Bible Versions
Bible Books

Isaiah 1 (ECTA) Ecumenical Bible for Tamil Language

1 உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர் யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில் யூதா, எருசலேம் என்பவற்றைக் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி:
2 விண்வெளியே கேள்; மண்ணுலகே செவிகொடு; ஆண்டவர் திருவாய் மலர்ந்தருளுகின்றார்; பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்; அவர்களோ எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்.
3 காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை.
4 ஐயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது; அநீதி செய்வோரின் கூட்டம் இது; தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது; கேடுகெட்ட மக்கள் இவர்கள்; ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்; இஸ்ரயேலின் தூயவரை அவமதித்துவிட்டார்கள்; அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள்.
5 நீங்கள் ஏன் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்? என் கையால் பட்ட அடி போதாதா? உங்கள் தலையெல்லாம் வடுக்கள்; இதயமெல்லாம் தளர்ச்சி.
6 உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை; ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன; அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை.
7 உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது; உங்கள் நகரங்கள் நெருப்புக்கு இரையாயின; வேற்று நாட்டினர் உங்கள் கண்ணெதிரே உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள்; வேற்று நாட்டினரால் வீழ்த்தப்பட்ட உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது.
8 மகள் சீயோன் திராட்சைத் குடில் போன்றும் வெள்ளரித் குடிசை போன்றும் முற்றுகையிடப்பட்ட நகரம் போன்றும் கைவிடப்பட்டாள்.
9 படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும் எஞ்சியிருக்கச் செய்யாவிடில் சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம். கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.
10 எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாயிருக்கின்றனர்; நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்; அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.
11 "எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?" என்கிறார் ஆண்டவர். ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன; காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை.
12 நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றையெல்லாம் கொண்டு வந்து என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்?
13 இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டுவர வேண்டாம்; நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது; நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை, ஓய்வுநாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன்.
14 உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும், என் உள்ளம் வெறுக்கின்றது; அவை என் மேல் விழுந்த சுமையாயின; அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன்.
15 என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும் போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்; நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பதில்லை; உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன.
16 உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்;
17 நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.
18 "வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்" என்கிறார் ஆண்டவர்; "உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும்.
19 மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால்; நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.
20 மாறாக, இணங்க மறுத்து எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்; ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்.
21 உண்மையாய் இருந்த நகரம், எப்படி விலைமகள் போல் ஆயிற்று! முன்பு அந்நகரில் நேர்மை நிறைந்திருந்தது; நீதி குடி கொண்டிருந்தது; இப்பொழுதோ, கொலைபாதகர் மலிந்துள்ளனர்.
22 உன் வெள்ளி களிம்பேறிற்று; உன் மதுபானம் நீர்க்கலப்பாயிற்று.
23 உன் தலைவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்; திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்; கையூட்டு வாங்குவதற்கு ஒவ்வொருவனும் ஏங்குகின்றான். திக்கற்றோருக்கு அவர்கள் நீதி வழங்குவதில்லை; கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.
24 ஆதலால், படைகளின் ஆண்டவரும் இஸ்ரயேலின் வல்லவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் எதிரிகளைப் பழிவாங்குவேன்; என் பகைவர்மேலுள்ள சீற்றத்தைத் தீர்த்துக்கொள்வேன்.
25 உனக்கு நேராக என் கைகளை நீட்டுவேன்; உன்னை நன்றாகப் புடமிட்டு உன் களிம்பை நீக்குவேன்; உன்னிடமுள்ள உலோகக் கலவை அனைத்தையும் நீக்குவேன்.
26 முன்னாளில் இருந்தது போலவே உன் நீதிபதிகளைத் திருப்பிக் கொணர்வேன்; தொடக்க காலத்தில் இருந்தது போலவே உன் ஆலோசகர்களை மீண்டும் தருவேன்; அப்பொழுது எருசலேம் "நீதியின் நகர்" எனப் பெயர் பெறும்; "உண்மையின் உறைவிடம்" எனவும் அழைக்கப்படும்.
27 நீதி சீயோனை மீட்கும்; நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும்.
28 ஆனால் வன்முறையாளரும் பாவிகளும் ஒருங்கே அழிந்தொழிவர்; ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள் அனைவரும் இல்லாதொழிவர்;
29 நீங்கள் நாடி வழிபட்ட தேவதாரு மரங்களை முன்னிட்டு மானக்கேடு அடைவீர்கள்; நீங்கள் தெரிந்து கொண்ட சோலைகளை முன்னிட்டு நாணுவீர்கள்.
30 ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்த தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்; நீரின்றி வாடிப்போகும் சோலையைப் போலவும் இருப்பீர்கள்;
31 வலிமை மிக்கவன் சணற் கூளம் போலாவான்; அவனுடைய கைவேலைப்பாடும் தீப்பொறியாகும். அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்; நெருப்புத் தணலை அணைப்பார் எவரும் இரார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×