Bible Books

:

1. இஸ்ராயேல் என்னும் பெயரால் அழைக்கப்பட்டு, யூதாவின் வித்திலிருந்து புறப்பட்டு, ஆண்டவர் திருப்பெயரால் ஆணையிடுகிறவர்களும், உண்மையிலும் நீதியிலும் இஸ்ராயேலின் கடவுளை நினைவு கூராதவர்களுமான யாக்கோபின் வீட்டாரே, இவற்றைக் கேளுங்கள்;
2. ஏனெனில் பரிசுத்த நகரத்தினர் என்னும் பெயரால் அவர்கள் குறிக்கப்பட்டு வருகின்றனர்; இஸ்ராயேலின் கடவுள்மேல் ஊன்றியுள்ளனர்; சேனைகளின் ஆண்டவர் என்பது அவருடைய பெயர்.
3. முற்காலத்து நிகழ்ச்சிகளை அப்பொழுதிலிருந்தே அறிவித்தோம், நம் வாயினின்று அவை வெளிப்பட்டன; அவற்றை உங்கள் செவிகளில் புகுத்தினோம்; பின்பு, திடீரென நாம் அவற்றைச் செயல்படுத்தினோம், அவை நிகழ்ந்ததையும் கண்டீர்கள்.
4. நீ கடுமையானவன் என்றும், உன் கழுத்து இருப்புக் கம்பி என்றும், நெற்றி வெண்கலம் என்றும், நாம் முன்னமே அறிவோம்.
5. ஆகவே, நீ, 'என் சிலைகளே இவற்றைச் செய்தன, செதுக்கப்பட்ட உருவங்களும், வார்க்கப்பட்ட படிமங்களுமே இவற்றைத் திட்டம் செய்தன' என்று சொல்லாதபடி, முதலிலிருந்தே உனக்கு முன்னறிவித்தோம், நிகழா முன்பே அவற்றை உனக்குக் குறிப்பிட்டோம்.
6. நீ கேள்வியுற்றவை அனைத்தும், நிகழ்ந்தனவா இல்லையா என்று பார்; ஆனால் நீங்கள் அவற்றை அறிவிக்கிறீர்களா? நீ அறியாதவையும், நமக்குரியனவாய் வைக்கப் பட்டிருந்தவையுமான புதியனவற்றை இனி மேல் முன்னறிவிப்போம்.
7. இவை இப்பொழுது தான் படைக்கப்பட்டன, முற்காலத்து நிகழ்ச்சிகள் அல்ல; 'இதோ, முன்பே இவற்றை நான் அறிவேன்' என்று ஒரு வேளை நீ சொல்லாதவாறு, இன்று வரை இவற்றை நீ கேட்டதே இல்லை.
8. ஆம், இவற்றை நீ கேட்டதுமில்லை, அறிந்ததுமில்லை; அன்று முதல் உன் செவி திறக்கப்படவுமில்லை; ஏனெனில் நீ கண்டிப்பாய்க் கட்டளையை மீறுவாய் எனத் தெரியும், தாய் வயிற்றிலிருந்தே உன்னைக் கலகக்காரன் என்றழைத்தோம்.
9. ஆயினும் நமது திருப்பெயரை முன்னிட்டு நமது கோபத்தைத் தொலைவில் தள்ளுவோம்; நமது மகிமைக்காகவே உனக்குக் கடிவாளமிட்டு, நீ அழியாதபடி உன்னை நிறுத்துவோம்.
10. இதோ, உன்னைச் சுத்தமாக்கினோம், ஆனால் வெள்ளியைக் காய்ச்சுவது போலன்று; துன்பம் என்னும் உலையில் சுத்தம் செய்து, உன்னை நாம் தேர்ந்து கொண்டோம்.
11. நம்மை முன்னிட்டே, நம்மை யாரும் பழித்துரைக்காதபடி - நம்மை முன்னிட்டே இதைச் செய்வோம்; நமது மகிமையைப் பிறனொருவனுக்கு விட்டுக் கொடோம்.
12. யாக்கோபே, நாம் அழைத்திருக்கிற இஸ்ராயேலே, நமக்குச் செவிகொடு; நாமே அவர், முதலும் நாமே, முடிவும் நாமே.
13. நமது கை தான் பூமியை நிலைநிறுத்தினது, நமது வலக்கையே வான்வெளியை அளந்தது; நாம் அவற்றை அழைக்கும் போது, அவை யாவும் ஒருமிக்க வந்து நிற்கும்.
14. நீங்கள் யாவரும் ஒன்றுகூடி நாம் சொல்வதைக் கேளுங்கள்: அந்தத் தெய்வங்களுள் எது இவற்றை அறிவித்தது? ஆண்டவர் சீருசுக்கு அன்பு செய்தார், அவனும் அவருடைய விருப்பத்தைப் பபிலோனில் செயலாற்றுவான், அவருடைய கை வன்மையைக் கல்தேயரிடம் காட்டுவான்.
15. நாமே, சொன்னவர் நாமே; நாமே அவனை அழைத்து வந்தோம்; நாமே அவனை நடத்திக் கொண்டு வந்தோம், அவனது பாதையைச் செவ்வையாக்கினோம்.
16. நம்மிடம் அணுகி வந்து வந்து இதைக் கேளுங்கள்; முதலிலிருந்தே நாம் மறை பொருளாய்ப் பேசினதில்லை; இவை நிகழத்தொடங்கிய காலத்திலிருந்தே நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம்." இப்பொழுது கடவுளாகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகின்றனர்.
17. இஸ்ராயேலைக் குறித்து ஆண்டவர் திட்டமிட்டது: இஸ்ராயேலின் பரிசுத்தரும், உன்னுடைய மீட்பருமான ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "உனக்குப் பயனுள்ளவற்றைப் போதித்து நீ நடக்க வேண்டிய நெறியில் உன்னை நடத்துகின்ற உன் கடவுளாகிய ஆண்டவர் நாமே.
18. நம் கட்டளைகளைக் கடைப்பிடிக்க நீ மாத்திரம் முயற்சி எடுத்திருந்தால், உன் சமாதானம் ஆறு போலப் பெருக்கெடுத்திருக்கும், உன் நீதி கடலலைகள் போலப் பொங்கியிருக்கும்;
19. உன் வித்து கடற்கரை மணல்கள் போலும், உன் சந்ததி கரையோரத்துக் கற்கள் போலும் இருந்திருப்பர். அதனுடைய பெயர் நம் திருமுன்னிருந்து அழிந்திருக்காது, மறைந்திருக்காது."
20. பபிலோனிலிருந்து புறப்படுங்கள், கல்தேயாவை விட்டு வெளியேற்றுங்கள். உங்கள் விடுதலையை அக்களிப்பின் ஆரவாரத்தோடு அறிவியுங்கள், உலகின் எல்லைகள் வரை இச் செய்தியைப் பரப்புங்கள்; "தம் ஊழியனாகிய யாக்கோபை ஆண்டவர் மீட்டுக்கொண்டார்" என்று சொல்லுங்கள்.
21. அவர்களை அவர் பாலைநிலத்தின் வழியாய்க் கூட்டி வந்த போது அவர்கள் தாகத்தால் வருந்தவில்லை; அவர்களுக்கெனப் பாறையிலிருந்து தண்ணீர் புறப்படச் செய்தார், கற்பாறையைப் பிளந்தார், நீர்த்தாரைகள் பீறிட்டன.
22. பொல்லாதவர்களுக்குச் சமாதானம் இல்லை" என்கிறார் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×