Bible Versions
Bible Books

Jonah 1 (ECTA) Ecumenical Bible for Tamil Language

1 அமித்தாயின் மகன் யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது.
2 அவர், "நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய், அதற்கு அழிவு வரப்போகிறது என்று அங்குள்ளோருக்கு அறிவி. அவர்கள் செய்யும் தீமைகள் என்முன்னே வந்து குவிகின்றன" என்றார்.
3 யோனாவோ ஆண்டவரிடமிருந்து தப்பியோட எண்ணித் தர்சீசுக்குப் புறப்பட்டார். அவர் யோப்பாவுக்குப் போய், அங்கே தர்சீசுக்குப் புறப்படவிருந்த ஒரு கப்பலைக் கண்டார்; உடனே கட்டணத்தைக் கொடுத்து விட்டு, ஆண்டவர் திருமுன்னின்று தப்பியோட அந்தக் கப்பலில் ஏறி, அதில் இருந்தவர்களோடு தர்சீசுக்குப் பயணப்பட்டார்.
4 ஆனால் ஆண்டவர் கடலில் கடுங்காற்று வீசும்படி செய்தார். கடலில் பெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று; கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது.
5 கப்பலில் இருந்தவர்கள் திகிலடைந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தம் தம் தெய்வத்தை நோக்கி மன்றாடலானார்கள். கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அவர்கள் அதிலிருந்த சரக்குகளைக் கடலில் தூக்கியெறிந்தார்கள். யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
6 கப்பல் தலைவன் அவரிடம் வந்து, "என்ன இது? இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாயே! எழுந்திரு. நீயும் உன் தெய்வத்தை நோக்கி வேண்டிக் கொள். ஒருவேளை அந்தத் தெய்வமாவது நம்மைக் காப்பாற்றலாம். நாம் அழிந்து போகாதிருப்போம்" என்றான்.
7 பிறகு கப்பலில் இருந்தவர்கள், "நமக்கு இந்தப் பெரும் தீங்கு யாரால் வந்தது என்று கண்டறியச் சீட்டுக் குலுக்குவோம்" என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். அவ்வாறே அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள்.
8 சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது. எனவே, அவர்கள் அவரை நோக்கி, "இப்பொழுது சொல். இந்தப் பெருந்தீங்கு யாரால் வந்தது? உன் வேலை என்ன? எங்கிருந்து வருகிறாய்? உன் நாடு எது? உன் இனம் எது?" என்று கேட்டார்கள்.
9 அதற்கு அவர், "நான் ஓர் எபிரேயன். நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரை வழிபடுபவன்" என்று சொன்னார்.
10 மேலும், தாம் அந்த ஆண்டவரிடமிருந்து தப்பியோடி வந்ததாகவும் கூறினார். எனவே, அவர்கள் மிகவும் அஞ்சி, "நீ ஏன் இப்படிச் செய்தாய், "என்று கேட்டார்கள்.
11 கடலில் கொந்தளிப்பு மேலும் கடுமையாகிக் கொண்டிருந்ததால் அவர்கள் யோனாவிடம், "கடல் கொந்தளிப்பு அடங்கும்படி நாங்கள் உன்னை என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார்கள்.
12 அதற்கு அவர், "நீங்கள் என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள். அப்பொழுது கொந்தளிப்பு அடங்கிவிடும்; நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். உங்களைத் தாக்கும் இந்தக் கடும்புயல் என்னால்தான் உண்டாயிற்று என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
13 ஆயினும், அவர்கள் கரை போய்ச் சேர மிகுந்த வலிமையுடன் தண்டு வலித்தனர்; ஆனால் அவர்களால் இயலவில்லை. ஏனெனில், கடலின் கொந்தளிப்பு மேலும் மிகுதியாகக் கொண்டேயிருந்தது.
14 அவர்கள் அதைக் கண்டு ஆண்டவரை நோக்கிக் கதறி, "ஆண்டவரே, இந்த மனிதனுடைய உயிரின் பொருட்டு எங்களை அழிய விட வேண்டாம்; குற்றமில்லாத ஒருவனைச் சாகடித்ததாக எங்கள் மீது பழி சுமத்தவேண்டாம். ஏனெனில், ஆண்டவராகிய நீரே உமது திருவுளத்திற்கேற்ப இவ்வாறு செய்கிறீர்" என்று சொல்லி மன்றாடினார்கள்.
15 பிறகு அவர்கள் யோனாவைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்; கடல் கொந்தளிப்பும் தணிந்தது.
16 அதைக் கண்டு அந்த மனிதர்கள் ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினார்கள். அவர்கள் ஆண்டவருக்குப் பலி செலுத்தினார்கள்; பொருத்தனைகளும் செய்து கொண்டார்கள்.
17 ஆண்டவர் ஏற்பாடு செய்திருந்த படியே ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிற்று. யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×