Bible Versions
Bible Books

Nehemiah 1 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

1 எல்கியாசின் மகன் நெகேமியா கூறியதாவது: அர்தக்சேர்செஸ் அரசரது ஆட்சியின் இருபதாம் ஆண்டு கஸ்லேயு மாதத்தில் நான் சூசா என்னும் கோட்டையில் இருந்தேன்.
2 அப்பொழுது என் சகோதரரில் ஒருவனான அனானியும், யூதாவைச் சேர்ந்த சில ஆடவரும் என்னிடம் வந்தனர்; அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்த யூதர்களைப் பற்றியும் யெருசலேமைப் பற்றியும் நான் அவர்களிடம் கேட்டேன்.
3 அதற்கு அவர்கள், "அடிமைத்தனத்தினின்று தம் நாடு திரும்பி வந்திருந்தோர் பெருந்துயரமும் சிறுமையும் உற்றிருக்கிறார்கள். யெருசலேமின் மதில்கள் பாழடைந்து போயின; அதன் வாயில்கள் தீக்கிரையாகி விட்டன" என்று கூறினர்.
4 இதைக் கேள்வியுற்றதும் நான் உட்கார்ந்து அழ ஆரம்பித்தேன். பல நாள் துக்கம் கொண்டாடி, நோன்பு காத்து, விண்ணகக் கடவுளை நோக்கி மன்றாடினேன்:
5 விண்ணகக் கடவுளான ஆண்டவரே, பெரியவரே, அஞ்சுதற்குரியவரே, உமக்கு அன்பு செய்து உம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோரோடு உடன்படிக்கை செய்து, அதை மாறா அன்புடன் நிறைவேற்றுபவரே, உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.
6 உம் ஊழியராகிய இஸ்ராயேல் மக்களுக்காக இங்கே அடியேன் இரவும் பகலும் உம் திருமுன் மன்றாடி வருகிறேன். நீர் என் மீது கருணைக் கண்களைத் திருப்பி, என் மன்றாட்டுக்குச் செவிமடுத்தருளும். இஸ்ராயேல் மக்கள் உமக்கு எதிராகச் செய்துள்ள பாவங்களையும் அறிக்கையிடுகிறேன். நானும் என் தந்தை வீட்டாரும் பாவம் புரிந்து விட்டோம்.
7 நாங்கள் உலக மாயையினால் மயங்கி ஏமாந்து, உம் அடியான் மோயீசன் வழியாக நீர் அருளிய உமது கட்டளையையும் வழிபாட்டு முறைகளையும் நீதி முறைமைகளையும் பின்பற்றவில்லை.
8 நீர் உம் அடியான் மோயீசனை நோக்கி, 'நீங்கள் நமது கட்டளையை மீறி நடந்தால், நாம் உங்களைப் புறவினத்தார் நடுவே சிதறிடிப்போம்.
9 ஆயினும் நீங்கள் நம்மிடம் திரும்பி நம் கட்டளைகளைப் பின்பற்றி நடப்பீர்களாகில், நீங்கள் உலகின் கடைக் கோடிக்குத் தள்ளுண்டு போகப்பட்டிருந்தாலும் கூட நாம் அங்கிருந்து உங்களை ஒன்று நாம் திருப்பெயர் விளங்கும் பொருட்டு, நாம் தேர்ந்து கொண்ட இடத்திற்கே உங்களைக் கொண்டுவருவோம்' என்று வாக்களித்ததை நினைவு கூர்ந்தருளும்.
10 உமது பேராற்றலாலும் கைவன்மையினாலும் நீர் மீட்ட உம் மக்களும் உழியர்களும் இவர்களே.
11 எனவே, ஆண்டவரே, உம் ஊழியனான அடியேனின் மன்றாட்டையும், உமது திருப்பெயருக்கு அஞ்சி நடக்க விரும்புகிற உம் ஊழியர்களின் மன்றாட்டையும் கேட்டருளும். அடியேனை இன்று வழிநடத்தி, இவ்வரசர் முன்னிலையில் எனக்கு இரக்கம் கிடைக்கச் செய்தருளும்."அப்பொழுது நான் அரசருக்கு மேசை ஊழியம் செய்து வந்தேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×