Bible Versions
Bible Books

Exodus 1 (ECTA) Ecumenical Bible for Tamil Language

1 யாக்கோபோடும் தங்கள் குடும்பங்களோடும் எகிப்திற்குச் சென்ற இஸ்ரயேல் புதல்வர்களின் பெயர்கள் இவை;
2 ரூபன், சிமியோன், லேவி, யூதா;
3 இசக்கார், செபுலோன், பென்யமின்;
4 தாண், நப்தலி, காத்து, ஆசேர்.
5 யாக்கோபின் வழிவந்த இவர்கள் அனைவரும் மொத்தம் எழுபது பேர். யோசேப்பு ஏற்கனவே எகிப்தில் இருந்தார்.
6 பின்னர் யோசேப்பும் அவருடைய எல்லாச் சகோதரரும் அந்தத் தலைமுறையினர் அனைவருமே இறந்துபோயினர்.
7 இஸ்ரயேல் மக்களோ குழந்தைவளம் பெற்றுப் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்தனர்; ஆள்பலத்தில் மேன்மேலும் வளர்ந்தனர்; இதனால் அந்நாடே அவர்களால் நிறைந்துவிட்டது.
8 இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.
9 அவன் தன் குடிமக்களை நோக்கி, "இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.
10 அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள். ஏனெனில் போர் ஏற்படுமாயின், அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்து கொள்வர்; நம்மை எதிர்த்துப் போரிடுவர்; இந்நாட்டிலிருந்தும் வெளியேறி விடுவர்" என்று கூறினான்.
11 எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள்மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர்.
12 ஆயினும் எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்; பெருகிப் பரவினர். இதனால் எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர்.
13 எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கினர்;
14 கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர்.
15 எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது;
16 "எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்; ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்; பெண்மகவு என்றால் வாழட்டும்".
17 ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.
18 எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி, "ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?" என்று கேட்டான்.
19 அதற்கு மருத்துவப் பெண்கள் பார்வோனை நோக்கி, "எகிப்தியப் பெண்களைப் போன்றவரல்லர் எபிரேயப் பெண்கள்; ஏனெனில், அவர்கள் வலிமை கொண்டவர்கள்; மருத்துவப்பெண் வருமுன்னரே அவர்களுக்குப் பிள்ளைப்பேறு ஆகிவிடுகிறது" என்று காரணம் கூறினர்.
20 இதன்பொருட்டுக் கடவுள் மருத்துவப் பெண்களுக்கு நன்மை செய்தார். இஸ்ரயேல் மக்களையும் எண்ணிக்கையில் பெருகச் செய்தார். அவர்கள் ஆள்பலம் மிக்கவர் ஆயினர்.
21 இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்.
22 பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, "பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழவிடுங்கள்" என்று அறிவித்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×