Bible Books

:

1. இஸ்ராயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்களாவார்: இவரே இஸ்ராயேலின் தலைமகன். ஆயினும் இவர் தம் தந்தையின் மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தியதால், தமது பிறப்புரிமையை இழந்தார்; இதனால் தலைமுறை அட்டவணையிலும் அவர் தலைமகனாக எண்ணப்படவில்லை. மாறாக அவ்வுரிமை இஸ்ராயேலின் மகன் யோசேப்பின் புதல்வர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
2. யூதா தம் சகோதரர்களுக்குள் ஆற்றல் படைத்தவராய் இருந்தார்; அரசர் அவரது குலத்திலேயே உதித்தார். இருந்த போதிலும் பிறப்புரிமை யோசேப்புக்கே கொடுக்கப்பட்டது.
3. ஏனோக், பெல்லு, எசுரோன், கார்மி என்பவர்களே இஸ்ராயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்கள்.
4. யோவேலின் புதல்வரில் ஒருவர் சமையா; இவருடைய மகன் பெயர் கோக்; கோக்கின் மகன் பெயர் செமெயி.
5. இவர் மிக்காவின் தந்தை; மிக்காவின் மகன் பெயர் ரெய்யா; செய்யா பால் என்ற மகனைப் பெற்றார்.
6. பாலின் மகன் பேரா என்று அழைக்கப்பட்டார். ரூபன் கோத்திரத்தின் தலைவராய் இருந்த பேராவை அசீரிய அரசன் தெல்காத்-பல்னசார் சிறைபிடித்துக் கொண்டு போனான்.
7. இவருடைய சகோரரும் இனத்தார் எல்லாரும் தத்தம் குடும்ப வரிசைப்படி கணக்கிடப்பட்டனர். அவர்களுக்கு எகியேல், சக்கரியாஸ் என்பவர்கள் தலைவர்களாய் இருந்தனர்.
8. யோவேலின் மகனான சம்மாவின் புதல்வன் ஆசாசுக்குப் பிறந்த பாலாவின் மக்கள் அரோவேர் முதல் நெபோ, பெல்மேயோன் என்ற நகர்கள் வரை வாழ்ந்து வந்தனர்.
9. மேலும் கிழக்கே யூப்ரட்டீஸ் நதி முதல் பாலைவனத்தின் எல்லை வரையிலும் வாழ்ந்து வந்தனர். ஏனெனில் கலாத் நாட்டிலே அவர்களுக்குக் கால்நடைகள் பல இருந்தன.
10. அவர்கள் சவுலின் ஆட்சிக் காலத்தில் ஆகாரியரோடு போரிட்டு அவர்களைக் கொன்று போட்டு, கலாத் நாட்டின் கிழக்குப் பகுதிகள் எங்கணும் அவர்கள் வாழ்ந்து வந்திருந்த கூடாரங்களில் குடியேறினார்கள்.
11. காத்தின் புதல்வரோ அவர்களுக்கு எதிரே பாசான் நாட்டில் செல்கா வரை வாழ்ந்து வந்தனர்.
12. அவர்களுக்கு யோவேல் தலைவராகவும், சாப்பான் துணைத் தலைவராகவும் பாசானில் விளங்கி வந்தார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் யானாயும் சாப்பாத்தும் இருந்தனர்.
13. அவர்களது குடும்ப வரிசைப்படி அவர்களுடைய சகோதரர் மிக்காயேல், மொசொல்லாம், சேபேயோராய், யாக்கான், சியே, எபேர் என்ற ஏழுபேர்.
14. இவர்கள் அபிகாயிலுடைய புதல்வர்கள். அபிகாயில் ஊரிக்குப் பிறந்தவர்; ஊரி யாராவுக்குப் பிறந்தவர்; யாரா கலாதுக்குப் பிறந்தவர்; இவர் மிக்காயேலுடைய மகன்; மிக்காயேல் எசேசியின் மகன்; இவர் ஏதோவின் மகன்; இவர் பூசுடைய மகன்.
15. மேலும் கூனியின் புதல்வரான அப்தியேலின் புதல்வர்கள் அவர்களுக்குச் சகோதரர்கள்; அப்தியேலின் புதல்வரோ தத்தம் குடும்பத்திற்குத் தலைவராய் இருந்தனர்.
16. அவர்கள் கலாதைச் சேர்ந்த பாசானிலும் பாசானுக்கு அடுத்த ஊர்களிலும், சாரோனைச் சேர்ந்த எல்லாப் புல்வெளிகளிலும் தங்கள் எல்லைகள் வரை வாழ்ந்து வந்தனர்.
17. யூதாவின் அரசர் யோவாத்தானின் ஆட்சிக்காலத்திலும், இஸ்ராயேல் அரசர் எரோபோவாமின் ஆட்சிக் காலத்திலும் இவர்கள் எல்லாரும் கணக்கிடப்பட்டனர்.
18. ரூபன் புதல்வரிலும் காத் சந்ததியாரிலும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிலும் வீரர்களின் தொகை நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று இருபது. இவர்கள் கேடயமும் வாளும் அணிந்து வில் ஏந்திப் போரிடப் பழகிப் படைக்குப் போகத் தக்கவர்களாய் இருந்தனர்.
19. அவர்கள் ஆகாரியரோடு போரிட்டனர். ஆனால் இத்துரேயரும் நாபீஸ், நொதாப் என்பவர்களும்,
20. ஆகாரியருக்குத் துணையாக வந்தனர். ஆயினும் ஆகாரியரும் அவர்களோடு இருந்த யாவரும் முன்சொல்லப்பட்ட இஸ்ராயேலர் கையில் ஒப்படைக்கப்பட்டனர். ஏனெனில் இஸ்ராயேலர் போர் செய்யும்போது கடவுளை மன்றாடினார்கள். அவரிடத்தில் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்ததால் கடவுள் அவர்களின் மன்றாட்டைக் கேட்டருளினார்.
21. அவர்கள் தங்கள் பகைவருக்குச் சொந்தமான ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், ஒரு லட்சத்து மனிதர்களையும் கைப்பற்றினர்.
22. பலர் காயம்பட்டு விழுந்து மடிந்தனர். ஏனெனில் ஆண்டவரே போரை நடத்திக் கொண்டிருந்தார். இஸ்ராயேலர் நாடு கடத்தப்படும் வரை அவர்கள் அங்கேயே வாழ்ந்து வந்தனர்.
23. மனாசேயின் பாதிக் கோத்திரத்து மக்களும் மிகப்பலராய் இருந்தமையால், பாசான் எல்லை முதல் பாகால் எர்மோன் வரை உள்ள நாட்டையும் சனிரையும் எர்மோன் மலையையும் தமது உரிமையாக்கிக் கொண்டனர்.
24. அவர்களுடைய குடும்பத்தலைவர்கள்: எப்பேர், ஏசி, ஏலியேல், எஸ்ரியேல், எரேமியா, ஒதொய்யா, எதியேல், ஆகியோரே. இவர்கள் ஆற்றல் மிக்கவராகவும் ஆண்மையுடையவராகவும் விளங்கினார்கள்.
25. ஆயினும் அவர்கள் தங்கள் முன்னோர் வழிபட்டு வந்த கடவுளை விட்டு அகன்று, அவர் தங்கள் முன்னிலையிலேயே அழித்துப்போட்டிருந்த புறவினத்தாரின் தெய்வங்களை வழிபட்டு முறைகெட்டுப் போயினர்.
26. எனவே இஸ்ராயேலின் கடவுள் அசீரியருடைய அரசன் பூலையும், தெல்காத்பல்னசாரையும் தூண்டி விட்டார். அவர்களோ ரூபனையும் காத்தையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தையும் நாடு கடத்தி, லகேலாவுக்கும் அபோருக்கும் ஆராவுக்கும் கோசான் நதிக்கும் கொண்டு போனார்கள். அங்கே அவர்கள் இன்றுவரை வாழ்ந்து வருகின்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×