Bible Books

:

1. {வழிபாட்டிற்கான ஒரே இடம்} PS மண்ணில் வாழும் நாளெல்லாம், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளுமாறு, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் கவனமாய்ப் பின்பற்ற வேண்டிய நியமங்களும் முறைமைகளும் இவையே:
2. நீங்கள் விரட்டியடிக்கப்போகும் மக்களினங்கள் தங்கள் தெய்வங்களுக்கு, உயர்ந்த மலைகளின்மீதும், குன்றுகளின் மீதும், பசுமையான மரங்களின் மீதும், ஊழியம் செய்த எல்லா இடங்களையும் முற்றிலும் அழித்து விடுங்கள்.
3. அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத்தூண்களை நொறுக்கி, அவர்களின் அசேராக் கம்பங்களைத் தீயில் சுட்டெரித்து, அவர்களின் கைவினையான தெய்வங்களின் சிலைகளை உடைத்து, அவர்களின் பெயர் அவ்விடங்களில் இல்லாது ஒழியுங்கள்.
4. ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அவ்விதம் செய்யாதீர்கள். * இச 7:5
5. ஆண்டவராகிய கடவுள் தம் பெயர் விளங்கவும், அங்கே குடியமரவும், உங்கள் எல்லாக் குலங்களிலிருந்து தெரிந்தெடுக்கும் இடத்தையே நீங்களும் நாடி அங்கே செல்லுங்கள்.
6. உங்கள் எரி பலிகளையும், மற்றப் பலிகளையும், பத்திலொரு பங்கையும், அர்ப்பணக் காணிக்கைகளையும், நேர்ச்சைக் காணிக்கைகளையும் தன்னார்வப் பலிகளையும், ஆடுமாடுகளின் தலையீற்றையும் அங்கே கொண்டு வாருங்கள்.
7. அங்கே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்பீர்கள். உங்கள் உழைப்பின் பயனும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரால் ஆசி பெற்றதுமாகிய எல்லாவற்றுக்காகவும் நீங்களும் உங்கள் வீட்டார் அனைவரும் மகிழ்வீர்கள்.
8. இந்த நாள்களில் இங்கே நாம் செய்வது போல ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனத் தோன்றுவதைச் செய்ய வேண்டாம்.
9. ஏனெனில், உங்கள் ஆண்டவராகிய கடவுள் கொடுக்கப்போகும் உரிமைச் சொத்துக்கும் ஓய்வுக்கும் இன்னும் நீங்கள் போகவில்லை.
10. ஆனால், நீங்கள் யோர்தானைக் கடந்து சென்று, உங்கள் ஆண்டவராகிய கடவுள் உரிமையாகத் தருகின்ற நாட்டில் குடியமரும்போது, நீங்கள் அச்சமின்றி வாழும்பொருட்டு, உங்களைச் சுற்றிலுமுள்ள உங்கள் பகைவர் அனைவரிடமிருந்தும் உங்களுக்கு அவர் ஓய்வு தரும்போது,
11. அவர்தம் பெயர் விளங்குமாறு அவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்கு நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாவற்றையும் கொண்டு செல்வீர்கள். உங்கள் எரி பலிகளையும், மற்றப் பலிகளையும், பத்திலொரு பங்கையும், அர்ப்பணக் காணிக்கைகளையும், ஆண்டவருக்கு நேர்ந்துகொண்ட சிறந்த நேர்ச்சைக் காணிக்கைகள் அனைத்தையும் கொண்டு செல்வீர்கள்.
12. நீங்களும், உங்கள் புதல்வரும், உங்கள் புதல்வியரும், அடிமைகளும், அடிமைப் பெண்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன் அகமகிழ்வீர்களாக! தங்களுக்கெனத் தனிப்பங்கோ உரிமைச் சொத்தோ இல்லாத நிலையில், உங்கள் நகர்களில் உள்ள லேவியரும் அவ்விதமே மகிழ்வார்களாக!
13. கண்ட இடமெல்லாம் உங்கள் எரி பலிகளைச் செலுத்தாதபடி கவனமாய் இருங்கள்.
14. ஆனால், உங்கள் குலங்களுள் ஒன்றிலிருந்து ஆண்டவர் ஓர் இடத்தைத் தெரிந்தெடுப்பார். அங்கே நீங்கள் உங்கள் எரி பலிகளைச் செலுத்துங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாவற்றையும் அங்கே நிறைவேற்றுங்கள்.PE
15. PS ஆயினும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு அளித்துள்ள ஆசிக்கு ஏற்ப, உங்கள் நகர்களில், உங்கள் விருப்பப்படியே விலங்குகளை அடித்து உண்ணலாம். தீட்டுள்ளவனும் தீட்டற்றவனும் அவற்றிலிருந்து உண்ணலாம். பெண் மானையும் கலைமானையும் உண்பதுபோல் உண்ணலாம்.
16. இரத்தத்தை மட்டும் அருந்த வேண்டாம்; தண்ணீரை ஊற்றுவதுபோல அதைத் தரையில் ஊற்றி விடுங்கள்.
17. உங்கள் விளைச்சலின் பத்திலொரு பங்கிலிருந்தோ, திராட்சை இரசத்திலிருந்தோ, ஆடு மாடுகளின் தலையீற்றுக்களிலிருந்தோ, நீங்கள் நேர்ந்துகொண்ட சிறந்த நேர்ச்சைக் காணிக்கைகளிலிருந்தோ, உங்கள் தன்னார்வப் பலிகளிலிருந்தோ, உங்கள் அர்ப்பணப் பலிகளிலிருந்தோ எதையும் எடுத்து உங்களது நகரில் உண்ண வேண்டாம். * தொநூ 9:4; லேவி 7:26-27; 17:10-14; 19:26; இச 15:23
18. ஆனால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்தில் நீங்கள் அதை அவர் முன்னிலையில் உண்ணுங்கள். நீங்களும், உங்கள் மகன், மகள், அடிமை, அடிமைப்பெண் ஆகியோரும் உங்கள் நகர்களில் உள்ள லேவியரும் உண்ணுங்கள். நீங்கள் செய்யும் அனைத்திலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரில் அகமகிழுங்கள்!
19. உங்கள் நாட்டில் வாழும் நாளெல்லாம் லேவியரைக் கைவிடாதபடி கவனமாய் இருங்கள்.PE
20. PS உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தபடி உங்களது எல்லையை விரிவுபடுத்தும் போது நீங்கள் இறைச்சி உண்ண விரும்பி, “நான் இறைச்சி உண்பேன்” என்றால் நீங்கள் விரும்பிய அளவு உண்ணலாம்.
21. அவர்தம் பெயர் விளங்குமாறு ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடம் உங்களுக்கு வெகு தொலைவில் இருந்தால், அவர் உங்களுக்குக் கொடுத்துள்ள ஆட்டையோ மாட்டையோ நான் உங்களுக்கு விதித்துள்ளபடி, உங்கள் நகரிலேயே அடித்து நீங்கள் விரும்புவதுபோல் உண்ணலாம்.
22. பிணைமானையும் கலைமானையும் உண்பதுபோல உண்ணலாம். தீட்டுள்ளவர்களும் தீட்டற்றவர்களும் உண்ணலாம்.
23. இரத்தத்தை அருந்தாதபடி மட்டும் கவனமாய் இருங்கள். ஏனெனில், இரத்தமே உயிர். சதையோடு உயிரையும் சேர்த்து உண்ணாதீர்கள்.
24. இரத்தத்தை நீங்கள் அருந்த வேண்டாம். தண்ணீரை ஊற்றுவதுபோல அதைத் தரையில் ஊற்றிவிடுங்கள். * லேவி 17:10-14
25. நீங்கள் அதை அருந்தலாகாது. அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப்பின் உங்கள் மக்களுக்கும் எல்லாம் நலமாகும். ஆண்டவரின் பார்வையில் நீங்கள் நேரியன செய்தவர்கள் ஆவீர்கள். * லேவி 17:10-14
26. உங்களிடமிருந்து வரவேண்டிய புனிதப் பொருள்களையும் உங்களது நேர்ச்சைக் காணிக்கைகளையும் எடுத்துக்கொண்டு ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்லுங்கள்.
27. அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பீடத்தில் உங்கள் எரிபலிகளைச் செலுத்துங்கள். சதையோடும் இரத்தத்தோடும் செலுத்துங்கள். உங்கள் பலிப்பொருள்களின் இரத்தத்தை நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பீடத்திலே ஊற்றி விடுங்கள். ஆனால், இறைச்சியை நீங்கள் உண்ணலாம்.
28. நான் உங்களுக்கு விதிக்கும் இக்கட்டளைகளை எல்லாம் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் நீங்கள் நலமானதையும் நேரியதையும் செய்தால் உங்களுக்கும் உங்களுக்குப்பின் உங்கள் பிள்ளைகளுக்கும் என்றும் எல்லாம் நலமாகும்.PE
29. {சிலைவழிபாடு குறித்து எச்சரித்தல்} PS நீங்கள் சென்று விரட்டியடிக்கும் மக்களினங்களை உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வேரறுப்பார். நீங்கள் அவர்களை விரட்டியடித்துவிட்டு அவர்களது நாட்டில் குடியேறுங்கள்.
30. உங்கள் முன்னிலையில் அவர்கள் முறியடிக்கப்பட்டபின் அவர்களைப் பின்பற்றி வஞ்சிக்கப்படாதபடியும், ‘இந்த மக்களினங்கள் தங்கள் தெய்வங்களுக்கு எப்படி ஊழியம் செய்தனவோ அவ்விதமே நாங்களும் செய்வோம்,’ என்று சொல்லி அவர்களின் தெய்வங்களைப்பற்றிக் கேட்டறியாதபடியும் கவனமாய் இருங்கள்.
31. உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அவர்களது முறைப்படி செய்யவேண்டாம். ஏனெனில், ஆண்டவர் வெறுக்கும் எல்லா அருவருப்பானவற்றையும் அவர்களுடைய தெய்வங்களுக்கு அவர்கள் செய்தார்கள். தங்கள் புதல்வரையும், புதல்வியரையும் கூட அவர்களின் தெய்வங்களுக்கென நெருப்பில் சுட்டெரித்தார்கள்.
32. நான் உங்களுக்கு விதிக்கிற யாவற்றையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இருங்கள். அவற்றோடு எதையும் கூட்டவோ அவற்றிலிருந்து எதையும் குறைக்கவோ வேண்டாம்.PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×