Bible Books

:

1. {அகிரிப்பா முன் பவுல் தம் நிலையை விளக்குதல்} PS அகிரிப்பா பவுலை நோக்கி, “நீர் உம் வழக்கை எடுத்துரைக்க அனுமதிக்கிறேன்” என்று கூறினார். உடனே பவுல் தமது கையை உயர்த்தித் தம் நிலையை விளக்கத் தொடங்கினார்;
2. “அகிரிப்பா அரசே! யூதர் எனக்கு எதிராகச் சாட்டும் அனைத்துக் குற்றங்களையும் பொறுத்த மட்டில் என் நிலையை இன்று உமக்குமுன் நான் விளக்கப் போகிறேன். இது எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பு என்று கருதுகிறேன்.
3. ஏனெனில், யூதருடைய முறைமைகளையும் அவர்களுடைய சிக்கல்களையும் குறித்து நீர் நன்கு அறிந்தவர். ஆகவே, நான் சொல்வதைப் பொறுமையுடன் கேட்குமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.
4. நான் இளமை முதல் என் இனத்தாரிடையே எருசலேமில் எப்படி வாழ்ந்து வந்தேன் என்பதை யூதரனைவரும் தொடக்கமுதல் அறிவர்.
5. நான் நமது சமயத்தில் மிகவும் கண்டிப்பான பரிசேயக் கட்சி முறைப்படி வாழ்ந்து வந்தேன் என்பதும் தொடக்கமுதல் அவர்களுக்கே தெரியும்; விரும்பினால் அவர்களே அதற்கு சான்று கூறலாம்.
6. நம் மூதாதையருக்குக் கடவுள் அளித்த வாக்குறுதியை நான் எதிர்நோக்குவதால் தான் இப்போது விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளேன். * திப 8:3; பிலி 3:5
7. இந்த வாக்குறுதி நிறைவேறும் என்று எதிர்நோக்கி நம் பன்னிரு குலத்தினரும் கடவுளை அல்லும் பகலும் ஆர்வத்துடன் வழிபடுகின்றனர். அரசே! இந்த எதிர்நோக்கை நானும் கொண்டுள்ளதால் யூதர்கள் என்மீது குற்றம் சுமத்துகின்றார்கள்.
8. கடவுள் இறந்தோரை உயிர்த்தெழச் செய்கிறார் என்பதை இங்கிருக்கும் நீங்கள் ஏன் நம்ப முடியாத ஒன்றாகக் கருதுகிறீர்கள்?
9. நானுங்கூட நாசரேத்து இயேசுவுக்கு எதிராகப் பல செயல்களைச் செய்யவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன்.
10. இதைத்தான் நான் எருசலேமில் செய்தேன். இறைமக்கள் பலரைச் சிறையிலடைக்கத் தலைமைக் குருக்களிடம் அதிகாரம் பெற்றேன். அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க நானும் என் இசைவைத் தெரிவித்தேன். * திப 8:3; 22:4,5
11. கடவுளைப் பழித்துரைக்க அவர்களைப் பலமுறை நான் கட்டாயப்படுத்தினேன்; தொழுகைக் கூடங்களிலும் அவர்களைத் தண்டனைக்கு ஆளாக்கினேன். மேலும், நான் வெளியே உள்ள நகரங்களுக்கும் சென்று, அங்குள்ளோர்மீது வெகுண்டெழுந்து அவர்களைத் துன்புறுத்தினேன். * திப 8:3; 22:4,5 PE
12. {பவுல் தம் அழைப்பைப் பற்றிக் கூறுதல்} PS “இந்நோக்கத்துடன் நான் தலைமைக் குருக்களிடம் அதிகாரமும் அனுமதியும் பெற்றுக் கொண்டு தமஸ்குவுக்குச் சென்றேன். * திப 8:3; 22:4,5
13. போகும் வழியில் நடுப்பகல் வேளையில், அரசே! கதிரவனை விட அதிகமாகச் சுடர் வீசிய ஒளி ஒன்று வானிலிருந்து தோன்றி என்னையும் என்னோடு வந்தவர்களையும் சுற்றி ஒளிர்ந்ததை நான் கண்டேன்.
14. நாங்களனைவரும் தரையில் விழுந்தோம். எபிரேய மொழியில், ‘சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? தாற்றுக்கோலை உதைப்பது உனக்குக் கடினமாயிருக்கும்’ என்று ஒரு குரல் ஒலித்ததைக் கேட்டேன்.
15. அதற்கு நான், ‘ஆண்டவரே நீர் யார்?’ என்று கேட்க அவர், ‘நீ துன்புறுத்தும் இயேசு நானே.
16. எழுந்து நிமிர்ந்து நில். என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே நான் உனக்குத் தோன்றினேன். நீ என்னைக் கண்டது பற்றியும் நான் உனக்குக் காண்பிக்கப் போவதைப்பற்றியும் சான்று பகர வேண்டும்.
17. உன் மக்களிடமிருந்தும், பிற இனத்தவரிடமிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன்; பிற இனத்தவரிடமே உன்னை அனுப்புவேன். * எசே 2:1,3
18. நீ அவர்களை இருளிலிருந்து ஒளிக்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து கடவுளிடத்துக்கும் திரும்புமாறு அவர்கள் கண்களைத் திறக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொள்வார்கள்; என்னிடம் நம்பிக்கை கொண்டு தங்களைத் தூயோராக்கிக் கொண்டவர்களோடு உரிமைப்பேறு அடைவார்கள்’ என்றார். * எசே 2:1,3 PE
19. {பவுல் யூதருக்கும் வேற்றினத்தாருக்கும் சான்று பகருதல்} PS “ஆகையால் அகிரிப்பா அரசே! அந்த விண்ணகக் காட்சிக்கு நான் கீழ்ப் படிந்தேன். * எசா 42:7,16
20. ஆகவே, முதலில் தமஸ்குவிலும் பின் எருசலேமிலும் யூதயோவின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்வோரிடமும் பிற இனத்தாரிடமும் சென்று அவர்கள் மனம் மாறி கடவுளிடம் திரும்ப வேண்டுமென்றும், மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் அவர்கள் காட்டவேண்டும் என்றும் அறிவித்தேன்.
21. இதன் காரணமாக யூதர்கள் கோவிலில் என்னைக் கைது செய்து கொல்ல முயன்றார்கள்.
22. ஆயினும், கடவுளின் உதவிபெற்று, இந்நாள் வரை இறைவாக்கினரும் மோசேயும் நடக்கவிருப்பதாகக் கூறியதையே நானும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சான்றாகக் கூறி வருகிறேன்.
23. அதாவது, மெசியா துன்பப்படுவார்; எனினும், இறந்த அவர்முதலில் உயிர்த்தெழுந்து நம் மக்களும் பிற இனத்தாரும் ஒளி பெறுவர் என அவர்களுக்கு அறிவிப்பார் என்று அவர்கள் கூறியதையே நானும் கூறி வருகிறேன்.”PE
24. {அகிரிப்பா நம்பிக்கை கொள்ளுமாறு பவுல் வேண்டுதல்} PS இவ்வாறு, பவுல் தம் நிலையை விளக்கிக் கொண்டிருந்தபோது, பெஸ்து உரத்த குரலில், “பவுலே! உனக்குப் பித்துப் பிடித்துவிட்டது; அதிகப்படிப்பு உன்னைப் பைத்தியக்காரனாக மாற்றிவிட்டது” என்றார். * எசா 42:6; 49:6.
25. அதற்குப் பவுல், “மாண்புமிகு பெஸ்துவே! எனக்குப் பித்துப் பிடிக்கவில்லை. நான் உண்மையோடும் அறிவுத்தெளிவோடும் பேசுகிறேன்.
26. அரசர் இவற்றை அறிவார். ஆகவே, நான் துணிவோடு அவர்முன் பேசுகின்றேன். இவற்றில் எதுவும் அவரது கவனத்தில் படாமல் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. ஏனெனில், இவை ஏதோ ஒரு மூலையில் நடந்தவையல்ல.
27. அகிரிப்பா அரசே, இறைவாக்கினர் கூறியவற்றை நம்புகிறீரா? நீர் நம்புகிறீர் என்பது எனக்குத் தெரியும்” என்றார்.
28. அகிரிப்பா பவுலை நோக்கி, “இவ்வளவு குறுகிய காலத்துக்குள் என்னைக் கிறிஸ்தவனாக்கி விடலாம் என நம்புகிறீரா?” என்றார்.
29. அதற்குப் பவுல், “குறுகிய காலத்திலாயிருந்தாலும் சரி, நெடுங்காலத்திலாயிருந்தாலும் சரி, நீர் மட்டுமல்ல, இன்று நான் கூறுவதைக் கேட்கிற அனைவரும் என்னைப் போலாக வேண்டும்; ஆனால், இந்த விலங்குகள் மட்டும் உங்களுக்கு வேண்டாம்; இதுவே கடவுளிடம் எனது வேண்டுதல்” என்றார்.
30. பின்பு அரசரும் ஆளுநரும் பெர்னிக்கியும் அவர்களோடு அமர்ந்திருந்தவர்களும் எழுந்தார்கள்.
31. அவர்கள் அங்கிருந்து சென்றபோது, “இவர் மரண தண்டனைக்கோ சிறைத் தண்டனைக்கோ உரிய குற்றம் எதையும் செய்யவில்லையே” என ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
32. அகிரிப்பா பெஸ்துவிடம், “இவர் சீசரே தம்மை விசாரிக்க வேண்டும் என்று கேட்டிராவிட்டால் இவரை விடுவித்திருக்கலாம்” என்று கூறினார்.PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×