Bible Books

:

1. எலியாசு செய்த அனைத்தையும், அவர் பாவாலின் தீர்க்கதரிசிகள் அனைவரையும் கொன்று குவித்த விதத்தையும் ஆக்காப் ஜெசாபேலுக்கு அறிவித்தான்.
2. அப்பொழுது ஜெசாபேல் எலியாசிடம் தூதரை அனுப்பி, "நீ தீர்க்கதரிசிகளைக் கொன்றது போல் நானும் நாளை இந்நேரத்திற்குள் உன் உயிரை வாங்காதிருந்தால், தேவர்கள் எனக்குத் தகுந்த தண்டனை கொடுக்கட்டும்" என்று சொல்லச் சொன்னான்.
3. எனவே எலியாசு அதற்கு அஞ்சிப் பயணப்பட்டுத் தன் மனம் போனபோக்கில் சென்று யூதாவைச் சேர்ந்த பெர்சபியை அடைந்தார். அங்கே தம் ஊழியனை விட்டுவிட்டு,
4. பாலைவனத்தில் ஒருநாள் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து, தாம் சாகவேண்டுமெனக் கோரி, "ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும், ஏனெனில் நான் என் முன்னோரை விட நல்லவன் அன்று" என்று வேண்டினார்.
5. பின்னர் அச்சூரைச் செடியின் நிழலில் அவர் படுத்து உறங்கினார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் ஒருவர் அவரைத் தட்டி எழுப்பி, "எழுந்து சாப்பிடு" என்றார்.
6. அவர் விழித்துப் பார்க்க, இதோ தணலிலே சுட்ட ஓர் உரொட்டியும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு குடித்தபின் திரும்பவும் படுத்துத் தூங்கினார்.
7. ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறையும் வந்து அவரைத் தட்டி எழுப்பி," எழுந்து சாப்பிடு. ஏனெனில், நீ இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டியிருக்கிறது" என்றார்.
8. அப்பொழுது அவர் எழுந்து உண்டு குடித்தார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர் இரவு பகலாய் நாற்பது நாள் நடந்து, ஓரேப் என்ற கடவுளின் மலையை அடைந்தார்.
9. அவர் அங்கு வந்தபின், ஒரு குகைக்குள் தங்கியிருந்தார். அப்பொழுது ஆண்டவர் அவரை நோக்கி, "எலியாசு, நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று வினவினார்.
10. அதற்கு அவர் "சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் மாட்டு மிகுந்த ஆர்வ்ம் கொண்டவனாய் இருக்கிறேன். ஏனெனில் இஸ்ராயேல் மக்கள் உமது உடன்படிக்கையையும் புறக்கணித்து விட்டனர்; உமது பலிபீடங்களையும் தகர்த்து உம் இறைவாக்கினரையும் வாளால் வெட்டிக் கொன்றுவிட்டனர். நான் ஒருவன் மட்டும் எஞ்சியிருக்க என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே" என்றார்.
11. அப்பொழுது அவர், "நீ வெளியே வந்து ஆண்டவருக்கு முன்பாக மலையின்மேல் நில்; ஏனெனில், ஆண்டவர் இதோ கடந்து செல்கிறார்" என்றார். அப்பொழுது ஆண்டவருக்கு முன்பாகக் குன்றுகளைப் பெயர்த்துக் கொண்டும், கற்பாறைகளைப் பிளந்துகொண்டும் வலுத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆயினும் அக்காற்றில் ஆண்டவர் இருக்கவில்லை. காற்றுக்குப் பின் நில நடுக்கம் ஏற்பட்டது; நில நடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை.
12. நில நடுக்கத்துக்குப்பின் தீ கிளம்பிற்று; தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் தென்றலின் மெல்லிரைச்சல் உண்டானது.
13. அதை எலியாசு கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது," எலியாசு, நீ அங்கே என்ன செய்கிறாய்?" என்ற குரல் கேட்டது. அதற்கு எலியாசு மறுமொழியாக,
14. சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர்மாட்டு மிகுந்த ஆர்வம் கொண்டவனாய் இருக்கிறேன்; ஏனெனில் இஸ்ராயேல் மக்கள் உமது உடன்படிக்கையைப் புறக்கணித்துவிட்டனர்; உம் பலிபீடங்களையும் தகர்த்து உம் இறைவாக்கினரையும் வாளால்வெட்டிக் கொன்னு விட்டனர். நான் ஒருவன் மட்டும் எஞ்சியிருக்க, என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்றார்.
15. அப்பொழுது ஆண்டவர் அவரை நோக்கி, "பாலைவனம் மூலம் நீ வந்த வழியே திரும்பித் தமாஸ்குவுக்குச் செல். அவ்விடம் சேர்ந்தவுடன் சீரியாவுக்கு அரசனாக அசாயேலை அபிஷுகம் செய்.
16. பிறகு நாம்சியின் மகன் ஏகுவை இஸ்ராயேலுக்கு அரசனாகவும் அபேல்மேவுலா ஊரானான சாபாத்தின் மகன் எலிசேயுவை உனக்குப் பதிலாய் இறைவாக்கினராகவும் அபிஷுகம் செய்.
17. அசாயேலின் வாளுக்குத் தப்பினவன் எவனோ அவனை ஏகு கொன்று போடுவான். ஏகுவின் வாளுக்குத் தப்பினவனையோ எலிசேயு கொன்று போடுவான்.
18. ஆயினும் பாவால் முன்னிலையில் முழந்தாட்படியிடாதவர்களும், கையை முத்தி வணங்காதவர்களுமான ஏழாயிரம் பேரை நாம் இஸ்ராயேலில் விட்டு வைப்போம்" என்றார்.
19. அப்படியே எலியாசு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, பன்னிரு ஏர் பூட்டி உழுத சாபாத்தின் மகன் எலிசேயுவைக் கண்டார். அவன் பன்னிரு ஏரில் ஒன்றை ஓட்டிக்கொண்டிருந்தான். எலியாசு அவனிடம் சென்று தம் போர்வையை அவன் மேல் போட்டார்.
20. உடனே எலிசேயு மாடுகளை விட்டுவிட்டு எலியாசைப் பின்சென்றார். "நான் என் தாய் தந்தையரிடம் விடைபெற்று வர அனுமதி கொடும்; அதற்குப் பின் உம்மைத் தொடர்ந்து வருகிறேன்" என்றார். அதற்கு அவர், "போய் வா; நான் செய்ய வேண்டியதை உனக்குச் செய்து விட்டேன்" என்றார்.
21. எலிசேயு எலியாசை விட்டு வந்து, ஒரு ஜோடி ஏர் மாடுகளைப் பிடித்து அடித்துத் தாம் உழுத கலப்பையைக் கொண்டு இறைச்சியைச் சமைத்து மக்களுக்குப் பரிமாற, அவர்களும் அதை அருந்தினர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாசைப் பின் சென்று அவருக்கு ஏவல் புரிந்து வந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×