Bible Versions
Bible Books

Acts 2 (ECTA) Ecumenical Bible for Tamil Language

1 பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.
2 திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.
3 மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள்.
4 அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.
5 அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர்.
6 அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர்.
7 எல்லோரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா?
8 அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?" என வியந்தனர்.
9 பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்,
10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும்,
11 யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! "என்றனர்.
12 எல்லாரும் மலைத்துப்போய் இதன் பொருள் என்னவென்று ஒருவரோடொருவர் கேட்டவாறு மனம் குழம்பி நின்றனர்.
13 இவர்கள் இனிய மதுவை நிரம்பக் குடித்துள்ளனர் என்று மற்றவர்கள் கிண்டல் செய்தனர்.
14 அப்பொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்; "யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள்.
15 நீங்கள் நினைப்பது போல் இவர்கள் குடிவெறியில் இருப்பவர்களல்ல. இப்போது காலை ஒன்பது மணிதான் ஆகிறது.
16 காணுகின்ற காட்சி இறைவாக்கினர் யோவேல் கூறிய .
17 அவர் மூலம் கடவுள் கூறியது; 'இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளையும் காண்பர்.
18 அந்நாள்களில் உங்கள் பணியாளர் பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். அவர்களும் இறைவாக்கு உரைப்பர்.
19 இன்னும் மேலே வானத்தில் அருஞ்செயல்களையும் கீழே வையகத்தில் இரத்தம், நெருப்பு, புகைப்படலம் ஆகிய அடையாளங்களையும் கொடுப்பேன்.
20 ஒளிமயமான பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்ளே கதிரவன் இருண்டு போகும்; நிலவோ இரத்த நிறமாக மாறும்.
21 அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச் சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப் பிழைப்பர்.'
22 இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்லசெயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக்காண்பித்தார். இது அறிந்ததே.
23 கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்துக்கொன்றீர்கள்.
24 ஆனால் கடவுள் அவரை மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.
25 தாவீது அவரைக்குறித்துக் கூறியது; 'நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன்.
26 இதனால் என் இதயம் பேறுவகைகொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும்.
27 ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழியைக் காணவிடமாட்டீர்.
28 வாழ்வின்வழியை நான் அறியச்செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.'
29 ";சகோதர சகோதரிகளே, நமது குல முதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது.
30 அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார்.
31 அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, 'அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்' என்று கூறியிருக்கிறார்.
32 கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.
33 அவர் கடவுளின் உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.
34 விண்ணுலகிற்கு உயர்த்தப்பட்டவர் தாவீது .
35 ஏனெனில், 'ஆண்டவர் என் தலைவரிடம், "நான் உம் பகைவரை உமக்குக் கால்மனையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும் "எனக் கூறினார் ' என்று அவரே சொல்கிறாரே.
36 ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்."
37 அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து, "சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.
38 அதற்குப் பேதுரு, அவர்களிடம், "நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்.
39 ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது" என்றார்.
40 மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, "நெறிக்கெட்ட தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தினார்.
41 அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப்பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு .
42 அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது.
43 திருத்தூதர் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன.
44 நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்.
45 நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர்.
46 ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேறுவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள்.
47 அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×