Bible Versions
Bible Books

Daniel 7 (ECTA) Ecumenical Bible for Tamil Language

1 பாபிலோனிய அரசனாகிய பெல்சாட்சரின் முதலாண்டில் தானியேல் கனவு கண்டார்; அவர் படுத்திருக்கையில், அவரது மனக்கண்முன் காட்சிகள் தோன்றின. பிறகு அந்தக் கனவை எழுதிவைத்து அதைச் சுருக்கமாகச் சொன்னார்.
2 தானியேல் கூறியது; "இரவில் நான் கண்ட காட்சியில் வானத்தின் நான்கு திசைக் காற்றுகளும் பெருங்கடலைக் கொந்தளிக்கச் செய்தன.
3 அப்பொழுது நான்கு பெரிய விலங்குகள் கடலினின்று மேலெழும்பின.
4 அவை வெவ்வேறு உருவம் கொண்டவை. அவற்றுள் முதலாவது கழுகின் இறக்கைகளை உடைய சிங்கத்தைப்போல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அதன் இறக்கைகள் பிடுங்கப்பட்டன; அது தரையினின்று தூக்கப்பட்டு மனிதனைப்போல் இரண்டு கால்களில் நின்றது; அதற்கு மனித இதயமும் கொடுக்கப்பட்டது.
5 அடுத்து, வேறொரு இரண்டாம் விலங்கைக் கண்டேன். கரடியைப் போன்ற அந்த விலங்கு பின்னங்கால்களை ஊன்றி எழுந்து நின்றது; தன் மூன்று விலா எலும்புகளைத் தன் வாயின் பற்களுக்கு இடையில் கவ்விக் கொண்டிருந்தது. "எழுந்திரு, ஏராளமான இறைச்சியை விழுங்கு" என்று அதற்குச் சொல்லப்பட்டது.
6 இன்னும் நோக்குகையில், வேங்கை போன்ற வேறோரு விலங்கு காணப்பட்டது. அதன் முதுகில் பறவையின் இறக்கைகள் நான்கு இருந்தன; அந்த விலங்குக்கு நான்கு இருந்தன; அதற்கும் ஆளும் உரிமை கொடுக்கப்பட்டது.
7 இவற்றுக்குப் பிறகு, இரவின் காட்சியில் கண்ட நான்காம் விலங்கு, அஞ்சி நடுங்க வைக்கும் தோற்றமும் மிகுந்த வலிமையும் கொண்டதாய் இருந்தது. அதற்குப் பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. அது தூள் தூளாக நொறுக்கி விழுங்கியது; எஞ்சியதைக் கால்களால் மிதித்துப் போட்டது. இதற்குமுன் நான் கண்ட விலங்குகளுக்கு இது மாறுபட்டது. இதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன.
8 அந்தக் கொம்புகளை நான் கவனித்துப் பார்க்கையில், அவற்றின் நடுவில் வேறொரு சிறிய கொம்பு முளைத்தது; அதற்கு இடமளிக்கும் வகையில், முன்னைய கொம்புகளுள் மூன்று வேரோடு பிடுங்கப்பட்டன; அந்தக் கொம்பில் மனிதக் கண்களைப் போலக் கண்களும் பெருமை பேசும் வாயும் இருந்தன.
9 நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவரது தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன.
10 அவர் முன்னிலையிலிருந்து நெருப்பாலான ஓடை தோன்றிப் பாய்ந்தோடி வந்தது; பல்லாயிரம் பேர் அவருக்குப் பணிபுரிந்தார்கள். பலகோடி பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன.
11 அந்தக் கொம்பு பேசின பெருமை மிக்க சொற்களை முன்னிட்டு நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். அப்படிப் பார்க்கையில், அந்த விலங்கு கொல்லப்பட்டது; அதன் உடல் சிதைக்கப்பட்டு நெருப்பிற்கு இரையாக்கப்பட்டது.
12 மற்ற விலங்குகளிடமிருந்து அவற்றின் ஆட்சியுரிமை பறிக்கப்பட்டது; ஆயினும் அவற்றின் வாழ்நாள் குறிப்பிட்ட கால நேரம்வரை நீட்டிக்கப்பட்டது.
13 இரவில் நான் கண்ட காட்சியாவது; வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.
14 ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.
15 தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன்னே தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின.
16 அங்கு நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவரை அணுகி, இவற்றிற்கெல்லாம் பொருள் என்ன?" என்று கேட்டேன். அவர் அவற்றின் உட்பொருளை எல்லாம் எனக்கு விளக்கிக் கூறினார்.
17 இந்த நான்கு விலங்குகளும் உலகில் எழும்பப்போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன.
18 ஆனால் உன்னதரின் புனிதர்கள் அரசுரிமை பெறுவர்; அந்த அரசுரிமையை என்றும் ஊழ்ஊழிக் காலமும் கொண்டிருப்பர். "
19 அதன்பின்னர், மற்ற விலங்குகளினின்று மாறுபட்டு, மிகவும் அஞ்சி நடுங்கவைக்கும் தோற்றத்துடன், இரும்புப் பற்களும் வெண்கல நகங்களும் கொண்டு. அனைத்தையும் தூள் தூளாக நொறுக்கி விழுங்கி, எஞ்சியதைக் கால்களால் மிதித்துப்போட்ட அந்த நான்காம் விலங்கைப்பற்றி அறிந்து கொள்ள விரும்பினேன்.
20 அதன் தலையில் இருந்த பத்துக் கொம்புகளைப் பற்றியும், மூன்று கொம்புகள் தன் முன்னிலையில் விழுந்து போக அங்கே முளைத்த கண்களும் பெருமையாகப் பேசும் வாயும் கொண்டிருந்த ஏனையவற்றைவிடப் பெரியதாகத் தோன்றிய அந்தக் கொம்பைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பினேன்.
21 நான் பார்த்துக் கொண்டிருக்கையில், அந்தக் கொம்பு புனிதர்களுக்கு எதிராகப் போர் புரிந்து அவர்களை வென்றது.
22 தொன்மை வாய்ந்தவர் வந்து உன்னதரின் புனிதர்களுக்கு நீதி வழங்கும் வரையிலும் உரிய காலத்தில் புனிதர்கள் அரசுரிமை பெறும் வரையில் இவ்வாறு நடந்தது.
23 அவர் தொடர்ந்து பேசினார்; அந்த நான்காம் விலங்கோ உலகில் தோன்றப் போகும் நான்காம் அரசைக் குறிக்கின்றது; இது மற்றெல்லா அரசுகளையும் விட வேறுபட்டதாகும். உலக முழுவதையும் அது மிதித்துத் தூள்களாக நொறுக்கி விழுங்கிவிடும்.
24 அந்தப் பத்துக் கொம்புகளோ இந்த அரசினின்று தோன்றவிருக்கும் பத்து மன்னர்களைக் குறிக்கின்றன. அவர்களுக்குப் பிறகு மற்றொருவன் எழும்புவான்; முந்தினர்களைவிட வேறுபட்டிருப்பான்; மூன்று அரசர்களை முறியடிப்பான்;
25 அவன் உன்னதர்க்கு எதிரான சொற்களைப் பேசுவான்; உன்னதரின் புனிதர்களைத் துன்புறுத்துவான்; வழிபாட்டுக் காலங்களையும் திருச்சட்டத்தையும் மாற்ற நினைப்பான். மூன்றரை ஆண்டுகள் புனிதர்கள் அவனது கையில் ஒப்புவிக்கப்படுவர்.
26 ஆனால், நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமரும்; அவனது ஆட்சி அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, எரியுண்டு ஒன்றுமில்லாது அழிக்கப்படும்.
27 ஆட்சியும் அரசுரிமையும், வானத்தின் கீழுள்ள உலகனைத்திலும் உள்ள அரசுகளின் மேன்மையும் உன்னதரின் புனித மக்களுக்குத் தரப்படும். அவர்களது அரசு என்றென்றும் நிலைக்கும் அரசு; எல்லா அரசுகளும் அவர்களுக்குப் பணிந்து கீழ்ப்படியும்.
28 இத்தோடு விளக்கம் முடிகிறது. தானியேல் ஆகிய நான் என் நினைவுகளின் பொருட்டு மிகவும் கலங்கினேன்; என் முகம் வெளிறியது; ஆயினும் இவற்றை என் மனத்திற்குள் வைத்துக் கொண்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×