Bible Books

8
:
-

1. அன்றே அசுவேருஸ் அரசன் யூதர்களின் பகைவனான ஆமானுடைய வீட்டை எஸ்தர் அரசிக்குத் கொடுத்தான். மார்தொக்கேயும் அரசனிடம் வந்தார். ஏனென்றால் அவர் தான் தன் சிற்றப்பன் என்று எஸ்தர் அரசனிடம் கூறியிருந்தாள்.
2. பின் அரசன் ஆமானிடமிருந்த தன் மோதிரத்தைக் கொண்டு வரச்சொல்லி, அதை மார்தொக்கேய்க்குக் கொடுத்தான். எஸ்தர் மார்தொக்கேயைத் தன் மாளிகைக்கு அதிகாரியாக நியமித்தாள்.
3. மேலும் எஸ்தர் இது போதாதென்று அரசனின் காலில் விழுந்து அழுது, ஆகாகியனான ஆமான் வஞ்சகமாயும் தந்திரமாயும் யூதருக்கு விரோதமாய்ச் செய்யக் கருதியிருந்த கொடிய திட்டங்களை விலக்கி விடுமாறு வேண்டினாள்.
4. அப்பொழுது அரசன் வழக்கப்படி கருணைக்கு அடையாளமாகத் தன் பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான். அதைக் கண்ட அரசி எழுந்து அரசன் முன் நின்று,
5. அரசர் எனக்குத் தயவு காட்டினால், நான் கூறுவது அவருக்குச் சரியாகத் தோன்றினால், அரசர் அருள் கூர்ந்து, தமது ஆட்சிக்குட்பட்ட நாடுகளிலெல்லாம் குடியிருக்கின்ற யூதர்களைக் காக்க வேண்டும். அவர்களை அழிக்க வேண்டும் என்று யூதர்களுடைய பகைவனும் வஞ்சகனுமான ஆமான் அனுப்பியுள்ள பழைய கட்டளைக் கடிதங்களைப் புதுக் கடிதங்களால் விலக்கி வைக்க வேண்டும் என்று தங்களைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.
6. ஏனென்றால் என் குல மக்கள் அழித்தொழிக்கப்படுவதை நான் எவ்வாறு பார்த்துக்கொண்டிருக்க முடியும்?" என்றாள்.
7. உடனே அசுவேருஸ் அரசன் எஸ்தர் அரசியையும் யூதரான மார்தொக்கேயையும் நோக்கி, "ஆமானுடைய வீட்டை இதோ எஸ்தருக்குக் கொடுத்தேன். அவன் யூதர்கள் மேல் கை வைக்க மனந் துணிந்தமையால் அவனைத் தூக்கிலிடக் கட்டளையிட்டேன்.
8. எனவே, நீங்கள் உங்கள் விருப்பப்படி என் பெயரால் யூதர்களுக்குக் கட்டளைக் கடிதங்கள் எழுதி அவற்றிலே என் மோதிர முத்திரையை இடுங்கள்" என்றான். ஏனென்றால் வழக்கப்படி அரசன் பெயரால் எழுதப்பட்டு அவனுடைய மோதிர முத்திரை இடப்பட்ட பத்திரத்தைச் செயலற்றதாக்க யாராலும் முடியாது.
9. சீபான் என்னும் மூன்றாம் மாதம் இருபத்து மூன்றாம் நாள் அரசனின் செயலர்கள் அழைக்கப்பட்டனர். இவர்கள் மார்தொக்கே விருப்பப்படி யூதர்களுக்கும் இந்தியா முதல் எத்தியோப்பியா வரை இருந்த நூற்றிருபத்தேழு மாநிலங்களின் சிற்றரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் நீதிபதிகளுக்கும், அந்தந்த நாட்டு யூதர்களும் ஏனைய மக்களும் பேசிவந்த மொழிகளில் கட்டளைக் கடிதங்களை எழுதி அனுப்பினர்.
10. அரசன் பெயரால் எழுதப்பட்ட அக் கடிதங்கள் அரசனின் மோதிர முத்திரையிடப்பட்டு, தூதுவர் வழியே அனுப்பப்பட்டன. இவர்கள் எல்லா மாநிலங்களுக்கும் சென்று பழைய கட்டளைக் கடிதங்கள் செயல் படாதவாறு செய்யும்படி புதுக் கடிதங்களுடன் விரைந்தனர்.
11. மேலும் தூதுவருக்கு அரசன் ஒரு கட்டளை கொடுத்திருந்தான். "நீங்கள் யூதர்கள் வாழ்ந்து வரும் ஒவ்வொரு நகருக்கும் சென்று அவர்கள் ஒன்று சேர்ந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ளும்படியும், தங்கள் பகைவரையும் அவர்களில் மனைவி, மக்கள் யாவரையும் கொன்று போட்டு அவர்களுடைய வீடுகளை அழித்துக் கொள்ளையிடும் படியும் தயாராயிருக்கச் சொல்ல வேண்டும்" என்பதுவே அக்கட்டளை.
12. யூதர்கள் தங்கள் பகைவர்களைப் பழிக்குப்பழி வாங்குவதற்கென்று எல்லா நாடுகளிலும் ஒருநாள் குறிக்கப்பட்டது. அது ஆதார் என்னும் மாதத்தின் பதின்மூன்றாம் நாளாகும்.
13. அக் கடிதத்தில் சொல்லப்பட்ட பொருளாவது: "யூதர்கள் தங்கள் பகைவர்களைப் பழிக்குப்பழி வாங்கத் தயாராயிருக்கிறார்களென்று அசுவேருசின் செங்கோல் நிழலில் வாழும் எல்லா நாட்டு மக்களுக்கும் இதனால் முன்னறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது" என்பதாம்.
14. செய்தி கொண்டு போகும் தூதுவர் விரைந்து சென்றனர். அந்தக் கட்டளை சூசா நகரிலும் பறைசாற்றப் பட்டது.
15. பின்னர் மார்தொக்கே அரண்மனையையும் அரச சமுகத்தையும் விட்டுப் புறப்பட்டு நதரத்தினுள் சென்றார். அப்பொழுது மார்தொக்கே ஊதா, நீலநிற அரச உடைகளும், தலையில் பொன்முடியும், தோளில் செந்நிறப் பட்டுப் போர்வையும் அணிந்திருந்தார். அதைக் கண்ட நகர மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர்.
16. யூதர்களோ புத்தொளி பெற்றவராய், பெருமையுடன் மகிழ்ச்சி கொண்டாடினர்.
17. அரசனின் கட்டளைக் கடிதம் சென்ற மாநிலங்கள், நகரங்கள் எங்குமிருந்த யூதர்கள் என்றுமில்லாத மகிழ்ச்சியால் பூரித்து, விருந்து உண்டு விழாக் கொண்டாடினர். அவர்களைப்பற்றிய அச்சம் நாட்டு மக்கள் அனைவரையும் எவ்வளவு பீடித்திருந்ததென்றால், வேறு இனத்தையும் பிற மதத்தையும் சேர்ந்த பலர் யூத நெறியிலும் யூத வழிபாட்டிலும் பங்கெடுக்க ஆரம்பித்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×