Bible Versions
Bible Books

Judges 13 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 மீண்டும் இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் பழிபாவம் புரிய, அவர் அவர்களை நாற்பது ஆண்டுகள் பிலிஸ்தியர் கையில் ஒப்புவித்தார்.
2 சாராவில் தான் கோத்திரத்தானான மனுவே என்ற ஒருவன் இருந்தான். அவன் மனைவி மலடியாய் இருந்தாள்.
3 அவளுக்கு ஆண்டவரின் தூதர் தோன்றி அவளை நோக்கி, "பிள்ளைகள் இல்லாத மலடி நீ; ஆனால் கருத்தாங்கி ஒரு மகனைப் பெறுவாய்.
4 எனவே, நீ திராட்சை இரசமோ மதுபானமோ அருந்தாமலும், அசுத்த உணவுகளை உண்ணாமலும் எச்சரிக்கையாய் இரு.
5 ஏனெனில் நீ கருத்தாங்கி ஒரு மகனைப் பெறுவாய். அவன் தலை மேல் கத்தி படலாகாது. அவன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட நாசேரேயனாய் இருப்பான். அவனே இஸ்ராயேலரைப் பிலிஸ்தியர் கைகளினின்று மீட்பான்" என்றார்.
6 அப்பொழுது அவள் தன் கணவனிடம் வந்து அவனை நோக்கி, "வானவனின் முகத்தையுடைய அச்சம் தரும் கடவுளின் மனிதர் ஒருவர் என்னிடம் வந்தார். அவர் யார் என்றும் எங்கிருந்து வந்தவர் என்றும் பெயர் என்ன என்றும் நான் கேட்டேன். அவர் எனக்குப் பதில் ஒன்றும் கூறாது, என்னை நோக்கி,
7 நீ கருத்தாங்கி ஒரு மகனைப் பெறுவாய்; நீ திராட்சை இரசமோ, மது பானமோ அருந்தாமலும் அசுத்த உணவுகளை உண்ணாமலும் எச்சரிக்கையாய் இரு. ஏனெனில் அவன் பிறந்தது முதல் சாகும் வரை தன் வாழ்நாள் முழுவதும் கடவுளின் நாசரேயனாய் இருப்பான் என்றார்" என்று கூறினாள்.
8 ஆகையால், மனுவே ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே, நீர் அனுப்பின கடவுளின் ஆள் மீண்டும் எம்மிடம் வந்து, பிறக்கப் போகிற பிள்ளைக்கு நாங்கள் செய்ய வேண்டியவற்றை எமக்கு எடுத்துச் சொல்ல வேண்டுகிறேன்" என்றான்.
9 மனுவேயின் மன்றாட்டை ஆண்டவர் கேட்டார். வயல் வெளியில் உட்கார்ந்திருந்த அவன் மனைவிக்கு இறைவனின் தூதர் மீண்டும் தோன்றினார். அவளுடைய கணவன் மனுவே அவளோடு இல்லை. அவள் வானவனைக் கண்டதும்,
10 விரைவில் எழுந்து தன் கணவனிடம் ஓடி, "இதோ நான் முன்பு கண்ட மனிதர் தோன்றியுள்ளார்" என்று அறிவித்தாள்.
11 அவன் எழுந்து, தன் மனைவியைப் பின் தொடர்ந்து அம் மனிதரிடம் வந்து, அவரை நோக்கி, "இப் பெண்ணுடன் பேசியவர் நீர்தானா?" என்று கேட்டான். அதற்கு அவர், "நான்தான்" என்றார்.
12 அப்போது, மனுவே, நீர் கூறினது நிறைவேறின பின் பிள்ளை செய்ய வேண்டியது என்ன? விலக்க வேண்டியவை என்ன?" என்றான்.
13 ஆண்டவரின் தூதர் மனுவேயைப் பார்த்து, "உன் மனைவி நான் கூறினபடி நடக்கட்டும்;
14 திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையும் அவள் சாப்பிடக்கூடாது. திராட்சை இரசத்தையும் மதுபானத்தையும் குடியாது, அசுத்த உணவுகளை உண்ணாது இருக்க வேண்டும்; நான் கூறினவற்றை எல்லாம் அவள் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
15 அப்போது மனுவே ஆண்டவரின் தூதரை நோக்கி, "என் மன்றாட்டைக் கேட்டருளும். நாங்கள் ஒரு வெள்ளாட்டுக் குட்டியை உமக்காகச் சமைப்போம்" என்று வேண்டினான்.
16 அதற்கு வானவர், " நீ என்னைக் கட்டாயப்படுத்தினும் உன் உணவை உண்ணேன். நீ தகனப் பலியிட விரும்பினால் அதை ஆண்டவருக்குச் செலுத்து" என்றார். அவர் ஆண்டவரின் தூதர் என்று மனுவேய்க்குத் தெரியாது.
17 அப்போது அவன் மீண்டும் அவரை நோக்கி, "நீர் கூறின வாக்கு நிறைவேறும் போது நாங்கள் உம்மை வாழ்த்தும் படிக்கு உமது பெயர் என்ன?" என்று கேட்டான்.
18 அதற்கு அவர், "வியப்புக்குரிய என் பெயரை நீ ஏன் கேட்கிறாய்?" என்றார்.
19 எனவே, மனுவே போய் வெள்ளாட்டுக் குட்டியையும் பானப்பலிகளையும் கொணர்ந்து, கல்லின் மேல் வைத்து, வியப்புக்குரியன புரியும் ஆண்டவருக்கு அவற்றை ஒப்புக்கொடுத்தான். அவனும் அவன் மனைவியும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
20 பலிபீடத்திலிருந்து தீப்பிழம்பு வானத்திற்கு எழும்புகையில் அப்பிழம்பில் ஆண்டவரின் தூதரும் எழுப்பினார். மனுவேயும் அவன் மனைவியும் அதைக் கண்ட போது, தரையில் குப்புற விழுந்தார்கள்.
21 பிறகு ஆண்டவரின் தூதர் அவர்கள் கண்ணுக்குப் படவேயில்லை. எனவே, அவர் ஆண்டவரின் தூதர் என்று மனுவே அறிந்து,
22 தன் மனைவியை நோக்கி, "நாம் ஆண்டவரைக் கண்டதால் கட்டாயம் சாவோம்" என்றான்.
23 அதற்கு அவன் மனைவி, "ஆண்டவருக்கு நம்மைக் கொல்ல மனமிருந்தால், நாம் ஒப்புக் கொடுத்த தகனப் பலியையும் பானப் பலிகளையும் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார்; நமக்கு இவற்றையெல்லாம் காண்பித்திருக்கவுமாட்டார்; வரும் காரியங்களை நமக்கு அறிவித்திருக்கவும் மாட்டார்" என்றாள்.
24 பிறகு அவள் ஒரு மகளைப் பெற்று அவனுக்குச் சாம்சன் என்று பெயரிட்டாள். பிள்ளை வளர்ந்து ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டான்.
25 பிறகு அவன் சாராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தானின் பாளையத்திலிருக்கும் போது ஆண்டவரின் ஆவி அவன் மேல் இருக்கத் தொடங்கிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×