Bible Books

:

1. அந்நாட்களில் எசேக்கியாசு நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தான். ஆமோசின் மகனும் இறைவாக்கினருமான இசயாசு அவனிடம் வந்து, "நீர் உமது வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்தும்: ஏனெனில், நீர் இனிப் பிழைக்க மாட்டீர், இறந்து போவீர் என்று ஆண்டவர் சொல்கிறார்" என்றார்.
2. எசேக்கியாசு சுவர்ப்பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரை நோக்கி,
3. ஆண்டவரே, நான் உம் திருமுன் மாசற்ற உள்ளத்துடன் உண்மையின் வழியில் நடந்து வந்ததையும், உம் திருவுளத்திற்கு உகந்ததையே செய்து வந்துள்ளதையும் நினைத்தருளும்" என்று வேண்டினான். பின்பு அதிகமாய்க் கண்ணீர் விட்டு அழுதான்.
4. இசயாசு முன்மண்டபத்தின் பாதியைக் கடப்பதற்குள் ஆண்டவர் அவருடன் பேசி,
5. நீ திரும்பிப்போய் என் மக்களின் தலைவனான எசேக்கியாசை நோக்கி, உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் சொல்கிறதாவது: உன் மன்றாட்டைக் கேட்டோம்; கண்ணீரையும் கண்டோம். இதோ உன்னைக் குணப்படுத்தினோம். மூன்று நாட்களில் நீ ஆண்டவரின் ஆலயத்துக்குப் போவாய்.
6. உன்னை இன்னும் பதினைந்து ஆண்டுகள் வாழச் செய்வோம். அதுவுமின்றி, உன்னையும் இந்நகரையும் அசீரிய அரசனின் கையினின்று மீட்டு, நம் வாக்குறுதியின் பொருட்டும். நம் ஊழியன் தாவீதின் பொருட்டும் இந்நகரைப் பாதுகாப்போம்' எனச் சொல்" என்றார்.
7. இசயாசு ஓர் அத்திப் பழக் குலையைக் கொண்டுவரச் சொன்னார். அவர்களும் அதைக் கொண்டு வந்து அவனது கொப்புளத்தின் மேல் வைக்கவே அவன் குணமடைந்தான்.
8. எசேக்கியாசு இசயாசை நோக்கி, "ஆண்டவர் எனக்கு நலம் அளிப்பார் என்பதற்கும், மூன்று நாட்களில் நான் ஆலயத்திற்குப் போவேன் என்பதற்கும் ஆண்டவர் எனக்கு என்ன அடையாளம் கொடுப்பார்?" என்று கேட்டிருந்தான்.
9. அதற்கு இசயாசு, "ஆண்டவர் தாம் சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவார் என்பதைக் காட்ட அவர் உமக்குக் கொடுக்கும் அடையாளமாவது: இப்பொழுது சூரிய நிழல் பத்துக் கோடுகள் முன்போக வேண்டுமா அல்லது அதே அளவு பின்போக வேண்டுமா? நீர் விரும்புவது என்ன?" என்று கேட்டார்.
10. அதற்கு எசேக்கியாசு, "நிழல் பத்துக் கோடுகள் முன்போகிறது எளிது; அப்படி வேண்டாம். நிழல் பத்துக் கோடுகள் பின் திரும்பிப்போக வேண்டும்" என்றான்.
11. அப்போது இறைவாக்கினர் இசயாசு ஆண்டவரை மன்றாடி, ஆக்காசினுடைய சூரியக் கடியாரத்தில் பத்துக் கோடுகள் முன்போயிருந்த நிழலானது பத்துக் கோடுகள் பின்னே வரச் செய்தார்.
12. அக்காலத்தில் பாபிலோனியரின் அரசன் பலாதானின் மகன் பெரோதாக் பலாதான் எசேக்கியாசுக்குக் கடிதங்களையும் காணிக்கைகளையும் அனுப்பி வைத்தான். ஏனெனில் எசேக்கியாசு நோயுற்றிருந்ததை அறிந்திருந்தான்.
13. தூதர்களின் வருகையினால் எசேக்கியாசு மகிழ்வுற்று, தன் நறுமணப்பொருள் கூடத்தையும், பொன்னையும், வெள்ளியையும், பலவகைப் பரிமளப் பொருட்களையும், தைல வகைகளையும், படைக்கலக் கூடத்தையும், தன் கருவூலங்களில் இருந்த யாவற்றையும் அவர்களுக்குக் காட்டினான். தன் அரண்மனையிலும், தன் நாட்டிலும் இருந்தவற்றில் அவன் அவர்களுக்குக் காண்பியாதது ஒன்றுமில்லை.
14. இறைவாக்கினர் இசயாசு எசேக்கியாசு அரசனிடம் வந்து, "அம்மனிதர்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து வந்தவர்கள்?" என்று கேட்டார். அதற்கு எசேக்கியாசு, "வெகு தூரத்திலிருக்கும் பாபிலோன் நகரிலிருந்து வந்திருக்கின்றார்கள்" என்று மறுமொழி தந்தான்.
15. அப்போது இசயாசு, "உம் அரண்மனையில் எதைப்பார்த்தனர்" என்று கேட்டார். அதற்கு எசேக்கியாசு, "அரண்மனையில் உள்ள அனைத்தையுமே பார்த்தனர். என் கருவூலங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றுமே இல்லை" என்றான்.
16. அப்பொழுது இசயாசு, "ஆண்டவர் சொல்வதைக் கேளும்:
17. இதோ நாட்கள் வரும். அப்போது உனது அரண்மனைப் பொருட்கள் முழுவதும், உன் முன்னோர் இன்று வரை சேகரித்து வைத்துள்ள யாவும், ஒன்றும் விடாமல் பாபிலோன் நகருக்குக் கொண்டு போகப்படும்.
18. மேலும், உமது வாரிசாய் நீர் பெற்றெடுக்கும் புதல்வரில் சிலர் சிறைப்படுத்தப்பட்டு பாபிலோன் அரசனின் அரண்மனையில் அண்ணகராய் இருப்பீர்' என்பதாம்" என்று சொன்னார்.
19. அப்பொழுது எசேக்கியாசு இசயாசை நோக்கி, "ஆண்டவர் பெயரால் நீர் சொன்னது எல்லாம் சரியே. என் வாழ்நாட்களிலாவது உண்மையும் அமைதியும் நிலவட்டும்" என்றான்.
20. எசேக்கியாசின் மற்றச் செயல்களும், அவனது பேராற்றலும், அவன் ஒரு குளத்தை வெட்டி வாய்க்கால் கட்டித் தண்ணீரை நகருக்குள் கொண்டு வந்ததுமாகிய அனைத்தும் யூதா அரசருடைய நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
21. எசேக்கியாசு தன் முன்னோரோடு துயிலடைந்த பின் அவனுடைய மகன் மனாசே அரியணை ஏறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×