Bible Books

:

1. {தலைமகன் அர்ப்பணம்} PS ஆண்டவர் மோசேயை நோக்கி உரைத்தது;
2. “தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்; இஸ்ரயேல் மக்களிடையே மனிதரிலும் கால்நடைகளிலும் கருப்பையைத் திறக்கும் எல்லாத் தலைப்பேறும் எனக்குரியவை” என்றார்.PE
3. {புளிப்பற்ற அப்ப விழா} PS மோசே மக்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து நீங்கள் வெளியேறிச் சென்ற இந்நாளை நினைவு கூருங்கள். இந்நாளில்தான் ஆண்டவர் தம் கைவன்மையால் உங்களை இங்கிருந்து வெளியேறவைத்தார். நீங்கள் புளித்த அப்பம் உண்ணலாகாது. * எண் 3:13; லூக் 2:23
4. ஆபிபு மாதத்தின் இந்த நாளில் நீங்கள் வெளியேறிச் செல்கிறீர்கள்.
5. கானானியர், இத்தியர், எமோரியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டை ஆண்டவர் உனக்குத் தருவதாக உன் மூதாதையருக்கு வாக்களித்திருந்தார். பாலும் தேனும் பொழியும் அந்த நாட்டுக்கு அவர் உன்னை அழைத்துச் சென்றபின், இதே மாதத்தில் நீ இவ்வழிபாட்டைச் செய்வாயாக.
6. ஏழுநாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ணவேண்டும். ஏழாம் நாளை ‘ஆண்டவரின் விழா’வாகக் கொண்டாட வேண்டும்.
7. ஏழு நாள்கள் நீ புளிப்பற்ற அப்பம் உண்ண வேண்டும். புளித்த அப்பம் உன்னிடம் காணப்படக்கூடாது. உன் எல்லைக்குள் எங்குமே புளித்த மாவு காணப்படக்கூடாது.
8. அந்நாளில் நீ உன் மகனிடம், ‘நான் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது ஆண்டவர் எனக்குச் செய்ததை முன்னிட்டே இந்த வழிபாடு” என்று சொல்.
9. ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும். ஏனெனில், ஆண்டவர் தம் கைவன்மையால் எகிப்திலிருந்து உன்னை வெளியேறச் செய்தார்.
10. எனவே, ஆண்டுதோறும் இந்த நியமத்தை அதன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும்.PE
11. {தலைப்பேறு அர்ப்பணம்} PS உனக்கும் உன் மூதாதையருக்கும் ஆண்டவர் வாக்களித்தபடியே, அவர் கானானியரின் நாட்டிற்குள் உன்னை அழைத்துச் சென்று அதை உனக்குக் கொடுக்கும்போது,
12. கருப்பையைத் திறக்கும் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கென ஒப்புக் கொடுக்கப்பட வேண்டும். உன் கால் நடைகளில் ஆண் தலையீற்று அனைத்தும் ஆண்டவருக்கே உரியது.
13. ஓர் ஆட்டைக் கொடுத்துக் கழுதையின் ஆண் தலையீற்றை மீட்பாய்; அதை நீ மீட்கவில்லையெனில் அதன் கழுத்தை முறித்துவிடு. உன் ஆண் பிள்ளைகளுள் எல்லாத் தலைப்பேற்றையும் நீ மீட்க வேண்டும். * விப 34:19-20; லூக் 2:23
14. ‘இதன் பொருள் என்ன’ என்று பிற்காலத்தில் உன் மகன் உன்னிடம் கேட்டால், நீ அவனை நோக்கி, ‘ஆண்டவர் தம் கைவன்மையால் அடிமை வீடாகிய எகிப்திலிருந்து எம்மை வெளியேறச் செய்தார்.
15. பார்வோன் மனமிறுகி எம்மைப் போகவிட மறுத்தபோது, எகிப்து நாட்டிலுள்ள மனிதருள் தலைப்பேறு தொடங்கி கால்நடைகள் தலையீற்று ஈறாக ஆண்தலைப்பிறப்பு அனைத்தையும் ஆண்டவர் சாகடித்தார். எனவே, கருப்பை திறக்கும் ஆண்பிறப்பு அனைத்தையும் நான் ஆண்டவருக்குப் பலியிட்டு என் ஆண்பிள்ளைகளுள் தலைப்பேறு அனைத்தையும் மீட்கிறேன்’ என்று சொல்.
16. இது உன் கையில் அடையாளமாகவும் உன் கண்களுக்கிடையில் சீட்டுப்பட்டமாகவும் அமையட்டும். ஏனெனில், தம் கைவன்மையால் ஆண்டவர் எம்மை எகிப்திலிருந்து வெளியேற வைத்தார்.PE
17. {மேகத்தூண், நெருப்புத்தூண்} PS மக்களைப் பார்வோன் அனுப்பியபோது, பெலிஸ்தியர் நாட்டு நெடுஞ்சாலைதான் நேர்வழி எனினும், அதன் வழியாகக் கடவுள் அவர்களை நடத்திச் செல்லவில்லை. ஏனெனில், “போரைக் கண்டு இம்மக்கள் மனம் தளர்ந்து எகிப்திற்கே திரும்பிவிடுவார்கள்” என்றார் கடவுள்.
18. கடவுள் மக்களைப் பாலைநிலச் சுற்று வழியாக செங்கடலுக்குப் போகச் செய்தார். இஸ்ரயேல் மக்கள் படை அணிபோல எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றனர்.
19. மேலும், யோசேப்பின் எலும்புகளை மோசே தம்மோடு எடுத்துச் சென்றார். ஏனெனில், “கடவுள் உங்களைச் சந்திக்கும்போது இங்கிருந்து என் எலும்புகளை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்” என்று யோசேப்பு இஸ்ரயேல் மக்களிடம் கூறி, அதுபற்றி அவர்களிடம் உறுதிமொழி பெற்றிருந்தார்.
20. அவர்கள் சுக்கோத்திலிருந்து பயணமாகிப் பாலைநிலத்தின் எல்லையோரமாயுள்ள ஏத்தாமில் கூடாரம் அடித்தனர். * தொநூ 50:25; யோசு 24:32.
21. ஆண்டவர், பகலில் அவர்களை வழிநடத்த மேகத் தூணிலும், இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார். பகலிலும் இரவிலும் அவர்கள் பயணம் செய்வதற்காக அவர் அவர்கள்முன் சென்று கொண்டிருந்தார்.
22. பகலில் மேகத் தூணும் இரவில் நெருப்புத் தூணும் மக்களைவிட்டு அகலவேயில்லை.PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×