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து,
6. உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;
அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
7. நீ உன்னை ஞானியென்று எண்ணாதே;
யெகோவாவுக்குப் பயந்து,
தீமையை விட்டு விலகு.
8. அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும்,
உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும்.
9. உன்னுடைய பொருளாலும்,
உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து.
10. அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்;
உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்.
11. என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே,
அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
12. தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல,
யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார்.
13. ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும்,
புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள்.
14. அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும்,
அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது.
15. முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது;
நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல.
16. அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும்,
அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
17. அதின் வழிகள் இனிதான வழிகள்,
அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
18. அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம்,
அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
19. யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி,
புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார்.
20. அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது,
ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
21. என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக;
மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள்.
22. அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும்,
உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும்.
23. அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய்,
உன்னுடைய கால் இடறாது.
24. நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்;
நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்.
25. திடீரென வரும் திகிலும்,
துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம்.
26. யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து,
உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார்.
27. நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே.
28. உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி:
நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
29. பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற
உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே.
30. ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க,
காரணமின்றி அவனோடு வழக்காடாதே.
31. கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே;
அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
32. மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்;
நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது.
33. துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது,
நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
34. இகழ்வோரை அவர் இகழுகிறார்;
தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
35. ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்;
மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள். PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×