Bible Versions
Bible Books

Job 33 (ECTA) Ecumenical Bible for Tamil Language

1 ஆனால் இப்பொழுது, யோபே! எனக்குச் செவிகொடும்; என் எல்லா வார்த்தைகளையும் கேளும்.
2 இதோ! நான் வாய் திறந்துவிட்டேன்; என் நாவினால் பேசுகிறேன்.
3 என் உள்ளத்தின் நேர்மையை என் சொற்கள் விளம்பும்; அறிந்ததை உண்மையாய் இயம்பும் என் உதடுகள்.
4 இறைவனின் ஆவி என்னைப் படைத்தது; எல்லாம் வல்லவரின் மூச்சு என்னை வாழ்விக்கின்றது.
5 உம்மால் முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்; என்னோடு வழக்காட எழுந்து நில்லும்.
6 இதோ! இறைவன் முன்னிலையில் நானும் நீவிரும் ஒன்றே; உம்மைப்போல் நானும் களிமண்ணிலிருந்து செய்யப்பட்டவனே!
7 இதோ! நீர் எனக்கு அஞ்சி நடுங்க வேண்டியதில்லை; நான் வலுவாக உம்மைத் தாக்கமாட்டேன்.
8 உண்மையாகவே என் காதுகளில் விழ நீர் கூறினீர்; நானும் அம்மொழிகளின் ஒலியைக் கேட்டேன்;
9 'குற்றமில்லாத் தூயவன் நான்; மாசற்ற வெண் மனத்தான் யான்.
10 இதோ! அவர் என்னில் குற்றம்காணப் பார்க்கின்றார்; அவர் என்னை எதிரியாக எண்ணுகின்றார்.
11 மரத் துளையில் என் கால்களை மாட்டுகின்றார்; என் காலடிகளையெல்லாம் கவனிக்கின்றார்'.
12 இதோ! இது சரியென்று; பதில் உமக்குக் கூறுகிறேன்; கடவுள் மனிதரைவிடப் பெரியவர்.
13 'என் சொல் எதற்கும் அவர் பதில் கூறுவதில்லை' என ஏன் அவரோடு வழக்காடுகின்றீர்?
14 ஏனெனில், இறைவன் முதலில் ஒருவகையில் இயம்புகின்றார்; இரண்டாவது வேறுவகையில் விளம்புகின்றார்; அதை யாரும் உணர்வதில்லை.
15 கனவில், இரவின் காட்சியில் ஆழ்துயில் மனிதரை ஆட்கொள்கையில்; படுக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்குகையில்,
16 அவர் மனிதரின் காதைத் திறக்கின்றார்; எச்சரிக்கை மூலம் அச்சுறுத்துகின்றார்.
17 இவ்வாறு மாந்தரிடமிருந்து தீவினையை நீக்குகின்றார்; மனிதரிடமிருந்து ஆணவத்தை அகற்றுகின்றார்.
18 அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும், உயிரை வாளின் அழிவிலிருந்தும் காக்கின்றார்.
19 படுக்கையில் படும் வேதனையினாலும் எலும்பில் வரும் தீரா வலியினாலும் அவர்கள் கண்டித்துத் திருத்தப்படுகின்றார்கள்.
20 அப்போது அவர்களின் உயிர் உணவையும், அவர்களின் ஆன்மா அறுசுவை உண்டியையும் அருவருக்கும்.
21 அவர்களின் சதை கரைந்து மறையும்; காணப்படா அவர்களின் எலும்புகள் வெளியே தெரியும்.
22 அவர்களின் ஆன்மா குழியினையும் அவர்களின் உயிர் அழிப்போரையும் அணுகும்.
23 மனிதர் சார்பாக இருந்து, அவர்களுக்கு நேர்மையானதைக் கற்பிக்கும் ஓர் ஆயிரத்தவராகிய வானதூதர்
24 அவர்களின் மீது இரங்கி, "குழியில் விழாமல் இவர்களைக் காப்பாற்றும்; ஏனெனில், இவர்களுக்கான மீட்டுத் தொகை என்னிடமுள்ளது;
25 இவர்களின் மேனி இளைஞனதைப்போல் ஆகட்டும்; இவர்கள் இளமையின் நாள்களுக்குத் திரும்பட்டும் "
26 என்று கடவுளிடம் மன்றாடினால், அவர் அவர்களை ஏற்றுக் கொள்வார்; அவர்தம் முகத்தை மகிழ்ச்சியோடு அவர்கள் காணச் செய்வார்; அவர்களுக்குத் தம் மீட்பை மீண்டும் அளிப்பார்.
27 அவர்கள் மனிதர் முன் இவ்வாறு அறிக்கையிடுவர்; 'நாங்கள் பாவம் செய்தோம்; நேரியதைக் கோணலாக்கினோம்; இருப்பினும் அதற்கேற்ப நாங்கள் தண்டிக்கப்படவில்லை;
28 எங்கள் ஆன்மாவைக் குழியில் விழாது அவர் காத்தார்; எங்கள் உயிர் ஒளியைக் காணும்.'
29 இதோ இறைவன் இவற்றையெல்லாம் மனிதர்க்கு மீண்டும் மீண்டும் செய்கிறார்.
30 இவ்வாறு குழியிலிருந்து அவர்களின் ஆன்மாவைக் காப்பாற்றுகின்றார்; வாழ்வோரின் ஒளியை அவர்கள் காணச் செய்கின்றார்.
31 யோபே! கவனியும்! எனக்குச் செவிகொடும்; பேசாதிரும்; நான் பேசுவேன்.
32 சொல்வதற்கு இருந்தால், எனக்குப் பதில் சொல்லும்; பேசுக! உம்மை நேர்மையுள்ளவரெனக் காட்டவே நான் விழைகின்றேன்.
33 இல்லையெனில், நீர் எனக்குச் செவி சாயும்; பேசாதிரும்; நான் உமக்கு ஞானத்தைக் கற்பிப்பேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×