Bible Books

:

1. ஆண்டவர் எரெமியாசுக்கு அருளிய வாக்கு:
2. "நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ; அங்கு நம்முடைய வாக்கியங்களைக் கேட்பாய்."
3. அவ்வாறே நான் குயவன் வீட்டுக்குப் போனேன்; அவன் தன் சக்கரத்தினால் வேலை செய்து கொண்டிருந்தான்.
4. அவன் மண்ணால் வனையும் பாண்டம் சரியாக அமையாத போதெல்லாம், அவன் திரும்பவும் செய்ய முற்பட்டுத் தனக்குச் சரியெனத் தோன்றியவாறு அதனை வேறொரு கலமாகச் செய்தான்.
5. அப்பொழுது ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
6. இஸ்ராயேல் வீடே, இந்தக் குயவன் செய்ததைப் போல நாம் உனக்குச் செய்ய முடியாதா, என்கிறார் ஆண்டவர். இஸ்ராயேல் வீடே, இதோ, குயவன் கையில் இம்மண் எப்படியோ, அப்படியே நம் கையில் நீங்கள் இருக்கிறீர்கள்.
7. நாம் ஒரு நாட்டையோ ஓர் அரசையோ வேரோடு பிடுங்கி, தகர்த்து அழிக்கப் போவதாக அறிவித்திருக்கலாம்.
8. ஆனால் நாம் குறிப்பிட்ட அந்த நாடு தன் தீமையை விட்டுத் திரும்புமாயின், அதற்கு நாம் தீமை செய்ய நினைத்ததற்காக மனம் வருந்துவோம்.
9. அவ்வாறே நாம் ஒரு நாட்டையோ ஓர் அரசையோ கட்டி நிலைநாட்டப் போவதாக அறிவித்திருக்கலாம்.
10. ஆனால், அது நம் சொல்லைக் கேளாமல், நம் முன்னிலையில் தீமை செய்யுமானால் அதற்கு நன்மை செய்ய நினைத்ததற்காக நாம் மனம் வருந்துவோம்.
11. ஆகையால் இப்பொழுது நீ யூதாவின் மக்களையும் யெருசலேமின் குடிகளையும் நோக்கிச் சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் உங்களுக்கு ஒரு தீங்குச் செய்யக் கருதுகின்றோம்; உங்களுக்கு எதிராய் ஒரு திட்டம் தீட்டுகின்றோம். ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீய நெறியினின்று திரும்புங்கள்; உங்கள் நடத்தையையும் செயல்களையும் செவ்வைப்படுத்துங்கள்.'
12. ஆனால் அவர்கள், "சொல்லிப் பயனில்லை; நாங்கள் எங்களுடைய யோசனைகளையே பின்பற்றுவோம்; எங்களில் ஒவ்வொருவரும் அவரவருடைய தீய இதயத்தின் பிடிவாதப் போக்கிலேயே நடப்போம்' என்று சொல்லுகிறார்கள்.
13. "ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இத்தகைய காரியத்தைப் பற்றி யாரேனும் கேள்விப்பட்டதுண்டா என, புறவினத்தார்களிடையே கேட்டுப் பாருங்கள்; இஸ்ராயேலாகிய கன்னிகை மிகவும் அருவருப்பான காரியத்தைச் செய்தாள்.
14. லீபான் மலையிலுள்ள உறைநீர் பாறையை விட்.டு அற்றுப் போவதுண்டோ? மிக்க வேகமாய்ப் பாய்ந்திடும் குளிர்ந்த தண்ணீர் நிறுத்தப்படுவதுண்டோ?
15. நம் மக்களோ நம்மை மறந்துவிட்டார்கள்; பொய்த் தெய்வங்களுக்குத் தூபம் காட்டுகிறார்கள்; தங்கள் வழிகளிலும் பழைய சாலைகளிலும் தடுமாறினார்கள்; நெடுஞ்சாலையை விட்டுக் காட்டு வழிகளிலே சென்றார்கள்;
16. இவ்வாறு நடந்து, தங்கள் நாடு திகிலுக்குரியதாகவும், என்றென்றும் பழிக்கத் தக்கதாகவும் ஆக்கினர்; அவ்வழியாய்க் கடந்து செல்லும் ஒவ்வொருவனும் திகைத்துத் தனது தலையை அசைக்கிறான்.
17. கீழைக் காற்றைப் போல நாம் அவர்களை அவர்களின் பகைவர் முன் சிதறடிப்போம்; அவர்களுடைய துன்ப காலத்தில் அவர்களுக்கு நம் முகத்தைக் காட்டாமல் முதுகையே காட்டுவோம்."
18. அப்போது அவர்கள், "வாருங்கள், எரெமியாசுக்கு எதிராய்ச் சூழ்ச்சிகள் செய்வோம்; அர்ச்சகரிடமிருந்து சட்டம் அழியாது; ஞானியிடமிருந்து அறிவுரை போகாது; இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கு ஒழியாது. ஆதலால் வாருங்கள், நாவினால் அவனைத் தாக்குவோம்; அவன் வார்த்தைகளை நாம் பொருட்படுத்தலாகாது" என்று சொன்னார்கள்.
19. ஆண்டவரே, எனக்குக் காதுகொடும்; என் பகைவர்கள் சொல்வதைக் கேளும்;
20. நன்மைக்குத் தீமை செய்யலாமா? என் உயிருக்குக் குழி வெட்டியிருக்கிறார்களே! நான் அவர்களுக்கு நன்மையைக் கோரிடவும், உம் கோபத்தை அவர்களிடமிருந்து தடுத்து நீக்கவும் உம் முன்னிலையில் வந்து நின்றதை நினைத்தருளும்.
21. ஆதலால், அவர்களுடைய மக்களைப் பஞ்சத்திற்குக் கையளியும்; அவர்களை வாளுக்கு இரையாக்கும்; அவர்களின் மனைவிமார் பிள்ளையில்லாதவர்களாகவும், கைம்பெண்களாகவும் ஆகட்டும்; அவர்களின் கணவர்மார் கொள்ளை நோயால் சாகட்டும்; அவர்களுடைய வாலிபர்கள் போரில் வாளால் மடியட்டும்.
22. நீர் திடீரென அவர்கள்மேல் கொள்ளைக் கூட்டத்தைக் கொண்டு வந்து விடும் போது, அவர்களின் வீடுகளிலிருந்து கூக்குரல் கேட்கப்படுவதாக! ஏனெனில், அவர்கள் என்னைப் பிடிக்கப் படுகுழி வெட்டினார்கள்; என் கால்களுக்குக் கண்ணி வைத்தார்கள்.
23. ஆயினும், ஆண்டவரே, என்னைக் கொல்ல அவர்கள் செய்யும் சூழ்ச்சியை நீர் அறிவீர். அவர்களுடைய அக்கிரமத்தை மன்னியாதேயும்; அவர்கள் குற்றத்தை உம் பார்வையிலிருந்து போக்காதேயும்; அவர்கள் உம் முன்னிலையில் வீழ்ச்சியடைக! உமது கோபத்தின் காலத்தில் அவர்களைக் கொடுமையாய் நடத்தும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×