Bible Versions
Bible Books

Jeremiah 7 (ECTA) Ecumenical Bible for Tamil Language

1 ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு;
2 ஆண்டவரின் இல்ல வாயிலில் நின்று நீ அறிவிக்க வேண்டிய வாக்கு இதுவே; ஆண்டவரை வழிபட இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் மக்களே! நீங்கள் அனைவரும் கேளுங்கள்.
3 இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது; "உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள். நான் இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.
4 "இது ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்!" என்னும் ஏமாற்றுச் சொற்களை நம்பவேண்டாம்.
5 நீங்கள் உங்கள் வழிகளையும் செயல்களையும் முற்றிலும் சீர்ப்படுத்திக் கொண்டால், ஒருவர் ஒருவரோடு முற்றிலும் நேர்மையுடன் நடந்துகொண்டால்,
6 அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதிருந்தால், மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதிருந்தால், தீங்கு விளைவிக்கும வேற்றுத் தெய்வ வழிபாட்டை நிறுத்தி விட்டால்,
7 இந்த இடத்தில், முன்பே நான் உங்கள் மூதாதையர்க்கு எக்காலத்திற்குமென்று கொடுத்துள்ள இந்த நாட்டில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன்.
8 நீங்களோ, பயனற்ற ஏமாற்றுச் சொற்களை நம்புகிறீர்கள்.
9 களவு, கொலை, விபச்சாரம் செய்கிறீர்கள்; பொய்யாணை இடுகிறீர்கள்; பாகாலுக்குத் தூபம் காட்டுகிறீர்கள். நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களை வழிபடுகிறீர்கள்.
10 ஆயினும், என் பெயர் விளங்கும் இந்தக் கோவிலுள் வந்து, என்முன் நின்றுகொண்டு, "நாங்கள் பாதுகாப்பாய் உள்ளோம்" என்கிறீர்கள். அருவருப்பான இவற்றைச் செய்யவா இந்தப் பாதுகாப்பு?
11 என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ? நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன், "என்கிறார் ஆண்டவர்.
12 நான் முன்னாளில் குடியிருந்த சீலோ என்னும் என் இடத்திற்குப் போங்கள். என் மக்கள் இஸ்ரயேல் செய்த தீமையின் பொருட்டு நான் அதற்குச் செய்துள்ளதைப் பாருங்கள்.
13 ஆண்டவர் கூறுவது; நீங்கள் இந்தத் தீய செயல்களை எல்லாம் செய்தீர்கள். நான் தொடர்ந்து கூறியும் நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை. நான் உங்களை அழைத்தும் நீங்கள் பதில் தரவில்லை.
14 எனவே, என் பெயர் விளங்கும் உங்கள் நம்பிக்கைக்குரிய இந்தக் கோவிலுக்கும் உங்களுக்கும் உங்கள் தந்தையருக்கும் நான் கொடுத்த இந்த இடத்திற்கும் சீலோவிற்குச் செய்தது போலவே செய்யப்போகிறேன்.
15 உங்கள் சகோதரர் அனைவரையும் எப்ராயிம் வழிமரபினர் யாவரையும் ஒதுக்கியதுபோல, உங்களையும் என் முன்னிலையிலிருந்து ஒதுக்கிவிடுவேன்.
16 இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம்; இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம்; என்னிடம் பரிந்து பேசவும் வேண்டாம். ஏனெனில் நான் உனக்குச் செவிசாய்க்க மாட்டேன்.
17 யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் அவர்கள் செய்வதை நீ பார்ப்பதில்லையா?
18 புதல்வர் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றனர். தந்தையர் தீ மூட்டுகின்றனர். பெண்டிர் விண்ணக அரசிக்காக அடை சுட மாவைப் பிசைகின்றனர். எனக்கு வருத்தம் வருவிக்கும்படி வேற்றுத் தெய்வங்களுக்கு அவர்கள் நீர்மப்படையல்கள் படைக்கிறார்கள்.
19 எனக்கா வருத்தம் வருவிக்கிறார்கள்? என்கிறார் ஆண்டவர்; தங்களுக்குத் தாமே அவ்வாறு செய்துகொள்கிறார்கள்! வெட்கக்கேடு!
20 ஆகவே, தலைவராம் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; என் சினமும் சீற்றமும் இவ்விடத்தின் மீதும் மனிதர் மீதும் விலங்குகள் மீதும் வயல்வெளி மரங்கள் மீதும் நிலத்தின் விளைச்சல் மீதும் கொட்டப்படும். என் சினம் பற்றியெரியும்; அதனை அணைக்க முடியாது.
21 இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் எரிபலிகளோடு ஏனைய பலிகளையும் சேர்த்து அவற்றின் இறைச்சியை நீங்களே உண்ணுங்கள்.
22 உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து நான் விடுவித்தபோது எரிபலிகள் பற்றியோ ஏனைய பலிகள் பற்றியோ அவர்களுக்கு நான் எதுவும் கூறவில்லை; கட்டளையிடவும் இல்லை.
23 ஆனால் நான் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே; என் குரலுக்குச் செவி கொடுங்கள்; அப்போது நான் உங்களுக்குக் கடவுளாய் இருப்பேன். நீங்கள் எனக்கு மக்களாய் இருப்பீர்கள். நான் கட்டளையிட்ட நெறிகள் அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்கு நலம் பயக்கும்.
24 அவர்களோ செவி சாய்க்கவும் இல்லை; கவனிக்கவும் இல்லை; பிடிவாத குணமுடைய அவர்களின் தீய உள்ளத்தின் திட்டப்படி நடந்தார்கள்; முன்னோக்கிச் செல்வதற்குப் பதில் பின்னோக்கிச் சென்றார்கள்.
25 உங்கள் மூதாதையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து என் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன்.
26 அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை; கவனிக்கவில்லை; முரட்டுப் பிடிவாதம் கொண்டு தங்கள் மூதாதையரைவிட அதிகத் தீச்செயல் செய்தனர்.
27 நீ அவர்களிடம் இச்சொற்களை எல்லாம் கூறுவாய்; அவர்களோ உனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நீ அவர்களை அழைப்பாய்; அவர்களோ உனக்குப் பதில் தரமாட்டார்கள்.
28 தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, அவர் தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே, என அவர்களிடம் சொல். உண்மை அழிந்து போயிற்று. அது அவர்கள் வாயிலிருந்து அகன்று போயிற்று.
29 உன் தலை முடியை மழித்து எறிந்துவிடு; மொட்டைக் குன்றுகளில் நின்று ஒப்பாரி வை; ஏனெனில், தம் சீற்றத்தில் ஆண்டவர் இத்தலைமுறையைப் புறக்கணித்துத் தள்ளிவிட்டார்.
30 ஏனெனில், யூதாவின் மக்கள் என் கண்முன் தீமை செய்தனர் என்கிறார் ஆண்டவர். என் பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி அவர்கள் அருவருப்பானவற்றை அங்கு வைத்தார்கள்.
31 அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி பென்இன்னோம் பள்ளத்தாக்கில் உள்ள தோபேத்தில் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இதனை நான் கட்டளையிடவில்லை. இது என் எண்ணத்தில்கூட எழவில்லை.
32 ஆதலால், ஆண்டவர் கூறுகிறார்; இதோ! நாள்கள் வருகின்றன. அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது; மாறாகப் "படுகொலைப் பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படும்; வேறிடம் இல்லாததால் தோபேத்தில் பிணங்களைப் புதைப்பர்.
33 இம்மக்களின் சடலங்கள் வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் இரையாகும். யாரும் அவற்றை விரட்ட மாட்டார்கள்.
34 அப்போது யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் ஒலியின் அக்களிப்பின் ஆரவாரமும் எழாதிருக்கச் செய்வேன். மணமகன், மணமகள் குரலொலியும் கேட்கப்படாதிருக்கச் செய்வேன். ஏனெனில், நாடு பாழ்பட்டுப் போகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×