Bible Versions
Bible Books

Mark 14 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 பாஸ்காவும், புளியாத அப்பத் திருவிழாவும் வர இரண்டு நாள் இருந்தது. தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் சூழ்ச்சியாய் அவரைப் பிடித்துக் கொலைசெய்ய வகைதேடிக் கொண்டிருந்தார்கள்.
2 "திருவிழாவிலே வேண்டாம், ஒருவேளை மக்களிடையே கலகம் உண்டாகலாம்" என்றார்கள்.
3 பெத்தானியாவில் தொழுநோய்ச் சீமோன் வீட்டில் அவர் இருந்தார். அங்கே பந்தி அமர்ந்திருக்கும்போது, பெண் ஒருத்தி நரந்தம் என்னும் விலையுயர்ந்த நல்ல பரிமளத்தைலம் உள்ள படிகச் சிமிழைக் கொண்டுவந்து உடைத்து அவருடைய தலையில் ஊற்றினாள்.
4 அப்போது சிலர் சினந்து, "தைலத்தை இப்படி வீணாக்குவானேன்?
5 இத்தைலத்தை முந்நூறு வெள்ளிக்காசுக்கும் அதிகமாய் விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு, அவள்மேல் சீறி எழுந்தனர்.
6 இயேசுவோ, "இவளை விடுங்கள்; ஏன் தொந்தரைசெய்கிறீர்கள்? இவள் எனக்குச் செய்தது நேர்த்தியான செயல்தான்.
7 ஏனெனில், ஏழைகள் உங்களோடு எப்போதும் இருக்கிறார்கள். வேண்டும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மைசெய்ய முடியும். நானோ உங்களோடு எப்போதும் இருக்கப்போவதில்லை.
8 இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என் அடக்கத்தைக்குறித்து முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசினாள்.
9 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உலக முழுவதும் எங்கெங்கு நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவள் செய்ததும் இவள் நினைவாகக் கூறப்படும்" என்றார்.
10 பன்னிருவருள் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து அவரைக் காட்டிக் கொடுக்கும்படி தலைமைக்குருக்களிடம் சென்றான்.
11 அவர்கள் அதைக்கேட்டு மகிழ்ந்து அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தார்கள். அவனும் அவரை எவ்வாறு காட்டிக் கொடுக்கலாம் என வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
12 புளியாத அப்பத் திருவிழாவின் முதல் நாளில் பாஸ்காச் செம்மறியைப் பலியிடுவார்கள். அன்று சீடர் அவரிடம், "நீர் பாஸ்காப் பலியுணவை உண்ண நாங்கள் எங்கே போய் ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறீர்?" என்று கேட்டனர்.
13 அவர் சீடர்களுள் இருவரிடம், "நகருக்குச் செல்லுங்கள். ஒருவன் தண்ணீர்க்குடம் சுமந்துகொண்டு உங்களுக்கு எதிரே வருவான். அவன்பின்னே செல்லுங்கள்.
14 அவன் எங்கே செல்லுகிறானோ அந்த வீட்டுத்தலைவனிடம், 'நான் என் சீடருடன் பாஸ்கா உணவை உண்பதற்கான அறை எங்கே?' என்று போதகர் கேட்கிறார் எனச் சொல்லுங்கள்.
15 இருக்கை முதலியன அமைந்து ஆயத்தமாயுள்ள ஒரு பெரிய மாடி அறையை அவன் உங்களுக்குக் காட்டுவான்.
16 அங்கே நமக்கு ஏற்பாடுசெய்யுங்கள்" என்று சொல்லியனுப்பினார். சீடர்களும் போய் நகரை அடைந்து தங்களுக்கு அவர் சொல்லியவாறே நிகழ்ந்ததைக் கண்டு பாஸ்கா உணவுக்கு ஏற்பாடுசெய்தார்கள்.
17 மாலையானதும் அவர் பன்னிருவருடன் வந்தார்.
18 அவர்கள் பந்தியமர்ந்து உண்ணும்பொழுது இயேசு, "என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
19 அவர்கள் வருத்தப்பட்டு ஒவ்வொருவராக, "நானோ, நானோ" என்று அவரைக் கேட்கத் தொடங்கினார்கள்.
20 அதற்கு அவர், "பன்னிருவருள் ஒருவனே; என்னோடு பாத்திரத்தில் கையிடுபவனே.
21 மனுமகன் தம்மைப்பற்றி எழுதியிருக்கிறபடியே போகிறார். மனுமகனைக் காட்டிக் கொடுக்கிறவனுக்கோ ஐயோ, கேடு! அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" என்றார்.
22 அவர்கள் உண்ணும்பொழுது, அவர் அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி, பிட்டு அவர்களுக்கு அளித்தது, "இதை வாங்கிக்கொள்ளுங்கள்.
23 இது என் உடல்" என்றார். பின்னர், கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி அவர்களுக்கு அளிக்க, அதில் அனைவரும் பருகினர்.
24 அப்போது அவர், "உடன்படிக்கைக்கெனப் பலருக்காகச் சிந்தப்படும் என் இரத்தம் இது.
25 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இனிமேல், கடவுளின் அரசில் புதிய இரசம் குடிக்கும் நாள்வரை திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்" என்றார்.
26 புகழ்ப்பாடல் பாடிவிட்டு, ஒலிவ மலைக்குச் சென்றனர்.
27 இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் அனைவரும் இடறல்படுவீர்கள். ஏனெனில், 'மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறிப்போம்' என எழுதியிருக்கிறது.
28 ஆனால், நான் உயிர்த்தபின் கலிலேயாவிற்கு உங்களுக்குமுன் போவேன்" என்றார்.
29 அதற்கு இராயப்பர், "எல்லாரும் இடறல்பட்டாலும் நான் இடறல்படேன்" என்றார்.
30 இயேசு அவரிடம் "உறுதியாக உனக்குச் சொல்லுகிறேன்: இன்றிரவே கோழி இரு முறை கூவுமுன், என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்றார்.
31 அவரோ, "உம்மோடு இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை மறுதலியேன்" என்று வற்புறுத்திச் சொன்னார். அப்படியே அனைவரும் சொன்னார்கள்.
32 பின்பு, கெத்சேமனி என்னும் தோட்டத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் சீடர்களிடம், "நான் செபிக்குமளவும் இங்கே இருங்கள்" என்று சொல்லி,
33 இராயப்பரையும் யாகப்பரையும் அருளப்பரையும் தம்மோடு அழைத்துச்சென்றார். அப்போது திகிலும் மனக்கலக்கமும் அவரை ஆட்கொள்ளவே,
34 அவர் அவர்களை நோக்கி, "என் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கிறது; இங்கே தங்கி விழித்திருங்கள்" என்றார்.
35 சற்று அப்பால் போய்த் தரையில் குப்புற விழுந்து, கூடுமானால் அந்நேரம் தம்மைவிட்டு நீங்கும்படி செபித்தார்.
36 மேலும், "அப்பா, தந்தையே, அனைத்தும் உம்மால் கூடும். இத்துன்பக் கலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆகிலும் நான் விரும்பவுது அன்று, நீர் விரும்புவதே ஆகட்டும்" என்றார்.
37 பின்பு வந்து, அவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, இராயப்பரை நோக்கி, "சீமோனே, தூங்குகிறாயா? ஒரு மணி நேரம் விழித்திருக்க உன்னால் முடியவில்லையா?
38 சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள். ஆவி ஊக்கமுள்ளதுதான்; ஊன் உடலோ வலுவற்றது" என்றார்.
39 மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி, செபித்தார்.
40 திரும்பவும் வந்து, அவர்கள் தூங்கிக்கொண்டிருக்க கண்டார். ஏனெனில், அவர்களுடைய கண்கள் தூக்க மயக்கமுற்றிருந்தன. என்ன மறுமொழி சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை.
41 மூன்றாம் முறையாக அவர்களிடம் வந்து, "இன்னும் தூங்கி இளைப்பாறுகிறீர்களா! போதும், நேரம் வந்துவிட்டது. இதோ, மனுமகன் பாவிகளிடம் கையளிக்கப்படப் போகிறார்.
42 எழுந்திருங்கள், போவோம், இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கிவிட்டான்" என்றார்.
43 அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ் வந்தான். அவனோடு தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் மூப்பரும் அனுப்பிய கூட்டமொன்று வாள்களோடும் தடிகளோடும் வந்தது.
44 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன், "எவரை நான் முத்தமிடுவேனோ அவர்தாம்; அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள்" என்று கூறி அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
45 அவன் வந்தவுடனே, அவரை அணுகி, "ராபி" என்று சொல்லி முத்தமிட்டான்.
46 அவர்களோ அவர்மேல் கைபோட்டுப் பிடித்தார்கள்.
47 அருகில் நின்றவர்களுள் ஒருவன் வாளை உருவித் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி, அவனுடைய காதைத் துண்டித்தான்.
48 இயேசு அவர்களிடம், "கள்வனைப் பிடிக்க வருவதுபோல வாளோடும் தடியோடும் என்னைப் பிடிக்க வந்தீர்களோ?
49 நாள்தோறும் கோயிலில் போதித்துக்கொண்டு உங்களிடையே இருந்தும், நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை. ஆனால் மறைநூல் கூறுவது இவ்வாறு நிறைவேற வேண்டும்" என்றார்.
50 அப்பொழுது அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.
51 இளைஞன் ஒருவன் வெறும் உடம்பின்மேல் துப்பட்டியைப் போர்த்திக்கொண்டு அவர் பின்னே சென்றான்.
52 அவனைப் பிடித்தார்கள். அவனோ துப்பட்டியை விட்டுவிட்டு ஆடையின்றி ஓடிப்போனான்.
53 இயேசுவைத் தலைமைக்குருவிடம் கூட்டிச் சென்றனர். தலைமைக்குருக்கள், மூப்பர், மறைநூல் அறிஞர் எல்லாரும் வந்து கூடினர்.
54 இராயப்பரோ தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக்குருவின் வீட்டு உள்முற்றம்வரை வந்து, காவலருடன் உட்கார்ந்து அனலில் குளிர்காய்ந்துகொண்டிருந்தார்.
55 தலைமைக்குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவைச் சாவுக்குக் கையளிக்கும்படி அவருக்கு எதிராகச் சான்று தேடியும், ஒன்றுமே கிடைக்கவில்லை.
56 ஏனெனில், பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சாட்சி கூறியும், அச்சாட்சிகள் ஒன்றுக்கொன்று ஒவ்வாதிருந்தன.
57 சிலர் எழுந்து,
58 "கையால் கட்டிய இவ்வாலயத்தை இடித்துக் கையால் கட்டாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டுவேன்' என்று இவன் சொல்ல நாங்கள் கேட்டோம்" என அவருக்கு எதிராகப் பொய்ச்சாட்சி கூறினர்.
59 இதிலுங்கூட அவர்களுடைய சாட்சி ஒவ்வாதிருந்தது.
60 தலைமைக்குரு அவர்கள் நடுவில் எழுந்து, "உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்லுகின்றனரே, மறுமொழியாக ஒன்றும் சொல்வதற்கில்லையா?" என்று கேட்டார்.
61 அவரோ மறுமொழியாக ஒன்றும் சொல்லாமல் பேசாதிருந்தார். மீண்டும் தலைமைக்குரு, "போற்றுதற்குரிய இறைவனின் மகனான மெசியா நீதானோ?" என்று அவரைக் கேட்டார்.
62 அதற்கு இயேசு, "நான்தான். மனுமகன் வல்லமையுள்ள இறைவனின் வலப்பக்கத்தில் அமர்ந்து, வானமேகங்கள் சூழ வருவதைக் காண்பீர்கள்" என்றார்.
63 தலைமைக்குருவோ தம்முடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "நமக்கு இன்னும் சாட்சிகள் எதற்கு? தேவதூஷணம் கேட்டீர்களே. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்றார்.
64 அவர்கள் அனைவரும், "இவன் சாவுக்குரியவன்" என்று தீர்ப்பிட்டார்கள்.
65 அப்போது சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி, அறைந்து, "தீர்க்கதரிசனமாகச் சொல்" என்று கூறவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.
66 இராயப்பர் கீழே முற்றத்தில் இருக்கையில் தலைமைக்குருவின் ஊழியக்காரிகளுள் ஒருத்தி வந்து,
67 இராயப்பர் குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு, அவரை உற்று நோக்கி, "நீயும் நாசரேத்தூர் இயேசுவுடன் இருந்தாய்" என்றாள்.
68 அவரோ அதை மறுத்து, "நீ என்ன சொல்லுகிறாய் என்றே விளங்கவில்லை; எனக்கு ஒன்றும் தெரியாது" என்று சொல்லிவிட்டு, வெளியே வாசல்மண்டபத்திற்குச் சென்றார்.
69 கோழியும் கூவிற்று. மீண்டும், ஊழியக்காரி அவரைக் கண்டு, அருகே இருந்தவர்களிடம் "இவன் அவர்களுள் ஒருவன்" என்று சொல்லத் தொடங்கினாள்.
70 அவரோ மீண்டும் மறுத்தார். மீளவும் சிறிது நேரத்திற்குப்பின் அங்கு இருந்தவர்கள் இராயப்பரை நோக்கி, "உண்மையாக நீ அவர்களுள் ஒருவன். ஏனெனில், நீ கலிலேயன்" என்றார்கள்.
71 அவரோ, "நீங்கள் சொல்லுகிற அந்த ஆளை எனக்குத் தெரியவே தெரியாது" என்று சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.
72 உடனே இரண்டாம் முறையும் கோழி கூவிற்று. "இரு முறை கோழி கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று தமக்கு இயேசு சொன்னதை இராயப்பர் நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்தி அழலானார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×