Bible Books

:
-

1. {உடைந்த சாடியின் அடையாளம்} PS ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ சென்று குயவன் செய்த மண்கலயம் ஒன்றை வாங்கு. மக்களுள் மூப்பர் சிலரையும் குருக்களுள் முதியோர் சிலரையும் கூட்டிக் கொண்டு,
2. மண்கல உடைசல் வாயில் அருகிலுள்ள பென்இன்னோம் பள்ளத்தாக்கிற்குப் போ. அங்கு நான் உன்னிடம் சொல்லப்போகும் சொற்களை அறிவி.
3. நீ சொல்ல வேண்டியது: “யூதாவின் அரசர்களே, எருசலேம் வாழ் மக்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: கேட்போர் ஒவ்வொருவரின் காதுகள் நடு நடுங்கும் அளவுக்கு இந்த இடத்தின் மீது தீமை வரச் செய்வேன். * 2 அர 23:10; எரே 7:30-32; 32:34-35
4. அவர்கள் என்னைப் புறக்கணித்தனர்; இந்த இடத்தைத் தீட்டுப்படுத்தினர். தாங்களோ, தங்கள் மூதாதையரோ, யூதாவின் அரசர்களோ அறிந்திராத வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். மாசற்றோரின் இரத்தத்தால் இவ்விடத்தை நிரப்பினர்.
5. தங்கள் புதல்வர்களைத் தீயில் சுட்டெரித்துப் பாகாலுக்கு எரிபலி கொடுக்கும்படி, அந்தத் தெய்வத்திற்குத் தொழுகை மேடு எழுப்பினர். இதனை நான் கட்டளையிடவில்லை; இதுபற்றி நான் பேசவுமில்லை; இது என் எண்ணத்தில்கூட எழவில்லை.
6. ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்; இதோ நாள்கள் வருகின்றன! அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது. மாறாகப் ‘படுகொலைப் பள்ளத்தாக்கு’ என்று பெயர் பெறும். * லேவி 18:21.
7. யூதா, எருசலேமின் திட்டங்களை நான் இவ்விடத்தில் முறியடிப்பேன். அவர்கள் பகைவர் முன்னிலையிலும் அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுவோர் முன்னிலையிலும் அவர்களை வாளால் வீழ்த்துவேன். அவர்களின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் உணவாகக் கொடுப்பேன்.
8. இந்நகர் கொடூரமாய்க் காட்சியளிக்கும். அது ஏளனத்துக்கு உள்ளாகும். அவ்வழியே செல்லும் ஒவ்வொருவனும் திகிலுறுவான்; அதன் காயங்களை எண்ணி ஏளனம் செய்வான்.
9. தங்கள் புதல்வர் புதல்வியரின் சதையை அவர்கள் உண்ணுமாறு செய்வேன். அவர்கள் பகைவர்களும் அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுவோரும் அவர்களை முற்றுகையிட்டு நெருக்கி வருத்தும்போது, அவர்கள் ஒருவர் ஒருவருடைய சதையை உண்பார்கள்.
10. அப்போது உன்னோடு வந்திருந்தவர்களின் முன்னிலையில் அந்த மண்கலயத்தை உடைத்துவிட்டு,
11. நீ அவர்களுக்குக் கூற வேண்டியது; படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; குயவனின் உடைக்கப்பட்ட மண் கலயத்தை மீண்டும் ஒட்டவைக்க முடியாது; அதுபோலவே நான் இந்த மக்களையும் இந்த நகரையும் தகர்த்தெறிவேன். இறந்தோரைப் புதைக்க வேறு இடம் இல்லாமையால் தோபேத்திலேயே புதைப்பர்.
12. ஆண்டவர் கூறுவது: எருசலேமுக்கும் அதில் குடியிருப்போருக்கும் எதிராக இவ்வாறு செய்வேன். அந்நகரைத் தோபேத்தாகவே மாற்றிவிடுவேன்.
13. எருசலேமின் வீடுகளும், யூதா அரசர்களின் மாளிகைகளும், எந்த வீட்டு மேல்தளங்களில் வானத்துப் படைகளுக்குத் தூபம் காட்டினார்களோ, வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்கள் படைத்தார்களோ, அந்த வீடுகள் எல்லாம் தோபேத்தைப் போலத் தீட்டுப்பட்டவையாகும்'’.
14. இறைவாக்கு உரைக்க ஆண்டவரால் தோபேத்துக்கு அனுப்பப் பெற்றிருந்த எரேமியா அங்கிருந்து திரும்பி வந்து, திருக்கோவில் முற்றத்தில் நின்று கொண்டு மக்கள் அனைவருக்கும் கூறியது:
15. “இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான் இந்நகருக்கு எதிராகக் கூறியுள்ள அனைத்துத் தீமைகளையும் இந்நகர் மேலும் இதனைச் சுற்றியுள்ள நகர்கள்மேலும் விழச் செய்வேன். ஏனெனில் அவர்கள் என் சொற்களைக் கேளாமல் முரட்டுப் பிடிவாதம் செய்தார்கள்.PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×