Bible Versions
Bible Books

2 Chronicles 6 (ECTA) Ecumenical Bible for Tamil Language

1 அப்பொழுது சாலமோன், "ஆண்டவரே! 'கரிய மேகத்திரளில் வாழ்வேன்' என்று நீர் கூறியிருக்கிறீர்.
2 நானோ, உமக்கென மேன்மைமிகு இல்லத்தை, நீர் எந்நாளும் உறையும்படி ஒரு தலத்தை எழுப்பியுள்ளேன்" என்றார்.
3 பின்னர் அரசர் திரும்பி, இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசிவழங்கினார். அப்போது அவர்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.
4 மேலும், அவர் உரைத்தது; "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! ஏனெனில் அவர் என் தந்தை தாவீதுக்குத் தம் வாயினால் வாக்களித்ததைத் தம் கையினால் நிறைவேற்றினார்.
5 அவ்வாக்குறுதி, 'நான் எகிப்து நாட்டிலிருந்து என் மக்களை அழைத்த வந்த நாள் முதல், என் பெயருக்கென ஒரு கோவிலை எழுப்புமாறு நான் இஸ்ரயேலின் வேறொரு குலத்து நகரையும் தேர்ந்துகொள்ளவில்லை. என் மக்கள் இஸ்ரயேலருக்குத் தலைவராக நான் எவரையும் தேர்ந்து கொள்ளவில்லை.
6 ஆனால், இப்பொழுது எனது பெயர் விளங்கும் இடமாக எருசலேமையும், என் மக்கள் இஸ்ரயேலை ஆளத் தாவீதையும் தேர்ந்து கொண்டேன்' என்பதாகும்."
7 மீண்டும் அவர், "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் என் தந்தை தாவீதிற்கு இருந்தது.
8 ஆண்டவர் அவரை நோக்கி, 'என் பெயருக்கு ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்ற உன் விருப்பம் போற்றதற்குரியதே!
9 ஆனால் நீ அதைக் கட்டமாட்டாய். உனக்குப் பிறக்கும் உன் மகனே என் பெயருக்கென ஒரு கோவிலைக் கட்டுவான்' என்றார்.
10 இவ்வாறு தமது வாக்குறுதியை ஆண்டவர் இப்போது நிறைவேற்றியுள்ளார். முன்பே ஆண்டவர் கூறியிருந்ததுபோல் என் தந்தை தாவீதுக்குப் பின், நான் இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்து இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கென ஒரு கோவிலைக் கட்டியுள்ளேன்.
11 ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைக் கொண்டுள்ள பேழையையும் இங்கே கொண்டு வந்து வைத்துள்ளேன்" என்றார்.
12 பின்னர், சாலமோன் ஆண்டவரின் பலிபிடத்திற்கு முன்பாக இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையிலும் நின்று தம் கைகளை விரித்தார்.
13 சாலமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான வெண்கலத் திருவுரை மேடை ஒன்று செய்து, அதை முற்றத்தின் நடுவில் வைத்திருந்தார். அதன் மேல் அவர் எறி இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையிலும் முழந்தாளிட்டுத் தம் கைகளை விண்ணை நோக்கி உயர்த்தி,
14 மீண்டும் சொன்னதாவது; "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, விண்ணிலும், மண்ணிலும் உமக்கு இணையானகடவுள் இல்லை. ஏனெனில் நீர் முழு இதயத்தோடு உம்மைப் பின்பற்றும் உம் அடியார்கள்மேல் அன்புகூர்ந்து உமது உடன்படிக்கையைக் காத்து வருகிறீர்!
15 ஆதலால் என் தந்தையும் உம் ஊழியனுமான தாவீதுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நீர் நிறைவேற்றியுள்ளீர். உம் வாயினால் வாக்களித்ததை உம் கையினால் இந்நாளில் நிறைவேற்றியுள்ளீர்.
16 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் தந்தையும் உம் அடியாருமான தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியருளும். 'நீ என் முன்னிலையில் நடந்துவந்தது போல், உன் மைந்தரும் எனது திருச்சட்டத்தின் வழியைப் பின்பற்றி நடப்பார்களாகில், இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க, உன் வழித்தோன்றல் உனக்கு இல்லாது போகான்' என்று நீர் வாக்களித்துள்ளீர் அன்றோ!
17 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, உம் அடியார் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியருளும்.
18 கடவுள் உண்மையாகவே மனிதரோடு மண்ணில் வாழ்வது நம்பக்கூடியதா? விண்ணும் விண்விரிவும் உம்மைக் கொள்ளாதிருக்க, நான் கட்டியுள்ள இந்தக் கோவில் உம்மை எவ்வாறு கொள்ளக்கூடும்?
19 என் கடவுளாகிய ஆண்டவரே, உம் அடியானாகிய என் விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டருளும். உம் உழியனாகிய என் கூக்குரலுக்கும் விண்ணப்பத்துக்கும் செவிசாய்த்தருளும்.
20 என் பெயர் விளங்கும் என்று நீர் வாக்களித்திருந்த இந்த இடத்தின்மேல், கோவில்மேல் இரவும் பகலும் உமது அருட்பார்வை இருப்பதாக! உம் அடியானாகிய எனது விண்ணப்பத்தை நீர் இங்கே கேட்டருள்வீராக!
21 உம் அடியானும், உம் மக்களாகிய இஸ்ரயேலரும் இவ்விடம் நோக்கிச்செய்யும் வேண்டுதலைக் கேட்டருளும்; உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு எங்களை மன்னிப்பீராக!
22 ஒருவன் தன்னை அடுத்து வாழ்வோனுக்கு எதிராகப் பாவம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இந்த கோவிலில் உமது பலிபீடத்திற்குமுன் ஆணையிடுமாறு கொண்டு வரப்பட்டால்,
23 விண்ணகத்திலிருந்து நீர் அதனைக் கேட்டுச் செயல்பட்டு உம் அடியார்களுக்கு தீர்ப்பு வழங்குவீராக! தீயவரின் நடத்தைக்கேற்ற தண்டனை அவர்களின் தலைமேல் விழச்செய்யும்; நேர்மையாளருக்கு அவர்களது நேர்மைக்குத் தக்கவாறு அவர்கள் நேர்மையாளர் எனத் தீர்ப்பளிப்பீராக!
24 உம் மக்களாகிய இஸ்ரயேலர் உமக்கெதிராகப் பாவம் செய்ததனால், எதிரியிடம் தோல்வியுற்றுப் பின் உம்மிடம் திரும்பி வந்து, உமது பெயரைப் போற்றி, இக்கோவிலில் உம்மை நோக்கி வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் செய்தால்,
25 விண்ணகத்திலிருந்து நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து, உம் மக்களாகிய இஸ்ரயேலரின் பாவத்தை மன்னித்து, அவர்களின் மூதாதையருக்கென நீர் அளித்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பிவரச் செய்வீராக!
26 அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்ததனால், வானம் அடைபட்டு, மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த இடத்தை நோக்கி வேண்டுதல் செய்து உமது பெயரை ஏற்றுக்கொண்டு, நீர் அனுப்பும் துன்பத்தினால் தங்கள் பாவத்திலிருந்து மனம்மாறினால்,
27 விண்ணகத்திலிருந்து நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து உம் அடியாரும் உம் மக்கள் இஸ்ரயேலரும் செய்த பாவங்களை மன்னிப்பீராக! அவர்கள் நடக்க வேண்டிய நன்னெறியை அவர்களுக்குக் காட்டுவீராக! உம் மக்களுக்கு உரிமைச் சொத்தாக அவர்களுக்கு அளித்த நாட்டில் மழை பொழியச் செய்வீராக!
28 நாட்டில் பஞ்சம், கொள்ளை நோய் உண்டாகும்போதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, தத்துக்கிளி, ஆகியவற்றால் பயிர் அழிவுறும்போதும், நாட்டின் எந்த நகரையாவது எதிரிகள் முற்றுகையிடும்போதும், வாதையோ வேறெந்த நோயோ வரும்போதும்,
29 எந்த ஒரு மனிதரோ உம் மக்கள் இஸ்ரயேலர் அனைவருள்ளும் எவரோ, ஒவ்வொருவரின் வாதையையும் நோயையும் உணர்ந்து, இந்தக் கோவிலை நோக்கித் தம் கைகளை விரித்துச் செய்யும் எல்லா வேண்டுதல்களையும், எழுப்பும் எல்லா விண்ணப்பங்களையும்,
30 உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு மன்னிப்பீராக! ஒவ்வொருவரின் உள்ளத்தையும் அறியும் நீர் அவரவர் செயல்களுக்கேற்ற பயனை அளிப்பீராக! ஏனெனில், நீர் ஒருவரே எல்லா மானிடரின் உள்ளங்களையும் அறிபவர்!
31 இதனால், தங்கள் மூதாதையர்க்கு நீர் அளித்த நாட்டில் தங்கள் வாழ்நாள் எல்லாம் அவர்கள் உமக்கு அஞ்சி நடப்பார்கள்!
32 மேலும், உம் மக்கள் இஸ்ரயேலைச் சாராத அன்னியர் ஒருவர் மாண்புமிகு உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல்மிகு உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டுத் தொலைநாட்டிலிருந்து வந்து இந்தக் கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால்,
33 உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து நீர் அவருக்குச் செவிசாய்த்து அந்த அன்னியன் கேட்பதை எல்லாம் அருள்வீராக! இதனால், உலகின் மக்கள் எல்லாரும் உம் மக்கள் இஸ்ரயேலைப் போல் உமது பெயரை அறிந்து உமக்கு அஞ்சி வாழ்வார்கள்! மேலும், நான் எழுப்பியுள்ள இக் கோவிலில் உமது பெயர் போற்றப்படுவதை உணர்வார்கள்!
34 உம் மக்கள் தங்கள் பகைவர்களோடு போரிடச் செல்லும்போது, நீர் காட்டும் வழியில் அவர்கள் செல்கையில், நீர் தேர்ந்துகொண்ட இந்நகரையும் உமது பெயருக்கென நான் கட்டியுள்ள இக்கோவிலையும் நோக்கி ஆண்டவராகிய உம்மிடம் வேண்டினால்,
35 விண்ணகத்திலிருந்து நீர் அவர்கள் வேண்டுதல்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் செவிசாய்த்து அவர்களுக்கு வெற்றி அளிப்பீராக!
36 பாவம் செய்யாத மனிதரே இல்லை! ஆதலால், அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்தால், நீர் அவர்கள் மேல் சினம்கொண்டு அவர்களை எதிரிகளிடம் கையளிக்க, அவர்கள் தொலையிலோ அருகிலோ இருக்கும் எதிரியின் நாட்டுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டு,
37 அப்படி கொண்டு செல்லபட்ட நாட்டில் உணர்வு பெற்று, மனமாற்றம் அடைந்து, 'நாங்கள் பாவம் செய்தோம்; நெறிதவறினோம்; தீய வழியில் நடந்தோம்' என்று அவர்கள் விண்ணப்பம் செய்தால்,
38 அதாவது, தங்களைக் கைதிகளாகக் கொண்டு சென்ற பகைவரின் நாட்டில் தங்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், உம்மிடம் திரும்பி வந்து, நீர் அவர்கள் மூதாதையருக்கு அளித்த தங்கள் நாட்டையும், நீர் தேர்ந்து கொண்ட இந்நகரையும் உமது பெயருக்கு நான் கட்டியுள்ள இந்தக் கோவிலையும் நோக்கி உம்மிடம் வேண்டுதல் செய்தால்,
39 உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து அவர்கள் வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து, உமக்கெதிராகப் பாவம் செய்த உம் மக்களை மன்னித்து, அவர்களுக்கு வெற்றி வழங்குவீராக!
40 என் கடவுளே, இவ்விடத்தில் வேண்டுதல் செய்வோர் மீது உம் கண்களைத் திருப்பி, அவர்களுக்குச் செவிசாய்ப்பீராக.
41 ஆண்டவராகிய கடவுளே, உமக்கான தங்குமிடத்திற்கு எழுந்தருள்வீராக! உமது பேராற்றல் விளங்கும் பேழையும் எழுந்துவருவதாக! ஆண்டவராகிய கடவுளே! உம் குருக்கள் மீட்பெனும் ஆடையை அணிந்து கொள்வார்களாக! உம் தூயவர் நன்மை செய்வதில் மகிழ்வார்களாக!
42 ஆண்டவராகிய கடவுளே! நீர் திருப்பொழிவு செய்த என்னைப் புறக்கணியாதீர்! உமது அடியான் தாவீதுக்கு நீர் காட்டிய பேரன்பை நினைவுகூரும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×