Bible Versions
Bible Books

Judges 11 (ECTA) Ecumenical Bible for Tamil Language

1 கிலாயத்தைச் சார்ந்த இப்தா வலிமைமிக்க போர்வீரர். அவர் ஒரு விலைமாதின் மகன்; இப்தா கிலாயாதுக்குப் பிறந்தவர்.
2 கிலாயாதின் மனைவியும் அவருக்குப் புதல்வரைப் பெற்றெடுத்தாள். அம்மனைவியின் புதல்வர் பெரியவர்களானதும் இப்தாவைத் துரத்திவிட்டனர். அவர்கள் அவரிடம் "எங்கள் தந்தையின் வீட்டில் உனக்குப் பங்கு இல்லை. ஏனெனில் நீ வேறொரு பெண்ணின் மகன் என்று கூறினர்.
3 இப்தா தம் சகோதரர்களிடமிருந்து தப்பி ஓடி, தோபு நாட்டில் வாழ்ந்து வந்தார்.
4 வீணர்கள் இப்தாவுடன் சேர்ந்துகொண்டு அவருடன் திரிந்தனர்.
5 அம்மோனியர் இஸ்ரயேலருடன் போர் தொடுத்த பொழுது, கிலாயதின் பெரியோர்கள் இப்தாவைத் தோபிலிருந்து கூட்டி வரச் சென்றனர்.
6 அவர்கள் இப்தாவிடம், நீர் வந்து எங்களுக்குத் தலைவராக இரும். அம்மோனியருக்கு எதிராக நாம் போரிடுவோம் என்றனர்.
7 இப்தா கிலாயதின், பெரியோர்களிடம் நீங்கள் என்னை வெறுக்கவில்லையா?, என் தந்தையின் வீட்டிலிருந்து என்னை வெளியே துரத்தவில்லையா? நீங்கள் துன்புறும் இந்நேரத்தில் மட்டும் ஏன் என்னிடம் வருகின்றீர்கள், என்று கேட்டார்.
8 கிலாயதின் பெரியோர்கள் இப்தாவிடம், அதனால்தான் நாங்கள் உம்மை அழைத்துச் செல்ல வந்துள்ளோம். எங்களுடன் வந்து அம்மோனியருடன் போரிடும். நீர் எங்களுக்கும் கிலாயதில் வாழும் அனைவருக்கும் தலைவராக இருப்பீர் என்றனர்.
9 இப்தா கிலாயதின் பெரியோர்களிடம், நீங்கள் அம்மோனியருடன் போரிடுவதற்காக என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கின்றீர்கள். ஆண்டவர் அவர்களை என்னிடம் ஒப்புவித்தால், நான் உறுதியாக உங்கள் தலைவனாக இருப்பேன்" என்றார்.
10 கிலயாதின் பெரியோர்கள் இப்தாவிடம், "நீர் கூறியபடி நாங்கள் செய்வது உறுதி. ஆண்டவரே நமக்கிடையே சாட்சியாக இருப்பார்" என்றனர்.
11 இப்தா கிலயாதின் பெரியோர்களுடன் புறப்பட்டுச் சென்றார். மக்கள் அவரைத் தங்கள் தலைவராகவும் போர்த் தளபதியாகவும் ஏற்றுக்கொண்டனர். இப்தா மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் தம் காரியங்கள் அனைத்தையும் பற்றிக் கூறினார்.
12 இப்தா அம்மோனிய மன்னரிடம் தூதரை அனுப்பி, "எனக்கும் உமக்கும் இடையே என்ன வழக்கு? நீர் ஏன் எனக்கெதிராக வந்து என் நிலத்தில் போரிடுகின்றீர்?" என்று கேட்டார்.
13 அம்மோனியரின் மன்னன் இப்தாவின் தூதரிடம், "இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியே வருகையில் அர்னோனிலிருந்து யாபோக்குவரை, யோர்தான் வரையிலும் என் நிலத்தைப் பறித்துக் கொண்டனர். இப்பொழுது அவற்றைச் சமாதானமாகத் திருப்பிக் கொடும்" என்றான்.
14 இப்தா தூதரை மீண்டும் அம்மோனிய மன்னனிடம் அனுப்பி அறிவித்தது.
15 "இப்தா கூறுவது இதுவே; இஸ்ரயேலர் மோவாபியரின் நிலத்தையோ, அம்மோனியரின் நிலத்தையோ, பறித்துக்கொள்ளவில்லை.
16 ஏனெனில் அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறி வருகையில் இஸ்ரயேலர் பாலைநிலத்தில் நடந்து செங்கடலுக்கும் பின்னர் காதேசுக்கும் வந்தனர்.
17 இஸ்ரயேலர் ஏதோமின் மன்னனுக்கு, "நாங்கள் உம் நாட்டைக் கடக்க அனுமதி அளியும்" என்று தூதரிடம் சொல்லி அனுப்பினர். ஏதோமின் மன்னன் அதைக் கேட்கவில்லை. மோவாபு மன்னனிடமும் அனுப்பினர். அவனும் இசையவில்லை. எனவே இஸ்ரயேலர் காதேசில் தங்கினர்.
18 பின்னர் அவர்கள் பாலைநிலத்தில் ஏதோம் நாட்டையும் மோவாபு நாட்டையும் சுற்றிச் சென்று மோவாபின் கிழக்குப்பகுதிக்கு வந்தனர். அங்கு மோவாபின் எல்லையான அர்னோனின் அக்கரைப் பகுதியில் தங்கினர். மோவாபின் எல்லைக்குள் கால்வைக்கவே இல்லை.
19 இஸ்ரயேலர் எஸ்போனில் ஆட்சி செய்த எமோரிய மன்னன் சீகோனிடம் தூதரை அனுப்பினர். இஸ்ரயேலர் அவனிடம், "உம் நாட்டைக் கடந்து எம் இடத்தை அடைய அனுமதி தாரும்" என்று வேண்டினர்.
20 ஆனால் சீகோன் இஸ்ரயேலரை நம்பாததால் அவர்களைத் தன் எல்லைக்குள் விடாது, தன் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, யாகசிவில் பாளையம் இறங்கி இஸ்ரயேல் மக்களுடன் போர்புரிந்தான்.
21 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர், சீகோனையும் அவன் மக்கள் அனைவரையும் இஸ்ரயேலரின் கையில் ஒப்புவித்தார். இஸ்ரயேலர் எமோரியரை வென்று அவர்கள் வாழ்ந்த அந்த நாட்டை உரிமையாக்கிக் கொண்டனர்.
22 அர்னோனிலிருந்து யாபோக்குவரை, பாலை நிலத்திலிருந்து யோர்தான்வரை, இருந்த எமோரியரின் நாடு முழுவதையும் இஸ்ரயேலர் உரிமையாக்கிக் கொண்டனர்.
23 இப்பொழுது இஸ்ரயேலரின் கடவுளாகிய ஆண்டவர் எமோரியரைத் தம் மக்கள் இஸ்ரயேலின் முன்னிலையிலிருந்து துரத்தியிருக்க, அந்த நாட்டை உரிமையாக்கிக் கொள்வது எப்படி?
24 உம் கடவுளாகிய கெமோசு உமக்கு உடைமையாகக் கொடுப்பதை நீர் உரிமையாக்கிக் கொள்ள மாட்டீரா? அவ்வாறே, எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு உடைமையாகக் கொடுத்ததை நாங்கள் உரிமையாக்கிக் கொள்ளாது இருப்போமா?
25 நீர் மோவாபின் மன்னன் சிப்போரின் மகன் பாலாக்கைவிடச் சிறந்தவரா? அவன் இஸ்ரயேலருடன் எப்போதாவது வழக்காடினானா? அல்லது அவர்களோடு போரிட்டானா?
26 இஸ்ரயேலர் எஸ்போனிலும் அதன் சிற்றூர்களிலும், அரோயேரிலும் அதன் சிற்றூர்களிலும், அர்னோனின் கரைகளில் இருந்த எல்லா நகர்களிலும் முந்நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க, இவ்வளவு காலமாய் நீர் ஏன் அவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை?
27 நான் உமக்குத் தீங்கிழைக்கவில்லை. ஆனால் நீர் எனக்கு எதிராகப் போர் தொடுத்துத் தீமை விளைவிக்கின்றீர். நீதி வழங்கும் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கும் அம்மோனிய மக்களுக்கும் இடையே இன்று நீதி வழங்கட்டும் ".
28 அம்மோனியரின் மன்னன் தனக்கு இப்தா சொல்லி அனுப்பிய வார்த்தைகளை ஏற்கவில்லை.
29 ஆண்டவரின் ஆவி இப்தாவுக்கு அருளப்பட்டது. அவர் கிலயாதையும், மனாசேயையும் கடந்து, கிலயாதிலிருந்த மிஸ்போவைக் கடந்து, அங்கிருந்து அம்மோனியரை நெருங்கினார்.
30 இப்தா ஆண்டவருக்கு ஒரு நேர்ச்சை செய்தார். "நீர் அம்மோனிய மக்களை என் கையில் ஒப்புவித்தால்,
31 அவர்களிடமிருந்து நான் வெற்றியோடு திரும்பும் பொழுது யார் என்னைச் சந்திக்க என் வீட்டு வாயிலிலிருந்து புறப்பட்டு வருகின்றாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரைக் கொண்டு வந்து எரி பலியாக்குவேன். "
32 இப்தா அம்மோனியருடன் போரிடச் சென்றார். ஆண்டவர் அவர்களை அவர் கையில் ஒப்புவித்தார்.
33 இப்தா அரோயேரிலிருந்து மின்னித்து அருகாமை வரை இருபது நகர்களையும், ஆபல்-கெராமிம் வரை இருந்த பகுதிகளையும் அழித்தார். இஸ்ரயேல் முன்னிலையில் அம்மோனியர் அடக்கப்பட்டனர்.
34 இப்தா மிஸ்பாவிலிருந்து தம்வீடு திரும்பினார். இதோ! அவர் மகள் மேளதாளத்துடன் நடனமாடிக் கொண்டு அவரைச் சந்திக்கப் புறப்பட்டு வந்தாள். அவள் அவருடைய ஒரே மகள். அவருக்கு வேறு மகனோ மகளோ இல்லை.
35 அவர் அவளைப் பார்த்தார்; தம் உடைகளைக் கிழித்துக் கொண்டு, "ஐயோ! என் மகளே! நீ எனக்கு மோசம் செய்துவிட்டாயே! நீ என்னைத் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாயே! நான் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே! அதை நான் மாற்ற முடியாதே!" என்றார்.
36 அவள் அவரிடம், "அப்பா, நீங்கள் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டீர்களென்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள். ஏனெனில், ஆண்டவர் உங்கள் எதிரிகளான அம்மோனியரை உங்களுக்காகப் பழிவாங்கிவிட்டார்" என்றாள்.
37 அவள் தந்தையிடம், "என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சுற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்" என்றாள்.
38 அவர், "சென்று வா" என்று சொல்லி அவளை இரண்டு மாதங்களுக்கு அனுப்பி வைத்தார். அவள் தன் தோழியருடன் சென்று தன் கன்னிமை குறித்து மலைமீது துக்கம் கொண்டாடினாள்.
39 இரண்டு மாதங்கள் முடிந்தபின் அவள் தன் தந்தையிடம் வந்தாள். அவர் தாம் செய்திருந்த நேர்ச்சையின்படி அவளுக்குச் செய்தார். அவள் ஆணுறவு கொள்ளவே இல்லை.
40 அன்று முதல் இஸ்ரயேல் மகளிர் ஆண்டுதோறும் நான்கு நாள்கள் கிலயாதைச் சார்ந்த இப்தாவின் மகளுக்காகத் துக்கம் கொண்டாடுவது இஸ்ரயேலில் வழக்கமாயிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×