Bible Books

:

1. பின்பு இதோ, சீயோன் மலைமீது செம்மறியானவர் நிற்கக்கண்டேன். அவரது பெயரையும் அவருடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியிலே பொறித்திருந்த நூற்று நாற்பத்து நாலாயிரம் பேர் அவரோடு இருந்தனர்.
2. பின் விண்ணினின்று ஒரு குரல் கேட்டது. அது பெருவெள்ளம் போலும், பேரிடி முழக்கம் போலும் ஒலித்தது. நான் கேட்ட குரல் யாழை மீட்டுவோர் எழுப்பும் இசைபோலும் இருந்தது.
3. அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாக அவர்கள் புதியதொரு பாடலைப் பாடினார்கள். மண்ணுலகினின்று மீட்கப்பட்ட நூற்று நாற்பத்து நாலாயிரம் பேரைத் தவிர மற்றெவரும் அந்தப் பாடலைக் கற்க இயலவில்லை.
4. இவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களை மாசுபடுத்தாதவர்கள்; கன்னிமை காத்தவர்கள். இவர்கள் செம்மறி செல்லுமிடமெல்லாம் அவரைத் தொடர்ந்து செல்பவர்கள். கடவுளுக்கும் செம்மறிக்கும் அர்ச்சிக்கப்பட்ட முதற்கனிகளாக மனித குலத்தினின்று மீட்கப்பட்டவர்கள்.
5. இவர்கள் வாயினின்று பொய் வெளிப்பட்டதில்லை. இவர்கள் மாசற்றவர்கள்.
6. பின் இன்னொரு வானதூதர் வானத்தில் உயரப் பறக்கக் கண்டேன். மண்ணில் வாழ்வோர்க்கும், இனம், குலம், மொழி, நாடு ஒவ்வொன்றிற்கும் அறிவிப்பதற்கு நித்திய நற்செய்தியை அவர் தாங்கிச் சென்றார்.
7. கடவுளுக்கு அஞ்சுங்கள், அவரை மகிமைப்படுத்துங்கள். அவர் தீர்ப்பிடும் நேரம் வந்துவிட்டது. விண்ணும் மண்ணும் தொழுங்கள்" என்று அவர் உரத்த குரலில் கூறினார்.
8. அவரைப் பின்தொடர்ந்த இன்னொரு வானதூதர், "வீழ்ந்தது, வீழ்ந்தது, பாபிலோன் மாநகர்; காமவெறி என்னும் தன் மதுவை நாடுகள் எல்லாம் குடிக்கச் செய்த பாபிலோன் வீழ்ச்சியுற்றது" என்றார்.
9. மூன்றாவது தூதர் ஒருவர் அவரைப் பின் தொடர்ந்து உரத்த குரலில் சொன்னதாவது: "விலங்கையும் அதன் சிலையையும் தொழுது, நெற்றியிலோ கையிலோ அடையாளம் பெற்றிருப்பவன்
10. எவனும் கடவுளுடைய கோபம் என்னும் மதுவைக் குடிக்கத்தான் வேண்டும். அது இறைவனது சினம்; அவர் தம் கிண்ணத்தில் கலப்பில்லாமல் வார்த்த மதுவே அது. அவன் பரிசுத்த வானதூதர் முன்னிலையிலும் செம்மறியின் முன்னிலையிலும் தீயாலும் கந்தகத்தாலும் வேதனைக்குள்ளாவான்.
11. அந்த வேதனையில் உண்டாகும் புகை என்றென்றும் மேலே எழுகிறது. அந்த விலங்கையும் அதன் சிலையையும் தொழுவோருக்கும், அதன் அடையாளத்தைப் பெறுவோருக்கும், இரவும் பகலும் ஓய்வு இராது.
12. ஆகவே, கடவுளுடைய கட்டளைகளையும், இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காக்கிற இறை மக்களிடம் மனவுறுதி இருக்கவேண்டும்.
13. பின்பு விண்ணினின்று ஒரு குரலைக் கேட்டேன். அக்குரல், "ஆண்டவருக்குள் இறப்பவர் பேறுபெற்றோர்; ஆம், அவர்கள் இனித் தங்கள் உழைப்பினின்று இளைப்பாறுவார்கள். ஏனெனில், அவர்கள் செய்த நன்மையே அவர்களோடு கூட வரும் என, தேவ ஆவி கூறுகிறது. இதை எழுதி வை' என்ற சொன்னது.
14. பின்னர் இதோ ஒரு வெண் மேகத்தையும், அதன் மேல் மனுமகனைப்போன்ற ஒருவர் வீற்றிருப்பதையும் கண்டேன். அவர் தலையில் ஒரு பொன் முடியும், கையில் கூரிய அரிவாளும் இருந்தன.
15. மற்றொரு வானதூதர் ஆலயத்தினின்று வெளி வந்து, மேகத்தின்மீது வீற்றிருப்பவரை நோக்கி, உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். அறவடைக் காலம் வந்துவிட்டது; மாநிலப் பயிர் முற்றிவிட்டது' என்று உரக்கக் கத்தினார்.
16. மேகத்தின்மீது வீற்றிருந்தவர் தமது அரிவாளை மாநிலத்தின்மீது வீசினார். மாநிலமும் அறுவடையாயிற்று.
17. வேறொரு வானதூதர் விண்ணிலுள்ள ஆலயத்திலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூரிய அரிவாள் இருந்தது.
18. இன்னுமொரு வானதூதர் பீடத்தினின்று வெளிவந்தார். அவர் நெருப்பின் மேல் அதிகாரம் உள்ளவர். கூரிய அரிவாள் ஏந்தியவரைப் பார்த்து 'உம் கூரிய அரிவாளை எடுத்து மாநிலத்தின் திராட்சைக் குலைகளைக் கொய்துவிடும்; கனிகள் பழுத்துவிட்டன' என்று உரக்கக் கத்தினார்.
19. ஆகவே, வானதூதர் மாநிலத்தின் மீது தம் அரிவாளை வீசி, மாநிலத்திராட்சைக் கொடியின் குலைகளைக் கொய்தார். கடவுளது கோபம் என்னும் பெரிய ஆலையில் அவற்றைப் போட்டார்.
20. நகருக்கு வெளியே உள்ள ஆலையிலே அவை மிதிக்கப்பட்டன. அந்த ஆலையினின்று பாய்ந்த இரத்தம் குதிரைகளின் கடிவாள உயரமளவு இருநூறு கல் தொலைவுக்குப் பாவியது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×