Bible Versions
Bible Books

Proverbs 1 (ECTA) Ecumenical Bible for Tamil Language

1 தாவீதின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமாகிய சாலமோனின் நீதிமொழிகள்.
2 இவற்றைப் படிப்பவர் ஞானமும் நற்பயிற்சியும் பெறுவர்; ஆழ்ந்த கருத்தடங்கிய நன்மொழிகளை உணர்ந்து கொள்வர்;
3 நீதி, நியாயம், நேர்மை நிறைந்த விவேக வாழ்க்கையில் பயிற்சி பெறுவர்;
4 அறிவுற்றோர் கூரறிவு பெறுவர்; இளைஞர் அறிவும் விவேகமும் அடைவர்.
5 ஞானமுள்ளோர் இவற்றைக் கேட்டு அறிவில் இன்னும் தேர்ச்சியடைவர்; விவேகிகள் அறிவுரை கூறும் திறமை பெறுவர்;
6 நீதிமொழிகளையும் உவமைகளையும் ஞானிகளின் நன்மொழிகளையும் புதிர் மொழிகளையும் அவர்கள் உய்த்துணர்வர்.
7 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்.
8 பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி; உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே;
9 அவை உன் தலைக்கு அணிமுடி; உன் கழுத்துக்கு மணிமாலை.
10 பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்; நீ அவர்களுடன் போக இணங்காதே.
11 அவர்கள் என்னைப் பார்த்து, "எங்களோடு வா; பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்; யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்;
12 பாதாளத்தைப்போல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல, நாமும் அவர்களை முழமையாக விழுங்குவோம்.
13 எல்லா வகையான அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்; கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம்.
14 நீ எங்களோடு சேர்ந்துகொள்; எல்லாவற்றிலும் உனக்குச் சம பங்கு கிடைக்கும்" என்றெல்லாம் சொல்வார்கள்.
15 பிள்ளாய்! அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே; அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே.
16 அவர்கள் கால்கள் தீங்கிழைக்கத் துடிக்கின்றன; இரத்தம் சிந்த விரைகின்றன.
17 பறவையைப் பிடிக்க, அதன் கண்முன்னே அன்று, மறைவாகவே கண்ணி வைப்பார்கள்.
18 அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்; அவர்கள் ஒளிந்து காத்திருப்பது அவர்களையே அழிக்கும் பொறியாகி விடும்.
19 தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே; அந்தப் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.
20 ஞானம் வீதிகளிலிருந்து உரத்துக் கூறுகின்றது; பொதுவிடங்களிலிருந்து குரலெழுப்புகின்றது;
21 பரபரப்பு மிகுந்த தெருக்களிலிருந்து அழைக்கின்றது; நகர வாயிலிருந்து முழங்குகின்றது;
22 "பேதையரே, நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் உங்கள் பேதைமையில் உழல்வீர்கள்? இகழ்வார் இன்னும் எவ்வளவு காலம் இகழ்ச்சி செய்வதில் மகிழ்ச்சி காண்பர்? முட்டாள்கள் இன்னும் எவ்வளவு காலம் அறிவை வெறுப்புடன் நோக்குவார்கள்?
23 என் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வீர்களானால், நான் என் உள்ளத்திலிருப்பதை உங்களுக்குச் சொல்வேன்; என் செய்தியை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24 நான் கூப்பிட்டேன், நீங்களோ செவிசாய்க்க மறுத்தீர்கள்; உங்களை அரவணைக்கக் கையை ; எவரும் கவனிக்கவில்லை.
25 என் அறிவுரைகளுள் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை; என் எச்சரிக்கை அனைத்தையும் புறக்கணித்தீர்கள்.
26 ஆகையால், உங்களுக்கு இடுக்கண் வரும்போது, நான் நகைப்பேன்; உங்களுக்குப் பெருங்கேடு விளையும்போது ஏளனம் செய்வேன்.
27 பேரிடர் உங்களைப் புயல் போலத் தாக்கும்போது, இடுக்கண் உங்களைச் சுழற்காற்றென அலைக்கழிக்கும்போது, துன்பமும் துயரமும் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்போது, நான் எள்ளி நகையாடுவேன்.
28 அப்பொழுது, நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள்; நான் பதிலளிக்க மாட்டேன்; ஆவலோடு என்னை நாடுவீர்கள்; ஆனால் என்னைக் காணமாட்டீர்கள்.
29 ஏனெனில், நீங்கள் அறிவை வெறுத்தீர்கள்; ஆண்டவரிடம் அச்சம் கொள்வதில் உங்களுக்கு விருப்பமில்லை
30 நீங்கள் என் அறிவுரையை ஏற்கவில்லை; என் எச்சரிக்கை அனைத்தையும் அவமதித்தீர்கள்.
31 நீங்கள் உங்கள் நடத்தையின் பயனைத் துய்ப்பீர்கள்; சூழ்ச்சி செய்து நீங்களே சலித்துப் போவீர்கள்.
32 பேதையரின் தவறுகள் அவர்களையே கொன்றுவிடும்; சிறுமதியோரின் தற்பெருமை அவர்களை அழித்துவிடும்.
33 எவர் எனக்குச் செவி கொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்; தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார். "
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×