Bible Books

:

1. {அனனியாவும் சப்பிராவும்} PS அனனியா என்னும் பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் தன் மனைவி சப்பிராவுடன் சேர்ந்து தன்னுடைய நிலத்தை விற்றான்;
2. விற்ற தொகையில் ஒரு பகுதியைத் தன் மனைவி அறியத் தனக்கென்று வைத்துக் கொண்டு, மறு பகுதியைத் திருத்தூதரின் காலடியில் கொண்டுவந்து வைத்தான்.
3. அப்பொழுது பேதுரு, “அனனியா, நீ நிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக்கொண்டு தூய ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன்?
4. அது விற்கப்படுவதற்கு முன்பு உன்னுடையதாகத்தானே இருந்தது? அதை விற்ற பின்பும் அந்தப்பணம் உன்னுடைய உரிமையாகத்தானே இருந்தது? பின்பு ஏன் நீ இச்செயலுக்கு உன் உள்ளத்தில் இடமளித்தாய்? நீ மனிதரிடமல்ல, கடவுளிடமல்லவா பொய் சொன்னாய்” என்று கூறினார்.
5. அவர் கூறியதைக் கேட்டதும் அனனியா கீழே விழுந்து உயிர்விட்டான். இதைக் கேள்வியுற்ற அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது. * இச 23:22,23
6. இளைஞர்கள் எழுந்து வந்து அவனைத் துணியால் மூடிச் சுமந்து கொண்டுபோய் அடக்கம் செய்தார்கள்.
7. ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப் பின் அவன் மனைவி உள்ளே வந்தாள்; நிகழ்ந்தது எதுவும் அவளுக்குத் தெரியாது.
8. பேதுரு அவளைப் பார்த்து, “நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள்? சொல்” என்று கேட்க, அவள் “ஆம், இவ்வளவுக்குத்தான் விற்றோம்” என்று பதிலளித்தாள்.
9. மீண்டும் பேதுரு அவளைப் பார்த்து, “தூய ஆவியாரைச் சோதிக்க நீங்கள் உடன்பட்டதேன்? இதோ! உன் கணவனை அடக்கம் செய்தவர்கள் கதவருகில் வந்து விட்டார்கள். அவர்கள் உன்னையும் வெளியே சுமந்து செல்வார்கள்” என்றார்.
10. உடனே அவள் அவர் காலடியில் விழுந்து உயிர்விட்டாள். இளைஞர்கள் உள்ளே வந்து அவள் இறந்துகிடப்பதைக் கண்டு வெளியே சுமந்துகொண்டு போய் அவள் கணவனுக்கு அருகில் அடக்கம் செய்தார்கள். * 1 கொரி 10:9
11. திருச்சபையார் யாவரையும், இதைக் கேள்வியுற்ற அனைவரையுமே பேரச்சம் ஆட்கொண்டது.PE
12. {அடையாளங்களும் அருஞ்செயல்களும்} PS மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடி வந்தனர்.
13. மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும், மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர்.
14. ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்.
15. பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்;
16. எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர். * மாற் 6:56 PE
17. {திருத்தூதர் துன்புறுத்தப்படுதல்} PS தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்த சதுசேயக் கட்சியினர் அனைவரும் பொறாமையால் நிறைந்து * லூக் 4:40,41
18. திருத்தூதரைக் கைது செய்து பொதுச் சிறையில் காவலில் வைத்தனர்.
19. ஆனால், இரவில் ஆண்டவரின் தூதர் சிறைச் சாலையின் கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே அழைத்துச் சென்று,
20. “நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள்” என்றார்.
21. இதைக் கேட்ட அவர்கள் பொழுது விடிந்ததும் கோவிலுக்குச் சென்று கற்பித்தார்கள். தலைமைக் குருவும் அவரைச் சேர்ந்தவர்களும் அனைத்து இஸ்ரயேல் மக்களின் ஆட்சிப் பேரவையாகிய தலைமைச் சங்கத்தைக் கூட்டித் திருத்தூதர்களைச் சிறையிலிருந்து கொண்டு வருமாறு ஆள் அனுப்பினார்கள்.
22. அந்த ஏவலர்கள் அங்கு வந்தபோது சிறையில் அவர்களைக் காணவில்லை. எனவே, அவர்கள் திரும்பி வந்து,
23. “நாங்கள் சிறைச்சாலை உறுதியாய்ப் பூட்டப்பட்டிருப்பதையும், காவலர் வாயிலருகில் நின்றுகொண்டிருப்பதையும் கண்டோம். ஆனால், கதவைத் திறந்தபோது உள்ளே எவரையும் காணவில்லை” என்று அறிவித்தார்கள்.
24. இவ்வார்த்தைகளைக் கேட்ட கோவில் காவல் தலைவரும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நேர்ந்திருக்கும் என்று மனங்குழம்பி நின்றனர்.
25. அப்பொழுது ஒருவர் வந்து, “நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர்” என்று அவர்களிடம் அறிவித்தார்.
26. உடனே காவல்தலைவர் ஏவலர்களுடன் கோவிலுக்குச் சென்று அவர்களை அழைத்துச் சென்றார். மக்கள் கல்லெறிவார்கள் என்று அவர் அஞ்சியதால் வன்முறை எதுவும் கையாளவில்லை.
27. அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி,
28. “நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும், இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!” என்றார்.
29. அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? * மத் 27:25
30. நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார்.
31. இஸ்ரயேல் மக்களுக்கு மன மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார்.
32. இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்” என்றனர்.
33. இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத்தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.
34. அப்பொழுது கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில் எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர். திருத்தூதரைச் சிறிது நேரம் வெளியே போகும்படி ஆணையிட்டு,
35. அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.
36. சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று.
37. இவற்றுக்குப் பின்பு மக்கள்தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர்.
38. ஆகவே, இப்போது நீங்கள் இம் மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும்.
39. அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்.” அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர். * மத் 15:13; லூக் 20:4
40. பின்பு, அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப்புடைத்து, இயேசுவைப்பற்றிப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். * மத் 15:13; லூக் 20:4
41. இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.
42. அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்துவந்தார்கள். * 1 கொரி 4:9,10. PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×