Bible Books

:

1. PS உங்கள் நடுவில் ஓர் இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவன் தோன்றி உங்களிடையே ஓர் அடையாளம் அல்லது அருஞ்செயல் காட்டுவேன் என்று சொல்லலாம்.
2. அவன் சொல்வதுபோல் அடையாளம் அல்லது அருஞ்செயல் நடக்கலாம். அதன்பின் அவன், ‘வாருங்கள், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் புரிவோம்’ என்று கூறலாம். அவை நீங்கள் அறியாதவை.
3. அந்த இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவனின் சொற்களுக்குச் செவி கொடுக்க வேண்டாம். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது நீங்கள் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அன்பு கூர்கின்றீர்களா என்று அவர் உங்களைச் சோதிக்கின்றார்.
4. உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றி அவருக்கு அஞ்சி, அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவர் குரலுக்குக் கீழ்ப்படிந்து, அவருக்கு ஊழியம் செய்து அவரைப் பற்றிக் கொள்ளுங்கள். * இச 7:5
5. ஆனால், அந்த இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவன் கொல்லப்பட வேண்டும். ஏனெனில், எகிப்து நாட்டிலிருந்து, உங்களை அழைத்துவந்த, அடிமைத்தனத்தின் வீட்டிலிருந்து உங்களை விடுவித்த, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராக, அவர் உங்களை வாழச் சொன்ன வழிகளிலிருந்து கலகம் செய்ய அவன் தூண்டினான். இத்தகைய தீமையை உங்களிடமிருந்து கருவறுங்கள்.PE
6. PS உன்தாயின் மகனாகிய உன் சகோதரன், உன் மகன், மகள், அன்பு மனைவி, ஆருயிர் நண்பன் ஆகியோருள் எவராவது, நீயும் உன் மூதாதையரும் அறிந்திராத வேற்றுத் தெய்வங்களிடம் சென்று அவற்றுக்கு ஊழியம் செய்வோம், என்று இரகசியமாக, நயவஞ்சகமாகக் கூறலாம்.
7. உன்னைச் சுற்றிலும், உனக்கு அருகிலோ தொலையிலோ உலகின் ஒரு முனை முதல் மறுமுனை வரையிலோ உள்ள மக்களினத்தாரின் சில தெய்வங்களைப்பற்றி உன்னிடம் கூறலாம்.
8. நீ அவனுக்கு இணங்கவோ, செவிகொடுக்கவோ, இரக்கம் காட்டவோ வேண்டாம். அவனைத் தப்பவிடவோ ஒளித்துவைக்கவோ வேண்டாம்.
9. மாறாக, நீ அவனைக் கொல்வாய். முதலில் உன் கையும், பின்னர் மக்கள் அனைவரின் கைகளும் அவனைக் கொல்வதற்காக அவன்மீது படட்டும்.
10. அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளிக் கொணர்ந்த உன் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து உன்னை விலக்கிவிட அவன் முயற்சி செய்த காரணத்தால் நீ அவனைக் கல்லால் எறிந்து கொல்வாய்.
11. இஸ்ரயேல் முழுவதும் இதைக் கேட்டு அஞ்சட்டும். அதனிடையே இதுபோன்ற தீயசெயல்கள் இனி ஒருபோதும் நடவாதிருக்கட்டும்.PE
12. PS நீங்கள் குடியேறும்படி உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கும் நகர் ஒன்றினுள்
13. சில கயவர் வந்து அந்நகரின் மக்களில் சிலரிடம், ‘வாருங்கள் வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் புரிவோம்’ என்று கூறிச் சிலரைத் தவறான வழியில் இட்டுச் சென்றதாக நீங்கள் கேள்விப்படலாம். அவற்றை நீங்கள் அறியீர்கள்.
14. நீங்கள் நன்றாக விசாரித்து, ஆராய்ந்து, கவனமுடன் கேட்டுத் தெளிந்தபின், உண்மையாகவும் உறுதியாகவும் உங்களிடையே இத்தகைய அருவருக்கத்தக்க செயல் நடந்தது என்று அறிய வரலாம்.
15. அப்பொழுது நீங்கள் அந்த நகரின் மக்களைக் கருக்கு வாய்ந்த வாளால் வெட்டுங்கள். அந்நகரிலுள்ள எல்லோரையும் கால்நடைகளையும் வாளுக்கு இரையாக்குங்கள். அதை முற்றிலும் அழித்துவிடுங்கள்.
16. அந்நகரில் உள்ள பொருள்களை எல்லாம் அதன் நாற்சந்தியில் ஒன்று சேர்த்து நகரையும் பொருள்களையும் தீயால் சுட்டெரித்து உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலி ஆக்குங்கள். அந்நகர் ஒரு மேடாக என்றும் இருக்கும். அது மீண்டும் கட்டி எழுப்பப்படாது.
17. அழிவுக்குரிய அப்பொருள் எதையும் உங்கள் கை தொடவேண்டாம். அதனால் ஆண்டவர் தமது கடுஞ்சினத்திலிருந்து மனம்மாறி, பேரிரக்கம் காட்டுவார். உங்கள் மூதாதையருக்கு அவர் வாக்களித்தபடி உங்களைப் பலுகச் செய்வார். * தொநூ 9:4; லேவி 7:26-27; 17:10-14; 19:26; இச 15:23
18. நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் அனைத்துக் கட்டளைகளையும் நான் இன்று உங்களுக்கு விதித்தபடி கடைப்பிடியுங்கள். அவர் பார்வையில் நேரியதைச் செய்யுங்கள்!PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×