Bible Books

:

1. {கோவிலுக்கான காணிக்கை} PS தாவீது அரசர் சபையார் அனைவரையும் நோக்கி, “என் மகன் சாலமோனை மட்டுமே கடவுள் தேர்ந்து கொண்டார். அவன் அனுபவமற்ற இளைஞன். செய்ய வேண்டிய பணியோ பெரிது. கட்டவிருக்கும் இல்லமோ மனிதனுக்கு அன்று, கடவுளாகிய ஆண்டவருக்கே!
2. நான் என்னால் முடிந்தவரைக்கும் என் கடவுளின் கோவிலுக்கென்று, பொன் வேலைக்குரிய பொன், வெள்ளி வேலைக்குரிய வெள்ளி, வெண்கல வேலைக்குரிய வெண்கலம், இரும்பு வேலைக்குரிய இரும்பு, மரவேலைக்குரிய மரம் ஆகியவற்றையும், பதிப்பதற்கான கோமேதகக் கற்கள். மாணிக்கக் கற்கள், படிகப்பச்சைக் கற்கள், எல்லாவகை விலையுயர்ந்த கற்கள், சலவைக் கற்கள் ஆகியவற்றையும் பெருவாரியாகச் சேர்த்து வைத்துள்ளேன். * 1 குறி 22:5
3. என் கடவுளின் கோவிலின் மேல் நான் வைத்துள்ள பற்றார்வத்தால், திருத்தலத்திற்கென்று நான் சேர்த்து வைத்துள்ள யாவற்றையும் தவிர, என் சொந்தக் கருவூலத்திலிருந்து என் கடவுளின் கோவிலுக்குப் பொன்னையும் வெள்ளியையும் வழங்குகிறேன். * 1 குறி 22:5
4. கோவிற்சுவர்களில் பொதிவதற்காக மூவாயிரம் தாலந்து ஓபீரின் பொன்னும் ஏழாயிரம் தாலந்து தூய வெள்ளியும் கொடுக்கிறேன்.
5. மற்றும் திறன் மிக்க கைவினைஞரால் செய்யப்பட வேண்டிய அனைத்துப் பணிக்காக பொன் வேலைக்காகப் பொன்னும், வெள்ளி வேலைக்காக வெள்ளியும் தருகிறேன். இன்று இப்பணிக்கெனத் தம் கையிலிருந்து தாராளமாக ஆண்டவருக்குக் கொடுப்பது வேறு யார்?” என்றார்.PE
6. PS அப்போது மூதாதைவீட்டுத் தலைவர்களும் இஸ்ரயேல் குலத் தலைவர்களும் ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களும் அரசப் பணிக்கான அலுவலர்களும் தன்னார்வக் காணிக்கை செலுத்தினார்கள்.
7. அவர்கள், கடவுளின் கோவில் வேலைக்கென்று, ஐயாயிரம் தாலந்து பொன்னும் பத்தாயிரம் பொற்காசுகளும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியும், பதினெட்டாயிரம் தாலந்து வெண்கலமும், ஓர் இலட்சம் தாலந்து இரும்பும் செலுத்தினார்கள்.
8. விலையுயர்ந்த கற்கள் வைத்திருந்தோர் ஆண்டவரின் இல்லக் கருவூலத்தில் சேர்ப்பதற்கென்று கேர்சோனியனான எகியேலின் கையில் கொடுத்தனர்.
9. அவர்களின் தன்னார்வக் காணிக்கையை முன்னிட்டு மக்கள் மகிழ்ந்தனர். ஏனெனில், அவர்கள் முழுமனத்தோடும் ஆர்வத்தோடும் ஆண்டவருக்குக் கொடுத்தனர். தாவீது அரசரும் பெரிதும் மகிழ்ந்தார்.PE
10. {தாவீது இறைவனைப் புகழ்தல்} PS ஆதலால், சபையார் அனைவரின் பார்வையில் தாவீது ஆண்டவரை வாழ்த்தினார். அவர் கூறியது: “எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவீராக!
11. ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப் பெற்றுள்ளீர்.
12. செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம்கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. * மத் 6:13
13. இப்பொழுது எங்கள் கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி உம் மாட்சிமிகு பெயரைப் போற்றுகிறோம்.PE
14. PS இவ்வாறு, இந்தத் தன்விருப்பக் காணிக்கையை அளிப்பதற்கான ஆற்றலை நாங்கள் பெறுவதற்கு, நான் யார்? என் மக்கள் யார்? யாவும் உம்மிடத்திலிருந்து வந்தவை. உம் கையினின்று நாங்கள் பெற்றுக்கொண்டவற்றையே நாங்கள் உமக்குக் கொடுத்துள்ளோம்.
15. உம் திருமுன் நாங்கள் எம் மூதாதையரைப் போலவே அந்நியரும் நாடோடிகளுமாய் இருக்கிறோம். மண்ணுலகில் எங்கள் வாழ்நாள்கள் நிழல் போன்றவை; நிலையற்றவை.
16. எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உம் புனித பெயருக்கென்று உமக்குக் கோவில் கட்டுவதற்கு நாங்கள் சேர்த்து வைத்துள்ள இந்தப் பெருங்குவியல் முழுமையும் உம் கையிலிருந்து வந்தது; உமக்கே உரியது.
17. என் கடவுளே, நீர் இதயத்தை ஆய்ந்தறிபவர் என்றும், நேரியனவற்றை நாடுபவர் என்றும் நான் அறிவேன். நான் நேரிய மனத்தினனாய்த் தாராளமனத்துடன் இவை அனைத்தையும் கொடுத்துள்ளேன். இங்கே குழுமியிருக்கும் உம் மக்களும் இப்பொழுது தாராள மனத்துடன் கொடுத்ததைக் கண்டு மகிழ்கிறேன்.
18. ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரயேல் என்னும் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, உம் மக்களின் இத்தகைய இதய நோக்கங்களையும் எண்ணங்களையும் என்றென்றும் காத்து, அவர்களின் நெஞ்சங்களை உம்பால் திருப்பியருளும்.
19. என் மகன் சாலமோன் உம் விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும், நியமங்களையும் கடைப்பிடித்து ஒழுகுவதற்கும், இவை அனைத்தையும் செய்து நான் வைத்துள்ள இந்த இல்லத்தைக் கட்டியெழுப்பவும் நிறைவான உள்ளத்தையும் அவனுக்கு அளித்தருளும்.”PE
20. PS பின்பு, தாவீது சபையார் அனைவரையும் நோக்கி, “உங்கள் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்துங்கள்” என்றார். உடனே சபையார் அனைவரும் தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரை வாழ்த்திப் பணிந்து தொழுதனர்; அரசனையும் வணங்கினர்.PE
21. PS அவர்கள் ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தினர். மறுநாள் அவர்கள் ஆண்டவருக்குரிய எரிபலியாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கிடாய்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தினர். அத்துடன் நீர்மப் படையல்களையும் இஸ்ரயேலர் யாவருக்காகவும் பல்வேறு பலிகளையும் செலுத்தினர்.
22. இவர்கள் அன்று உண்டு, குடித்து ஆண்டவர் திருமுன் பெரிதும் மகிழ்ந்தனர். தாவீதின் மகன் சாலமோனை இரண்டாம் முறையாக அரசன் ஆக்கினார்கள். ஆண்டவரின் பெயரால் அவரைத் தலைவராகவும் சாதோக்கைக் குருவாகவும் திருப்பொழிவு செய்தனர்.PE
23. PS அவ்வாறே, சாலமோனும் தம் தந்தை தாவீதுக்குப் பதிலாக ஆண்டவரின் அரியணையில் அமர்ந்து சிறப்பாக ஆட்சி செலுத்தினார். இஸ்ரயேலர் அனைவரும் அவருக்குப் பணிந்திருந்தனர்.
24. எல்லாத் தலைவர்களும், வீரர்களும், தாவீது அரசரின் புதல்வர் அனைவரும் சாலமோன் அரசரின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டனர். * 1 அர 2:12
25. ஆண்டவர் சாலமோனை உயர்த்தி, இஸ்ரயேலர் அனைவர் பார்வையிலும் பெருமைக்குரியவர் ஆக்கினார். அவருக்குமுன் இருந்த இஸ்ரயேல் அரசர் எவரும் பெறாத அரச மாண்பை அவருக்கு அளித்தார்.PE
26. {நிறைவுரை} PS இவ்வாறு, ஈசாயின் மகன் தாவீது இஸ்ரயேல் அனைத்தின் மேலும் ஆட்சி செலுத்தினார்.
27. அவர் இஸ்ரயேலில் ஆட்சி செலுத்திய நாள்கள் நாற்பது ஆண்டுகள்; எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார்.
28. அவர் முதிர்ந்த வயதினராய்ச் செல்வமும் மேன்மையும் பெற்று நெடுநாள்கள் வாழ்ந்தபின் இறந்தார். அவர் மகன் சாலமோன் அவருக்குப் பதிலாக ஆட்சி செலுத்தினார். * 2 சாமு 5:4-5; 1 குறி 3:4.
29. தாவீது அரசரின் செயல்கள், தொடக்கமுதல் இறுதிவரை, திருக்காட்சியாளர் சாமுவேலின் குறிப்பேட்டிலும், இறைவாக்கினர் நாத்தானின் குறிப்பேட்டிலும் திருக்காட்சியாளர் காத்தின் குறிப்பேட்டிலும் எழுதப்பட்டுள்ளன.
30. அக்குறிப்பேடுகளில் அவரது ஆட்சி பற்றியும், அவரது ஆற்றல் பற்றியும், அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள் பற்றியும் இஸ்ரயேலுக்கும் அதைச் சுற்றியிருந்த அரசுகளுக்கும் நேர்ந்தவை பற்றியும் காணக்கிடக்கின்றன.PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×