Bible Versions
Bible Books

Luke 14 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 ஓய்வுநாளில் பரிசேயரின் தலைவன் ஒருவன் வீட்டில் அவர் உணவருந்தச் சென்றபோது, அவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
2 அங்கே அவருக்கு எதிரே, நீர்க்கோவை நோயுற்ற ஒருவன் இருந்தான்.
3 இயேசு சட்ட வல்லுநரையும் பரிசேயரையும் நோக்கி, "ஓய்வுநாளில் குணமாக்குதல் முறையா? இல்லையா?" எனக் கேட்டார்.
4 அவர்கள் பேசாதிருந்தனர். அவர் அவன்கையைப் பிடித்துக் குணமாக்கி அனுப்பிவிட்டார்.
5 பின் அவர்களிடம், "உங்களுள் ஒருவனுடைய மகனோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வுநாளென்றாலும் உடனே அவன் தூக்கிவிடமாட்டானோ?" என்றார்.
6 அதற்கு மறுமொழி கூற அவர்களால் முடியவில்லை.
7 மேலும், அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதலிடங்களைத் தேர்ந்துகொள்வதைக் கண்டு, அவர்களுக்கு உவமையாகக் கூறினதாவது:
8 " உன்னை ஒருவன் மணவிருந்திற்கு அழைக்கும்போது, நீ முதலிடத்தில் அமராதே. ஏனெனில், உன்னைவிட மதிப்பிற்குரிய ஒருவரை அவன் அழைத்திருக்கலாம்.
9 உன்னையும் அவரையும் அழைத்தவன் வந்து உன்னை நோக்கி, 'இவருக்கு உன் இடத்தை விடு' என்பான். அப்போது நீ வெட்கிக் கடைசி இடத்திற்குச் செல்லவேண்டியிருக்கும்.
10 மாறாக, உன்னை ஒருவன் அழைக்கும்போது கடைசி இடத்தில் போய் அமர்ந்துகொள். அப்படிச் செய்தால் உன்னை அழைத்தவன் வந்து உன்னை நோக்கி, 'நண்ப, மேலிடத்திற்குப்போம்' என்று சொல்வான். அப்பொழுது உன்னுடன் பந்தியிலிருப்பவர் முன்பாக நீ பெருமை அடைவாய்.
11 ஏனெனில், தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தாழ்த்துகிறவனோ உயர்த்தப்பெறுவான்."
12 பின் தம்மை அழைத்திருந்தவனை நோக்கி, "நீ பகல் உணவிற்காவது இராவுணவிற்காவது, உன் நண்பர்களையோ சகோதரர்களையோ உறவினர்களையோ, செல்வரான அண்டை வீட்டாரையோ அழைக்காதே. அவர்களும் உன்னைத் திரும்ப அழைக்கலாம். அப்போது உனக்குக் கைம்மாறு கிடைத்துவிடும்.
13 மாறாக, நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு.
14 அப்போது நீ பேறுபெற்றவன். ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்" என்றார்.
15 அவருடன் பந்தியில் இருந்தவர்களுள் ஒருவன் இதைக்கேட்டு அவரை நோக்கி, "கடவுளின் அரசில் விருந்து உண்பவன் பேறுபெற்றவன்" என்றான்.
16 அதற்கு அவர் கூறியதாவது: "ஒருவன் பெரிய விருந்துசெய்ய விரும்பிப் பலரை அழைத்தான்.
17 விருந்துக்கு நேரமானதும், 'எல்லாம் ஏற்பாடாயிற்று, வாருங்கள்' என்று அழைக்கப்பெற்றவர்களிடம் சொல்லும்படி தன் ஊழியனை அனுப்பினான்.
18 எல்லாரும் ஒன்றுபோலச் சாக்குச் சொல்லத் தொடங்கினர். 'தோட்டம் வாங்கியிருக்கிறேன். அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்கவேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றான் ஒருவன்.
19 ' நான் ஐந்து ஏர் மாடு வாங்கியிருக்கிறேன். அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றான். இன்னொருவன்.
20 'நான் மணமுடித்துள்ளேன். ஆதலால் என்னால் வரமுடியாது ' என்றான் வேறொருவன்.
21 "ஊழியன் திரும்பிவந்து இதையெல்லாம் தன் தலைவனுக்கு அறிவித்தான். வீட்டுத் தலைவன் சினமுற்றுத் தன் ஊழியனிடம், 'நகரத்தின் தெருக்களிலும் சந்துகளிலும் விரைவில் சென்று, ஏழைகள், ஊனர்கள், குருடர்கள், முடவர்கள் ஆகியோரை இங்கே கூட்டிவா' என்றான்.
22 ஊழியனும், 'ஐயா, நீர் கட்டளையிட்டப்படி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது' என்றான்..
23 அதற்குத் தலைவன், 'சாலைகளிலும் வேலியோரங்களிலும் போய் என் வீடு நிறையும்படி மக்களை வற்புறுத்திக் கூட்டிவா.
24 அழைக்கப்பெற்றவர்களுள் எவனும் என் விருந்தைச் சுவைக்கமாட்டான் என உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றான்."
25 ஒருநாள் அவருடன் பெருங்கூட்டம் சென்று கொண்டிருந்தது. அவர் அவர்கள் பக்கம் திரும்பிக் கூறியதாவது:
26 "என்னிடம் வருகிறவன் தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது.
27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.
28 " உங்களுள் யாராவது கோபுரங்கட்ட விரும்பினால் வேலையை முடிக்கத் தன்னால் முடியுமாவென்று பார்ப்பதற்கு, முதலில் உட்கார்ந்து, வேண்டிய செலவைக் கணிக்க மாட்டானா?
29 இல்லாவிடில் அதற்கு அடித்தளமிட்டபின் முடிக்க முடியாததைக் கண்ணுறும் யாவரும்,
30 'இவன் கட்டத் தொடங்கினான், முடிக்கவில்லை' என்று ஏளனம் செய்வர்.
31 அல்லது, ஓர் அரசன் மற்றோர் அரசன் மேல் போர்தொடுக்கப் போகுமுன், இருபதாயிரம் பேருடன் தன்னை எதிர்த்து வருபவனை பத்தாயிரம் பேருடன் எதிர்க்க முடியுமோ என்று, முதலில் அமர்ந்து ஆராய்ந்து பார்க்க மாட்டானா?
32 எதிர்க்க முடியாதெனில், அவன் இன்னும் தொலைவிலிருக்கும்பொழுதே தூதுவிடுத்து, சமாதானத்திற்கு ஆவன கோருவான்.
33 இவ்வாறே தன் உடைமையெல்லாம் துறக்காவிடில் உங்களுள் எவனும் என் சீடனாயிருக்க முடியாது.
34 "உப்பு நல்லதுதான். ஆனனால் உப்பு சாரமற்றுப்போனால் வேறு எதனால் சாரம் ஏற்றப்பெறும்?
35 நிலத்திற்கோ எருக்குழிக்கோ பயனற்றது. வெளியில்தான் கொட்டப்படும். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×